50 மணி நேர தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு  ! கடந்த நாட்களில் அரங்கேறிய நாடகங்கள் !

Published By: Vishnu

13 Jul, 2022 | 10:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மக்களின் ஆதரவை இழந்துள்ள நிலையில், பதவி விலகுமாறு மக்கள் வலியுறுத்தும் பின்னணியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனைவி, பாதுகாப்பு உத்தியோகத்தருடன் நாட்டிலிருந்து 13 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை  இரகசியமாக வெளியேறினார். 

விமானப்படையின் அன்டனோ 32 ( ஏ.என். 32) ரக விமானத்தில் மாலைத் தீவின்  தலைனகரான மாலேவுக்கு  அவர் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் விங் கொமாண்டர் துஷான் விஜேசிங்க அறிக்கை ஊடாக உறுதி செய்தார்.

அதன்படி கடந்த ஜூலை 9 ஆம் திகதி முதல் சுமார் 50 மணி நேரம் தனது சொந்த நாட்டின் மக்கள் முன் தோன்ற முடியாது தலைமறைவாக,  முப்படை முகாம்களுக்குள் காலத்தை கழித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  , தலைமறைவு வாழ்வு நிறைவுக்கு வந்துள்ளது.

9 ஆம் திகதி போராட்டம் :

கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - பிரதமர் ரணில் ( தற்போதைய பதில் ஜனாதிபதி) ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி பல இலட்சம் மக்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் கொள்ளுபிட்டி அலரி மாளிகையை சுற்றி வளைத்து போராட்டம்  ஆரம்பித்தனர்.

மாளிகையிலிருந்த ஜனாதிபதி :

போராட்டம் அன்றைய தினம் காலை ஆரம்பிக்கப்படும் போதும்  ஜனாதிபதிபதி கோட்டாபய ஜனாதிபதி மாளிகையில் இருந்துள்ளார். அன்றைய தினம் முற்பகல் 10.30 மணிக்கும்  நண்பகல் 12.00 மணிக்கும் இடையிலேயே அவர் ஜனாதிபதி மாலிகையை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பரவவிடப்பட்ட வதந்தியும் பாதுகாப்பு உக்தியும் :

ஆனால்,  ஜூலை 9 ஆம் திகதிக்கு முன்னர், அதாவது 8 ஆம் திகதியே ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் ஒருவர் பத்தரமுல்லை - அங்குரேகொட  முப்படை தலைமையகத்துக்கு சென்று, ஜனாதிபதி கோட்டாபயவை பாதுகாப்புக்காக அங்கு அழைத்து வந்துள்ளதாக தகவல் ஒன்றினை பரவச் செய்து அனைவரின் கவனத்தையும்  திசை திருப்ப செய்துள்ளார்.

அவ்வாறு இருக்கையிலேயே, ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் செத்தம் வீதி, வங்கு மாவத்தை உள்ளிட்ட அனைத்து வீதிகளும் நிரந்தர வீதித் தடைகளைக் கொண்டு  மூடப்பட்டு, இராணுவம் பொலிஸ், பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு போடப்பட்டது.

இராணுவத்தை நம்பிய பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலர் :

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு  அனுப்பிய கடிதம் மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன  ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைய,  அமைதிப் போராட்டத்தை  கலைக்க இராணுவம் 9 ஆம் திகதி அழைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குக்கு பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் :

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி மாளிகையில் 9 ஆம் திகதியாகும் போதும் தங்கியிருந்தமையினால்,  8 ஆம் திகதி இரவு முதல்  கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உயர் மட்ட அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும் பொலிஸ் உயரதிகாரிகள் பலர் அதனை செய்ய வேண்டாம்  என பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன்  மேல் மட்ட அழுத்தத்தால் அந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது.

காலையில் பொலிஸ் மா அதிபரைச் சந்தித்த ஜனாதிபதி :

இந் நிலையில்,  போராட்ட தினமான ஜூலை 9 ஆம் திகதி  காலை 6.30 மணியாகும் போதும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி  மாளிகையில் இருந்துள்ளார். அதர்கான ஆதாரம் அப்போது பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவை அவர்  அங்கு வைத்து சந்தித்துள்ளமையாகும்.

