ரொபட் அன்டனி
ரஷ்யாவிடம் இலங்கை எரிபொருள் பெறுவதில் தவறில்லை பாதுகாப்பு தரப்பினரின் தலையீடுகள் குறித்து அவதானிக்கிறோம் பொறுப்பு கூறல் விடயத்தை தவிர்க்க முடியாது அரசியல் பொருளாதார மறுசீரமைப்பு முக்கியமாகும் அமைதியாக ஆர்ப்பாட்டத்துக்கான உரிமையை மறுக்கக்கூடாது இலங்கையில் இராணுவ தளம் அமைக்கும் நோக்கமில்லை காணாமல் போனோரின் உறவுகளின் கண்ணீர் நேர்மையானது ஐ.எம்.எப். உடனான பேச்சுக்களில் அமெரிக்கா தலையிடாது சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வை ஆதரிக்கிறோம் ஆட்சிமாறினால் சர்வதேசம் உதவும் என்பது மாயை
நாட்டின் தற்போதைய நிலைமையின் பல்வேறு பக்கங்கள் குறித்து மனம் திறக்கிறார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இணை அனுசரணை நாடுகளில் அமெரிக்கா மீண்டும் இணைந்திருக்கிறது. அந்தவகையில் எனது யாழ். விஜயம் மற்றும் அங்கு நடத்திய சந்திப்புகளுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதாவது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனித உரிமை மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தை தவிர்க்க முடியாது. கடந்த காலங்களில் மிக கடினமான நிலைமைகளை இலங்கை எதிர்கொண்டது. சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும். காணாமல் போனவர் குறித்த அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர்களுடன் நடத்திய விசேட சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அளித்த பதில்களும் வருமாறு
கேள்வி 22 ஆவது திருத்தம் குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
பதில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கிறது. அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்று எந்தஒரு வெளிநாடும் இலங்கைக்கு கூறமுடியாது. எவ்வாறு இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்பதை பார்க்கிறோம். அதில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். மக்கள் வெளிப்படை தன்மை நல்லாட்சிக்காக ஆர்வத்துடன் இருக்கின்றனர். நிறுவன ரீதியான மறுசீரமைப்பு மற்றும் அரசாங்க தரப்பில் இருந்து பொறுப்புக்கூறலையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இது வழமைக்கு மாறாகவே காணப்படுகின்றது. பல்வேறு தரப்புகளில் இருந்தும் மக்கள் மறுசீரமைப்பை வலியுறுத்துகின்றனர். இது தொடர்பில் சகலரது கருத்துக்களும் அவர்களது கோணங்களும் பரிசீலிக்கப்படுவது முக்கியமாகும். இதனை அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும். இதன் இறுதித் தன்மை எவ்வாறானது என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். இங்கு விட்டுக்கொடுப்பது என்பது முக்கியமாக இருக்கின்றது. அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்துக்காக இரண்டு பிரதான கட்சிகளும் விட்டுக் கொடுத்திருக்கின்றன. அதேபோன்று இங்கும் விட்டுக் கொடுப்புக்கள் அவசியமாகும். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயல்பாடுகள் மிக அவசியமாகின்றன.
கேள்வி அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு விடயத்தில் இலங்கையின் தற்போதைய இந்த அரசியல் ஸ்திரமற்றநிலை இவ்வாறு தாக்கம் செலுத்துகிறது?
