(ஆர்.யசி)

அடுத்த ஆண்டில் மாத்திரம்  இலங்கை   4.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்  செலுத்தவேண்டியுள்ளது. எமக்கு வருமானமாக கிடைக்கும் ஒரு ரூபாய்க்கு 80 சதம் கடனாக செலுத்தவேண்டிய நிலைமையில் இலங்கை உள்ளதாக நிதி பிரதியமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.  

அதேபோல் இம்மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள வரவுசெலவு திட்டம் தொடர்பில் ஆராய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நிதி அமைச்சில் நாளை கூடவுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

இம்மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள வரவுசெலவு திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் நாம் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளது.  அதேபோல் சில மாற்றங்களும் மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளதாக நாம் கருதுகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்போதும் மக்களின் பக்கம் சிந்தித்து அதற்கமைய வரவுசெலவு திட்டம் அமைய வேண்டும் என கருதுகின்றது. ஆகவே நாளை நிதி அமைச்சில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகள் நிதியமைச்சருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளோம். வரவுசெலவு திட்டம் முன்வைக்க முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் நடத்தப்படும் இறுதி கலந்துரையாடலாக இது அமையும். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய தீமானங்கள் எடுக்கப்படும் அதன் பின்னர் வரவுசெலவு திட்டத்தை முன்வைப்பது பொருத்தமானது என கருதுகினோம். 

மேலும் இலங்கை சர்வதேச நாடுகளுக்கு கொடுக்கவேண்டிய கடன்தொகை அதிகரித்துக்கொண்டு வருகின்றது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அடுத்த ஆண்டுக்காக இலங்கை 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்தவேண்டியுள்ளது. எமக்கு வருமானமாக கிடக்கும் ஒரு ரூபாய்க்கு 80 சதம் கடனாக செலுத்தவேண்டிய நிலைமையில் இன்று நாம் உள்ளோம். அவ்வாறான நிலையில் சர்வதேச நாடுகளிடம் இருந்து இனிமேலும் எம்மால் கடன்களை பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மாறாக முதலீடுகளை மட்டுமே வலியுறுத்த முடியும். அதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.