ஜாலியவுடன் சென்ற பொலிஸ் மா அதிபர் :

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு ஜனாதிபதியை சந்திக்க செல்லும் போது, அவருக்கு மிக விசுவாசமான பொலிஸ் திணைக்களத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்னவும்  உடன் சென்றுள்ளார்.

இதன்போது நடந்த கலந்துரையாடலில், ஆர்ப்பாட்டக் காரர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவர் என்வும் கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியேனும் அதனை அவர்கள் செய்வர் எனவும் ஜனாதிபதி நம்பிக்கையுடன் இருந்துள்ளார்.

தரைப் படையை நம்பாமல் கடற்படையிடம்  தஞ்சம் புகுந்த கோட்டா:

இந் நிலையில் ஜனாதிபதி மாளிகையின்  பாதுகாப்பு ஜூலை 9 ஆம் திகதியாகும் போதும் இலங்கை தரைப் படையின் மேஜர் ஜெனரல் ஒருவரின் கீழ் இருந்தது. அன்றைய தினம்  முற்பகல் வேளையில், மாளிகையை  போராட்டக் காரர்கள் இலட்சக் கணக்கில் முற்றுகையிட ஜனாதிபதி தரைப் படையின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாக அறிய முடிகிறது,  அதன் படி உடனடியாக  கடற்படை தளபதியை  ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

கடற்படை தளபதியுடன் ஒரே காரில் தப்பியோட்டம் :

இந் நிலையில் ஜூலை 9 ஆம் திகதி முற்பகல் 10. 30 மணிக்கும்  நண்பகல் 12.00 மணிக்கும் இடையே ஜனாதிபதி மாளிகையின் முன்பாக உள்ள மணிக்கூட்டு கோபுரத்தை  அண்மித்த பிரதான வாயில் திசையிலிருந்து தொடர்ச்சியாக கண்ணீர்ப் புகைப் பிரயோகம் பாதுகாப்பு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே ஜனாதிபதி  மாளிகையிலிருந்து ஜனாதிபதி கோட்டா, கடற்படை தளபதியின் காரில் அங்கிருந்து   தப்பி, கடற்படை தளபதியின் உத்தியோகபூர்வ  தங்கு விடுதிக்கு ( ஜனாதிபதி மாளிகையை ஒட்டியதாக  கடற்படை தலைமையகத்தில் உள்ளது) சென்றுள்ளார். அங்கு  இருவரும் தேநீர் அருந்தியுள்ளனர்.

கப்பலில் கொழும்பை விட்டு ஓட்டம் :

இந் நிலையில் கடற்படை தளபதியின் உத்தியோகபூர்வ அறையிலிருந்து, கடற்படை தலைமையகமான - கோட்டை ரங்கள முகாமிலிருந்து  சிதுரல, கஜபாகு ஆகிய கப்பல்கள்  திருகோணமலையை நோக்கி பயணத்தை ஆரம்பித்த நிலையில், அதில் ஜனாதிபதி கோட்டாபய திருகோணமலையின்  கடற்படை பொறுப்பிலுள்ள தீவு நோக்கி சென்றுள்ளார்.

பல பொருட்களும் எடுத்து செல்லப்பட்டன :

இதன்போது ஜனாதிபதி கப்பலுக்குள் இருக்க, ஜனாதிபதி மாளிகையின் முக்கிய அதிகாரிகள் ஜனாதிபதியின் பல ஆவணங்கள், பொருட்களுடன் துறைமுகம் ஊடாக குறித்த கப்பலில் ஏரியுள்ளனர். அந்த வீடியோக்களே சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

திருமலையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு :

இந் நிலையில் திருகோண மலைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டா, அங்கு  கடற்படை முகாமுக்குள் இருந்துள்ளதுடன் மறு நாள் அதாவது ஜூலை 10 ஆம் திகதி விமானப்படையின் பெல் ரக ஹெலிகப்டரில் அங்கிருந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்துக்கு சென்றுள்ளார்.