பதில் இலங்கையின் தற்போதைய இந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பாக அமெரிக்கா கரிசனை கொண்டிருக்கிறது. அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும். அரசியல் மறுசீரமைப்பை தவிர்த்து நீங்கள் பொருளாதார நெருக்கடியை மட்டும் தீர்க்க முயற்சிக்க முடியாது. நெருக்கடிக்கு மத்தியில் இரண்டு துறைகளிலும் மறுசீரமைப்பை கொண்டு வருவதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. அமெரிக்கா இலங்கையின் நீண்டகால நண்பனாக இருக்கிறது. இலங்கைக்கு உதவிகளை செய்து வந்திருக்கிறோம். நெருக்கடி இருக்கிறதோ இல்லையோ நாம் இலங்கையின் சிறந்த நண்பனாக தொடர்ந்திருப்போம். இதில் தனிப்பட்ட நபருக்கோ கட்சிக்கோ அரசுக்கோ நாங்கள் ஆதரவளிப்பதில்லை. மாறாக இலங்கை மக்களுக்கு எமது ஆதரவை தெரிவிக்கிறோம். ஜனநாயகம் செழிக்கவேண்டும். ஸ்திரதன்மை உருவாக வேண்டும். நெருக்கடிகளுக்கு மத்தியில் எமது நட்புறவு தொடரும். அண்மையில் கூட அமெரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்களை உதவியாக அறிவித்தார். முன்னர் அமெரிக்காவின் உதவியில் இலங்கை குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. தற்போது இலங்கையுடன் இந்த உறவை மேலும் பலப்படுத்தவே நாம் முயற்சிக்கிறோம்.
கேள்வி இலங்கையின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளிட்ட செயற்பாடுகளில் இராணுவத்தினரின் ஈடுபாட்டை அமெரிக்கா எவ்வாறு பார்க்கிறது?
பதில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடைபெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமையை சகலரும் உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரம் சட்டத்தின் ஆட்சிபடுத்தல் உறுதிப்படுத்தப்படவேண்டும். மக்கள் வன்முறையை நாடக்கூடாது. சொத்துக்களை அழிக்கக்கூடாது. வரிசையில் காத்திருந்த ஒரு சிவிலியன் மீது இராணுவ அதிகாரி தாக்குதல் நடத்திய காணொளியை நானும் பார்த்தேன். அது முழு நாட்டுக்கும் ஒரு நல்ல சமிக்ஞையை வெளிப்படுத்தவில்லை. பாதுகாப்பு தரப்பினர் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பாதுகாப்பு தரப்பினர் எவ்வாறு இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்பதை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம்.
கேள்வி நீங்கள் அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரை சந்தித்தீர்கள். என்ன பேசீனீர்கள்?
பதில் நான் இலங்கைக்கு வந்ததும் சகல அரசியல் கட்சிகளையும் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், மாணவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட சகலரையும் சந்தித்து வருகிறேன். ஒருவரை சந்தித்து ஒருவரை புறக்கணிக்க கூடாது. ஜே,வி,பி,. ஒரு முக்கியமான கட்சியாக இருக்கிறது. அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரசன்னமாகின்றார்கள். அந்த கட்சி வளர்ச்சியடைகிறது, பிரபலமாகின்றது. அதன் தலைவர் அனுரகுமாரவுடன் நான் நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கடந்த காலங்களில் பல தவறான புரிதல்கள் காணப்பட்டன. எமது சந்திப்பு நேர்மையான பேச்சுவார்த்தையாக இருந்தது. எனினும் எல்லாவற்றிலும் இணக்கப்பாடு காணப்படவில்லை. ஆனால் அமெரிக்காவின் கொள்கை, அதன் செயல்பாடுகள், தேவையான உதவிகள் என எதுவாக இருந்தாலும் என்னுடன் பேசுமாறு நான் அவரிடம் தெரிவித்தேன்.
கேள்வி இலங்கையின் தற்போதைய நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறும் அதுவே ஒரேவழி என்றும் அமெரிக்கா இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்துகின்றன. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதற்காக இந்த மூன்று நாடுகளும் இவ்வாறு செய்கின்றனவா?
பதில் தற்போதைய சூழலில் சர்வதேச நாணயம் நிதியமே இலங்கைக்கான ஒரே தெரிவாக இருக்கின்றது என்று இலங்கை நம்புகிறது. உலகப் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட சகலரும் இது தொடர்பாக பேசுகின்றனர். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை சகலரும் வலியுறுத்துகின்றனர். இலங்கை இதற்கு முன்னரே அதனை நாடி இருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் பரிந்துரை அல்ல. ஜப்பான் அல்லது இந்தியாவின் பரிந்துரையும் அல்ல. மக்கள் நன்மையடைய வேண்டும். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடக்கூடாது என்று யாரும் கூறவில்லையே. அதன் செயற்பாடுகள் கடினமானதாக இருக்கலாம். அதனை இலங்கை முன்னெடுக்க வேண்டி வரும். நீங்கள் சீனாவை பற்றி கேட்கின்றீர்கள். சகல நாடுகளும் தற்போது இலங்கைக்கு உதவ வேண்டும்.
