கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான அரையிறுதிப் போட்டியில் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணியை 6-5 என்று பெனால்டி உதையில் வெற்றிபெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

19 வயதுக்குட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் கொத்மலை சொக்ஸ் கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டித் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதில் யாழ். புனித பத்திரிசியார் கல்லலூரி அணியும் வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரி அணியும் ஒன்றையொன்று சந்தித்தன.

ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் போட்டி நிறைவுபெறும் வரை எவ்வித கோல்களும் போடாததால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. இந்நிலையிலும் எந்தக் கல்லூரி அணி வீரர்களும் கோல்களைப் போடாததால்  மத்தியஸ்தரினால் பெனால்டி முறையில் வெற்றியை தீர்மானிக்கும் நிலைக்கு இரு அணிகளும் தள்ளப்பட்டன.

பெனால்டி முறையில் மூன்றாவது பெனால்டியை புனித பத்திரிசியார் அணியின் வழமையான கோல் காப்பாளர் ஏ.பிருந்தாபனும் ஏழாவது பெனால்டியை மாற்று கோல் காப்பாளர் ஆர். சாந்தனும் தடுத்து நிறுத்தி தமது அணி இறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்தனர்.

தலா ஏழு உதைகள் வரை நீடித்த பெனால்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி 6-5 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

புனித பத்திரிசியார் கல்லூரி அணி சார்பாக அந்தனி சுபாஷ், அன்றுட் லெனின், ஆர்.டிலக்ஷன், ஆர்.ஷாந்தன், ஈ.டார்வின், கோல்காப்பாளர் ஏ.பிருந்தாபன் ஆகியோர் பெனால்டி உதைகளை சரியாக உதைத்தனர்.

புனித ஜோசப்வாஸ் கல்லூரி அணி சார்பாக ஆஷேன் கனிஷ்க, பிதுஷ பெர்னாண்டோ, சத்துருவன் பெர்னாண்டோ, நிமேஷ் டில்ஷான், இசுரு தேவிந்த ஆகியோர்  பெனால்டி உதைகளை சரியாக உதைத்தனர்.

தினுஷ பொர்னாண்டோவின் பெனால்டியை பத்திரிசியார் கல்லூரியின் வழமையான கோல்காப்பாளரான ஏ.பிருந்தாபனும் தேவிந்த மிலிந்தவின் பெனால்டியை மாற்று கோல் காப்பாளர் ஆர்.ஷாந்தனும் தடுத்து நிறுத்தினர்.

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி 6-5 என்ற பெனால்டி அடிப்படையில் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலாவது அணியாக இத்த தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

இந்நிலையில் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணியை 4 க்கு 1 என்ற பெனால்டி அடிப்படையில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

கொத்மலை சொக்ஸ் கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் கொழும்பு ஸாகிரா கல்லூரி அணியும் நாளை 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாலை 5 மணிக்கு ஒன்றையொன்று சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.