9 ஆம் திகதியே தயார் செய்யப்பட்ட தங்கும் இடம் :

சமூக வலைத் தளங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள்  கடும் இராணுவ பாதுகாப்புடன் ஒரு வாகன தொடரணி செல்லும் வீடியோ வெளியாகி இருந்தது.

அது ராஜபக்ஷக்கள் வெளிநாடு செல்லும் வீடியோ எனவும் கூறப்பட்டது. எனினும் அது அவ்வாறான வீடியோ அல்ல. எனினும் ராஜபக்ஷக்களுடன் தொடர்புபட்ட வீடியோவே அது.

இந்தியா சென்றிருந்த பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சவேந்ர சில்வா, ஜூலை 9 ஆம் திகதியே நாடு திரும்பினார். இந் நிலையில் அவரது வாகனத் தொடரணியுடன் இணைந்ததாக முப்படை தளபதிகள்,  கட்டுநாயக்க விமானப்படை தலைமையகத்தில் ஜனாதிபதி கோட்டாவின் பாதுகாப்புக்காக சென்ற வாகன தொடரணியே அது என தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சில உடைமைகளும் எடுத்து செல்லப்பட்டதாக அறிய முடிகிறது.

இவ்வாறான நிலையிலேயே ஜூலை 10 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமானப்படை முகாமுக்கு வந்து அங்கு தங்கியிருந்துள்ளார்.

டுபாய் செல்லும் முயற்சி தோல்வி ;

இந் நிலையிலேயே  ஜூலை 10  ஆம் திகதி கோட்டா டுபாய் நோக்கி பயணிக்க இரு முறை எத்தனித்துள்ளார்.  அப்போது கடமையிலிருந்த குடிவரவு அதிகாரிகள்,  அவரை பொது மக்களோடு வரிசையில் வந்து முறைப்படி விமானத்தில் செல்ல முடியும் என அறிவித்த நிலையில், பொது மக்கள் முன் தோன்ற அவருக்கு இருந்த அச்சத்தினால் அவரால் அப்போது வெளிநாடு செல்ல முடியாமல் போயுள்ளது.

அமரிக்க விசா கோரிக்கை நிராகரிப்பு:

இவ்வாறான நிலையிலேயே, அமரிக்கா செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் வைத்த வீசா விண்ணப்பத்தை அமரிக்கா நிராகரித்தது.

எனினும் இது குறித்து அமரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் படி, வீசா குறித்த விடயங்கள் அந் நாட்டு சட்டப்படி இரகசிய ஆவணங்கள் என்பதால் அது குறித்து உத்தியோகபூர்வமாக கருத்துவெளியிட முடியாது என அறிவித்தது.

மத்தள ஊடாக தப்பிச் செல்ல முயற்சி :

இந் நிலையில் கட்டுநாயக்க விமானப்படை தலத்திலிருந்து வீரவில விமானப்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து மத்தளை விமான நிலையம்  ஊடாக அங்கிருந்து தனியார் ஜெட் விமானத்தில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் அந் நடவடிக்கையும் நேற்று முன் தினம் (12) சாத்தியப்படவில்லை.

அதன்படி  கட்டுநாயக்க விமானப் படை தளம் முதல் இரத்மலானை விமானப்படை தளம் வரை சென்றுள்ள கோட்டா பின்னர் கட்டுநாயக்கவுக்கே திரும்பியுள்ளார்.

மாலை தீவுக்கு தப்பிய கதை :

இவ்வாறான நிலையிலேயே, கட்டுநாயக்க விமான நிலையத்தை ஒட்டியதாக அமைந்துள்ள விமானப்படை தளத்தில் தனது மனைவி அயோமா ராஜபக்ஷ மற்றும் இரு பிரதான பாதுகாப்பு அதிகாரிகளுடன் தங்கியிருந்த  கோட்டாபய ராஜபக்ஷ மாலை தீவு நோக்கி இரகசியமாக நேற்று (13) அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளார்.