கேள்வி தற்போது இந்த நெருக்கடி நேரத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மறக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. நீங்கள் வடக்குக்கு விஜயம் செய்து காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்தீர்கள். இது தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
பதில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து மிகவும் முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தினேன். அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி சிவில் சமூகத்தினர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் சந்தித்தேன். அவை மிகவும் உணர்வுபூர்வமான சந்திப்புகளாக இருந்தன. நானும் ஒரு தாய். அந்த வகையில் அந்த காணாமல் போனவர்களின் தாய்மாரின் கண்ணீர் நேர்மையானதாகவும் உணவுபூர்வமானதாகவும் இருந்தது. அதனை கேட்பது மிக கடினமாக இருந்தது. மனித உரிமை, நீதி, ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலுக்காக எப்போதும் அமெரிக்க முன்னிற்கும். இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இணை அனுசரணை நாடுகளில் அமெரிக்கா மீண்டும் இணைந்திருக்கிறது. அந்தவகையில் எனது யாழ். விஜயம் மற்றும் அங்கு நடத்திய சந்திப்புகளுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதாவது பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனித உரிமை மற்றும் பொறுப்பு கூறல் விடயத்தை தவிர்க்க முடியாது. கடந்த காலங்களில் மிக கடினமான நிலைமைகளை இலங்கை எதிர்கொண்டது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும். காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக வேலைகளை செய்யவேண்டியிருக்கிறது.
கேள்வி அண்மையில் இலங்கைக்கு அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் வருகை தந்தனர் . எவ்வாறான உதவிகளை வழங்குவதற்கு ஆராயப்பட்டது?
பதில் அமெரிக்க திறைசேரி பிரதிநிதிகளின் விஜயம் காலத்துக்கு ஏற்றதாக அமைந்ததுடன் அவர்களுக்கு இலங்கை நிலைமையை மதிப்பீடு செய்வதற்கு தேவை இருந்தது. அவர்கள் ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர் தரப்பினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். நிலைமைகள் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. சவால்கள் காணப்படுகின்றன. என்ன செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆராயும் தேவை இருந்தது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையில் நாம் நேரடியாக தலையிட மாட்டோம்.
கேள்வி தற்போதைய நெருக்கடியில் இலங்கைக்கு உரிய முறையில் சர்வதேச உதவிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஏன் இவ்வாறான நிலைமை ?
பதில் இலங்கைக்கு உதவ சர்வதேச சமூக பின்வாங்கிறது என்று ஒரு தவறான செய்தி பரப்பப்படுகிறது. அமெரிக்கா இலங்கை மக்களுக்கு உதவி செய்கிறது. எமது உதவி எமது ஒத்துழைப்பு நட்பு என்பது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி உடனானது அல்ல. பிரதமர் உடனானதல்ல. அது இலங்கை மக்களுடனானதாகும். இலங்கையில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதுடன் சர்வதேச நாடுகள் உதவி செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கின்றன என்ற விடயம் தவறானது. காரணம் வரிசைகளில் நிற்பது சாதாரண மக்கள். மேலும் கடன் மறுசீரமைப்பு செய்யப்படாத நாடு ஒன்றுக்கு சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக கடன் வழங்காது. எனவே சர்வதேச நாணய நிதியமே இருக்கின்ற ஒரே வழியாகும்.
கேள்வி ரஷ்ய ஜனாதிபதியுடனான கோட்டாய ராஜபக்ஷவின் தொலைபேசி உரையாடல் குறித்து?
