முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு தலைவர்கள் வேண்டும்

Published By: Digital Desk 5

10 Jul, 2022 | 01:18 PM
image

எம்.எஸ்.தீன் 

ஆட்சியாளர்களின் ஊழல்கள், திட்டமிடப்படாத அபிவிருத்திகள், பொருளாதாரக் கொள்கைகளில்; உள்ள குறைபாடுகள், சர்வதேச நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை முறையாகக் கையாளாமை போன்ற செயற்பாடுகள் காரணமாக இலங்கை மிகவும் மோசமான வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. நாடு எப்போது மீளும் என்று சொல்ல முடியாத நிலைமையொன்று தற்போது காணப்படுகின்றது. 

இத்தகைய குளறுபடிகளில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் தங்களின் இயலாமை, ஊழல், பொய் போன்ற அனைத்து தீய காரியங்களையும் மூடி மறைப்பதற்கு சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டார்கள். பெரும்பான்மையின மக்கள் தமது அரசியல் தலைவர்கள் சொல்வதை நம்பி சிறுபான்மையினரை எதிரியாகவே பார்த்தார்கள். 

நாட்டில் 30வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள் என்பதற்காகவும், பௌத்த இனவாதத் தேரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்ற நம்பிக்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட அனைத்துக் கருத்துக்களையும் சிங்கள மக்கள் நம்பினார்கள். அக்கருத்துக்களில் உள்ள உண்மைத்தன்மைகளை ஆராய்ந்து பார்க்கவில்லை. அரசியல் தேவைக்காகவே முஸ்லிம் விரோத கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் என்று உண்மையான நாட்டுப்பற்றாளர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறிய போதிலும் அவர்களின் கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறவில்லை.

முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், பள்ளிவாசல்கள் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கும் இடம், அரபு மத்ரஸாக்கள் (பாடசாலைகள்) மூடப்பட வேண்டும். அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கருத்துக்களை முன் வைத்து வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தினார்கள். இத்தகைய நடவடிக்கைகளுக்கு பௌத்த கடும்போக்கு இனவாதத் தேரர்கள் வழிகாட்டியாக இருந்தார்கள். ஆட்சியாளர்கள் அனுசரணை வழங்கினார்கள். இவர்களின் உச்சக்கட்ட நடவடிக்கையாக முஸ்லிம்களின் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும், பள்ளிவாசல்களையும் தாக்கினார்கள். இராணுவத்தினரும், பொலிஸாரும் அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதற்குரிய உத்தரவுகள் மேலிடத்திலிருந்து அவர்களுக்கு வழங்கப்படவில்லை. 

இவ்வாறு தமது அரசியலுக்காக முஸ்லிம்களை பலியாக்கிக் கொண்டவர்கள் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை முழுமையாக முஸ்லிம்களின் மீது சுமத்தி முஸ்லிம்களை அடிமைகளாக்குவதற்குரிய அனைத்து செயல்களையும் மேற்கொண்டார்கள். 

முஸ்லிம்களை துன்பப்படுத்துவதில் இன்பம் கண்டவர்கள் கொரோனா தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை வெறும் இனவாத செயற்பாட்டுக்காக மாத்திரம் எரித்தார்கள். ஜனாஸாக்கள் எரிக்கப்படவில்லை. வெறும் பெட்டிகள் மாத்திரமே எரிக்கப்பட்டன என்று சொல்லுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். 

இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டை முன்னேற்றவில்லை. அபிவிருத்தி என்ற போர்வையில் மோசடி செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் மீது வேண்டுமென்று இனவாதக் கருத்துக்களை சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்.  இவ்வாறு சிங்கள மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் காரியங்களும் அரசியல் தேவைக்காக திட்;;டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவாக உணர்ந்துள்ள இன்றைய சூழலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு முன் வைக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி அதற்கு பின்னால் காணப்பட்ட அரசியல் தேவையையும் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். ஊடகங்களில் அவை பற்றி கருத்துக்களை வெளியிட வேண்டும். 

முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று சொல்வதற்குரிய தருணம் இதுவல்ல என்று அன்று தெரிவித்து மௌனமாக இருந்தார்கள். ஆயினும், ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டும், அவர்களின் புகழுரைத்து ஆடிப்பாடித் இருந்தார்கள். ஆனால் தற்போது சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் ஒரு தெளிவான பார்வையில் உள்ளார்கள். அதனால், இன்று முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொய் என்று நிருபிக்கக் கூடிய இன்றைய சூழலை பயன்படுத்தாது மௌனமாக இருப்பதும் ஏனோ என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்கிறோம். 

முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை காண்பது அரிதாகிவிட்டது. பாராளுமன்றத்தில் இருப்பதாகக் கூட காண முடியாத நிலையில் அவர்கள் உள்ளார்கள். அவர்களை சொந்த ஊர்மக்கள் கண்டு கனநாளாகி விட்டது. எங்கே உள்ளார்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டிருந்த போது பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை பாராட்டினார்கள். முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களை புகழ்வதில் போட்டி போட்டுக் கொண்டு செயற்பட்டார்கள். அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்ககாகவே எல்லாவற்றையும் செய்தார்கள். ஜனாஸா எரிக்கப்படவில்லை என்று சொன்னதும், பசில் நிதி அமைச்சராக வந்துள்ளார். 

அவர் நாட்டை அபிவிருத்தி செய்வார் என்றதும், ஆட்சியாளர்களின் தயவு முஸ்லிம்களுக்கு அவசியம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டமை அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே என்பது இன்று எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

சிங்கள மக்களை சிங்கள அரசியல்வாதிகள் ஏமாற்றி நாட்டை குட்டிச்சுரவாக்கியது போன்று முஸ்லிம் மக்களை முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்கள் ஏமாற்றியுள்ளார்கள். அவர்களினால் சமூகத்திற்கு பல தடவைகள் தலைக்குனிவுகள் ஏற்பட்டுள்ளன.

அவற்றை அவர்களினால் நிபர்த்தி செய்ய முடியாது. ஆனால், முஸ்லிம்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலவும் பொய்யானதென்று இன்றைய சூழலில் நிரூபிக்க முடியும். அதனைச் செய்யாதுள்ள இவர்களை அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று அவர்களின் அல்லக்கைகள் இப்போதே செயலில் ஈடுபட்டுள்ளார்கள். 

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளோம் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் டீல்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு டீசல் இல்லாது திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

எரிபொருள் மாபியா ஒரு பக்கமும், போதைவஸ்த்து பாவனையின் அதிகரிப்பு மறுபக்கமுமாக முஸ்லிம் பிரதேசங்களை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் வெறும் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கைககளில் வழங்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம்களின் கலாசாரங்கள் வேறு திசையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒரு சமூகம் தமது கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் விட்டு விலகிச் செல்வது என்பது அச்சமூகத்தில் பல தீயகாரியங்கள் தாமாகவே ஒட்டிக் கொள்ளும் என்பதனை முஸ்லிம் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று முஸ்லிம் சமூகத்தைப் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் என்று எந்த தரப்பினருக்கும் கரிசனை கிடையாது. தாமும், தமது குடும்பமும் வாழ்ந்தால் போதுமானதென்று எண்ணி செயற்படுகின்றவர்களே முஸ்லிம்கள் மத்தியில் எல்லாத்துறையிலும் தலைவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு போதும் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கு வழிசமைக்கமாட்டார்கள். 

இவர்களை மாற்றாத வரை முஸ்லிம்களும் தலை நிமிர்ந்து வாழ முடியாது. முஸ்லிம் சமூகத்தினால் தலை நிமிர்ந்து பெரியளவில் முகவரிகளைப் பெற்றவர்களினால் இன்று முஸ்லிம்கள் தலை குனிந்து நிற்பது பெரும் கவலைக்குரியதாகும். ஆதலால், தலை நிமிர்ந்து வாழ்வதற்கு தலைவர்கள் வேண்டும். அதனால் தலைவர்களை தேடும் பணியை முஸ்லிம்கள் செய்ய வேண்டும். இதில் சோம்பிப்போய் இருக்க முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார...

2024-03-01 16:20:49
news-image

எதிர்மறையான சமாதானத்தில் இருந்து நேர்மறையான சமாதானத்துக்கு...

2024-03-01 15:04:45
news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41
news-image

ரஃபா எல்லைக் கடவையும் எகிப்து மற்றும்...

2024-02-26 16:15:11
news-image

அதிகாரத்துக்காக மக்கள் ஆணையைப் பறித்தல்

2024-02-26 15:48:00