கோட்டாவுக்கு உதவி ரணில் :

ஜூலை 12 ஆம் திகதி  வரை கோட்டா நாட்டிலிருந்து வெளியேற எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நேற்று முன் தினம் ( 12) இரவு விஷேட தகவல் ஒன்றினை அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் அனுப்பியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, தான் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறும் வரை பதவியில் இருந்து விலகப் போவதில்லை என கூறியுள்ளார். இதனையடுத்தே மாலைத்தீவுக்கு தப்பிச் செல்வதற்கான வசதிகளை பிரதமர் ( பதில் ஜனாதிபதி தற்போது) ரணில் தலைமையிலான அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

அதன்படியே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பின்னர், விமானப்படை தளபதி ( கோட்டாவுக்கு மிக நெருக்கமானவர் ) எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரவின் கட்டளைக்கு அமைய,  குறூப் கெப்டன் வெலகெதர,  விங் கொமாண்டர் மல்லவ ஆரச்சி ஆகிய  விமானிகள் என்டனோ 32 ரக விமானத்தை செலுத்த கோட்டா மாலைத் தீவு நோக்கி தப்பிச் சென்றார்.

ஆவணங்கள் அருகே சென்று சரி பார்ப்பு :

கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் பிரகாரம், என்டனோ 32 விமானம் மாலை தீவு நோக்கி செல்ல முன்னர், விமானம் அருகே சென்றுள்ள குடிவரவு குடியகல்வு அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், ஆவணங்களை சரிபார்த்து உறுதிப் படுத்தியுள்ளனர்.

விமானப்படையின் விளக்கம் :

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ நாட்டிலிருந்து வௌியேறியமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு நோக்கி பயணிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விமானப்படை விமானமொன்று  நேற்று (13) அதிகாலை வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் பூரண அங்கீகாரத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு புறப்படுவதற்காக விமானமொன்று வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உதவியதா ?

இதேவேளை, ஜனாதிபதியின் இந்த பயணத்திற்கு இந்தியாவினால் சலுகைகள் வழங்கப்படுவதாக வௌியான தகவல்களை நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என குறித்த ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலை தீவில் வந்த குழப்பமும் நஷீடின் தலையீடும் :

எவ்வாறாயினும் இலங்கை விமானப்படை விமானத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருக்கின்றார் என அறிந்த மாலை தீவு அதிகாரிகள் விமானத்தை தறை இறக்க அனுமதியளிக்காதிருந்துள்ளனர். இதனால் கோட்டாவும் அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சுமார் ஒன்றரை மணி நேரம் விமானத்தில் காத்திருந்துள்ளனர். எவ்வாறாயினும் மாலை தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட் விடயத்தில் தலையீடு செய்து தரை இறக்குவதற்கான வேலைகலை செய்துள்ளார்.

மாலை தீவில் எதிர்ப்பு :

இந் நிலையில் மாலை தீவில் அதிகாலை 3.30 மனியளவில் தரையிறங்கிய கோட்டா உள்ளிட்டோருக்கு விமான நிலையத்திலிருந்தே எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. மிக மோசமான வார்த்தைகளைக் கொண்டு அங்கிருந்த இலங்கையர்கள் கோட்டாவை திட்டித் தீர்த்தனர்.

கோட்டா தங்கியுள்ள இடம் :

ஏற்கனவே கடந்த மாதம் மாலை தீவு ஊடகங்கள், ராஜபக்ஷக்கள் மாலைத் தீவின் தீவுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் ஹோட்டலுடன் கூடிய வில்லாக்கள் அதில் இருப்பதாகவும் செய்தி வெளியிட்டன. அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டதாக நம்பப்படும் தீவு ஒன்றிலேயே கோட்டாபய குழுவினர் தங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

டுபாய் நோக்கி பயணிக்க திட்டம் :

எவ்வாறாயினும்  தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலை தீவின் 'சொனேவா புசி' எனும் தீவில் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்  சில தினங்களில் டுபாய் செல்ல திட்டமிட்டுள்ளார். டுபாயில் அவர் தங்கும் பாதுகாப்பான இடத்தை, ஏற்கனவே அரச உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே ஏற்பாடு செய்துவிட்டு கடந்தவாரம் திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் ஏற்கனவே  செய்தி வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41