பதில் இலங்கைக்கு எந்த ஒரு நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான உரிமை இருக்கின்றது. இலங்கை ஏனைய நாடுகளுடன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா கூற முடியாது. ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக் கொள்ளும் அக்கறை இலங்கைக்கு இருக்கின்றது என்பது எமக்கு தெரியும். இலங்கை ரஷ்யாவிடம் உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக அமெரிக்கா எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது. எமக்கு அந்த ஏரிபொருள் எரிசக்தி கொள்ளளவு போதுமானளவு இருக்கின்றது. ஆனால் உலகளவில் ரஷ்யாவுக்கான வங்கி முறை போக்குவரத்து முறை என்பன தடை செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பாக இலங்கை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி மிகவும் கொடூரமான தேவையற்ற ஒரு யுத்தத்தை மேற்கொண்டு வருகிறார். இறைமையுள்ள நாட்டின் மீது அவர் தாக்குதல் நடத்துகிறார். சர்வதேச ஒழுங்கை மாற்றுவதற்கு புட்டின் முயற்சிக்கிறார். நாம் யுக்ரேன் மக்களுக்காக முன்நிற்கின்றோம். ஆனால் இலங்கைக்கு அவசரமாக எரிபொருள் தேவைப்படுகிறது என்பதனை ஏற்கின்றோம்.
கேள்வி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. அது தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ?
பதில் ஈஸ்டர் தாக்குதல் நினைவு தினத்தில் நான் பங்கேற்றேன். இது குறித்து விசாரிப்பதற்கு அமெரிக்கவின் உதவி கோரப்பட்டது. அமெரிக்க எப்,பி, ஐ, அதிகாரிகள் இங்கு வந்தனர். தற்போது விசாரணைகள் மந்தகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நான் கர்தினால் ஆண்டகையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இதற்கான நீதி மறக்கப்படக்கூடாது.
கேள்வி தற்போது இந்த நெருக்கடி நேரத்தில் அமெரிக்கா மீண்டும் எம்.சி.சி. உடன்படிக்கையை இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கிறதா?
பதில் எம்.சி.சி. உடன்படிக்கை இலங்கையில் இடம் பெறாமை குறித்து நாங்கள் அதிருப்தி அடைகிறோம். அதன் ஊடாக மக்களுக்கு பாரிய நன்மை கிடைத்திருக்கும். 500 மில்லியன் டொலர் இலங்கைக்கு கிடைத்திருக்கும். இது தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை எம்.சி.சி. உடன்படிக்கை ஊடாக நிறுவப்போவதாக தவறான செய்தி பரப்பப்பட்டது. அமெரிக்க இராணுவ தளத்தை இலங்கையில் நிறுவும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் இன்னும் மக்கள் அதனை என்னிடம் கேட்கின்றனர். உலக அளவிலும் பல நாடுகளில் எம்.சி.சி உடன்படிக்கையை செய்திருக்கின்றோம். நேபாளம் அண்மையில் அதனை அங்கீகரித்திருக்கிறது. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை இழந்துவிட்டது தற்போது எம்.சி,சி. யை கொண்டுவரும் எவ்விதமான நகர்வுகளும் இடம்பெறவில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பில் பரிசீலனைகள் வரலாம்.
கேள்வி அண்மையில் நீங்கள் சீன தூதுவரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினீர்கள். என்ன நடந்தது?
பதில் நான் சீன தூதுவரை சந்தித்ததை மக்கள் மிக ஆச்சரியமாக பார்த்தனர். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர தொடர்புகள் கானப்படுகின்றன. வர்த்தக தொடர்பு காணப்படுகிறது. எங்களுக்கிடையில் நுட்ப ரீதியான போட்டி காணப்படுகிறது. நானும் சீன தூதுவரும் இலங்கை நிலைமை தொடர்பாக கலந்துரையாடினோம்.
கேள்வி அன்னையில் அமெரிக்காவின் ஹமில்டன் நிதி நிறுவனம் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கிறதே?
பதில் அது ஒரு தனியார் வங்கி. அது தொடர்பாக எனக்கு தகவல்கள் தெரியாது. அந்த செயற்பாடுகளில் அமெரிக்க அரசாங்கம் தலையிடாது.
கேள்வி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக மற்றும் பாதுகாப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியிருந்தார். அது தொடர்பில்?
பதில் விமல் வீரவன்சவை நான் இன்னும் சந்திக்கவில்லை. அவர் அமெரிக்க தூதரக செயற்பாடுகள் மீது கருத்து வெளியிட்டிருப்பதை கண்டேன். நாம் அமைதியான ஆர்ப்பாட்டத்தையே வலியுறுத்துகிறோம். உலகம் முழுவதும் அதனை நாம் செய்கிறோம். அமைதி ஆர்ப்பாட்டங்களின் பலத்தை நம்புகிறோம்.
கேள்வி இலங்கையில் காபந்து அரசாங்கம் ஒன்ற அமைய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பதில் பொருளாதார, அரசியல் மறுசீரமைப்பு அவசியம் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். அதனை எவ்வாறு செய்வது என்பதை இலங்கை மக்களும் அரசாங்கமும் தீர்மானிக்க வேண்டும். அரசியலமைப்பு மறுசீரமைப்பா அல்லது காபந்து அரசாங்கமா என்பதை இலங்கையே தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ தளம் என்று அமெரிக்கா கூறுகிறது? இது எவ்வாறு ?
பதில் எந்தவொரு சீன திட்டமாக இருந்தாலும் அதில் மக்கள் பயனடைந்தார்களா என்பதை இலங்கை மக்கள் மதிப்பீட்டு பார்க்கவேண்டும். அது இலங்கை மக்களை சார்ந்தது.
கேள்வி ஜெனிவாவில் இலங்கை குறித்த இணையனுசரணை நாடுகளில் மீண்டும் அமெரிக்கா இணைந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு இலங்கை குறித்து மற்றும் ஒரு பிரேரணை கொண்டுவரப்படுமா?
பதில் ஜெனிவா பிரேரணை விவகாரம் தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன் முன்னேற்றம் எவ்வாறு இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டும். மனித உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் நிலுவையில் இருக்கின்றன. பயங்கரவாத தடை சட்டத்தை சர்வதேச நியமத்துக்கு அமைவாக திருத்ததவேண்டும். செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் பல விடயங்கள் ஆராயப்படும்.
கேள்வி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றீர்கள்,. அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்படுகிறதா?
பதில் அவர்களுடன் மிக ஆர்வமான விடயங்கள் குறித்து நாம் பேசுகிறோம். அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசப்படுகிறது. அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டுக்கு நாம் ஆதரவு வழங்குகிறோம். சகல சிறுபான்மை மக்களும் தமக்கு இந்த நாட்டில் ஒரு உரிமைத்துவம் இருக்கின்றது என்பதை உணர வேண்டும். அதேபோன்று வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை மக்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன் வர வேண்டும்.
கேள்வி இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு கூட்டுறவு எவ்வாறு உள்ளது?
பதில் அது மிகவும் விரிவுபட்டதாக காணப்படுகிறது. பல பாதுகாப்பு கூட்டுறவு செயல்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. பயிற்சி பறிமாற்ற திட்டங்களும் இடம்பெறுகின்றன.
கேள்வி அமெரிக்காவும் இலங்கையும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை செய்வதற்கு முயற்சிக்கின்றனவா?
பதில் இலங்கைக்கும் அமெரிக்காக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக எந்த பேச்சு வார்த்தைகளையும் அண்மையில் இடம்பெறவில்லை.
கேள்வி இலங்கையின் மின்சாரத் துறையில் அமெரிக்காவின் நியூ போட்ரஸ் கம்பெனியின் முதலீடு தொடர்பான தற்போதைய நிலைமை என்ன?
பதில் நான் இங்கு வரும்போதே நியு போட்ரஸ் அமெரிக்க நிறுவனத்தின் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டுவிட்டது. இலங்கை அமைச்சரவை அதனை அங்கீகரித்திருக்கிறது. தற்போதைய நிலைமை என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எந்தவொரு முதலீட்டாளராக இருந்தாலும் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக மதிப்பீடு செய்கிறார்கள். பொருட்கள் போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லாமலிருப்பது பாரியதொரு சவாலாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM