இலங்கை நெருக்கடி இந்தியாவுக்கு சாதகமா?

Published By: Digital Desk 5

10 Jul, 2022 | 01:16 PM
image

என்.கண்ணன்

“அண்மைக்காலங்களில் இலங்கையில் “வெட்டி விடப்பட்ட” திட்டங்கள் திடீரென இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளன”

இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆசிய நாடுகளுக்கு ஒரு பாடம் என்று, மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொகமட் எச்சரித்திருக்கிறார்.

நாணயத்தை மோசமாக நிர்வகித்ததும், மோசமான முதலீட்டுக் கொள்கையுமே இதற்கு காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்ற அவர், ஆசிய நாடுகள் பொறுப்புணர்வுள்ள நிதிக்கொள்கையை பின்பற்ற வேண்டும்- இல்லாவிட்டால், மன்னிக்காத சர்வதேச நாணய நிதியத்தின் கரங்களில் சிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்.

சர்வதேச நாணயத்துடன் அவர் நிறுத்திக் கொண்டாலும், வலிமையான நாடுகளிடமும், சக்திமிக்க தனியார் நிறுவனங்களிடமும் கூட சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதே உண்மை.

இலங்கையின் கடன் நெருக்கடி ஒரு வகையில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

அதேவேளை இந்தியா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் வசதியாக அமைந்திருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்த ஆண்டில் மட்டும் இந்தியா, 3.5 மில்லியன் டொலர்களை கடன்களாக வழங்கியிருக்கிறது.

இவை தவிர வேறு வழிகளில் பல்வேறு கொடைகளையும் அளித்திருக்கிறது.ஆனாலும் இலங்கையின் நெருக்கடியை இந்தியாவினால் தீர்க்க முடியவில்லை. 

இலங்கையின் நெருக்கடி நீடித்துச் செல்வது இந்தியாவுக்கு தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், வேறுபல முறைகளிலும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை, வல்வெட்டித்துறையில் இருந்து சென்ற 8 பேர் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இதையடுத்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தில் தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவர்களை மீட்பதற்காக மேலதிகமான படகுகளை நிறுத்துமாறு இந்திய கடலோர காவல்படையிடம் மீனவர்கள் கோரியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குமாறு தமிழக அரசின் கோரிக்கைக்கு இந்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

ஆனால் தஞ்சமடைபவர்களுக்கு மண்டபம் அகதிகள் முகாமில் இடமளித்து பராமரிக்கிறது தமிழக அரசு.

பொருளாதார நெருக்கடி மோசமடையும் போது தமிழகத்தை நோக்கிய அகதிகள் படையெடுப்பு, தீவிரமடைவது இந்தியாவுக்கு நெருக்கடியை அதிகரிக்கிறது.

அதுபோன்று இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் போது, அண்டை நாடான இந்தியாவினால் தார்மீக அடிப்படையில் உதவாமல் இருக்க முடியாது. அவ்வாறு ஒதுங்கியிருந்தால், பிராந்திய வல்லரசு என்ற தகைமையை இந்தியா இழக்க நேரிடும். 

இவ்வாறான இக்கட்டான நிலையில் இந்தியா இருந்து கொண்டிருந்தாலும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தனது பூகோள அரசியல் மற்றும் பொருளாதார, கேந்திர நலன்களை அடைவதற்கான வாய்ப்புகளும் அதற்கு இருக்கிறது.

இலங்கையில் “வெட்டி விடப்பட்ட” அல்லது இந்தியாவுக்கு வழங்க மறுக்கப்பட்ட சில திட்டங்கள் அண்மைக்காலங்களில் திடீரென வழங்கப்பட்டுள்ளன.

இது நெருக்கடியினால் இந்தியாவுக்கு கிடைத்த நன்மைகளில் ஒன்று.

மேலும் பல திட்டங்களை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. அண்மைய பேச்சுக்கள், இணக்கப்பாடுகள் அதனை நோக்கிய திசையில் நகர்வதாகவும் சொல்லப்படுகிறது.

அதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தை, தனியார் நிறுவனங்கள் பலவும் பயன்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை.

குறிப்பாக, அதானி குழுமம், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் வலுவான பொருளாதார தலையீட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மைக்காலத்தில், அதானி குழுமத்தினால் பெறப்பட்டுள்ள இரண்டு முக்கியமான திட்டங்கள் அவற்றில் அடங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய திட்டம் ஒன்று. மன்னார், பூநகரி காற்றாலை மின் திட்டங்கள் மற்றொன்று.

இந்த திட்டங்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதான குற்றச்சாட்டுகள் இருப்பினும், இவை இலங்கையைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாதவையும் கூட.

பொருளாதார நெருக்கடி அதானி குழுமத்தின் வணிகச் செயற்பாடுகளுக்கு இலங்கையில் மாத்திரமன்றி, இந்தியாவிலும் சாதகமானதொரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

விமான எரிபொருள் நெருக்கடியினால், இலங்கையில் இருந்து நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்ளும், விமானங்கள், எரிபொருள் நிரப்புவதற்காக இந்திய விமான நிலையங்களில் தரையிறங்குகின்றன.

குறிப்பாக கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் மே மாத இறுதிக்குப் பின்னர், இந்த வாரத் தொடக்கம் வரை - 55 விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியிருக்கின்றன.

இவற்றில் 44 விமானங்கள் சிறிலங்கன் எயர்லைன்ஸுக்கு சொந்தமானவை. ஏனையவை, பிளை டுபாய், ஓமான் எயர், எயர் அரேபியா, கல்ப் எயர் போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

இந்த விமான நிலையத்தை அதானி குழுமமே நிர்வகித்து வருகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கிடைக்க வேண்டிய எரிபொருள் விற்பனை வருமானமும், அதனால் அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானமும், இப்போது அதானி குழுமத்துக்கும், கேரள அரசாங்கத்துக்கும் கிடைக்கின்றன

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக விமானங்கள் தரையிறங்கத் தொடங்கியதும், கடந்த வாரம் கொச்சின் விமான நிலையத்திலும் எரிபொருள் நிரப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

அதற்குப் பின்னர் 10 இற்கும் அதிகமான விமானங்கள் அங்கு எரிபொருளுக்காக தரையிறங்கியிருக்கின்றன.

இது இந்தியாவுக்கு – அதானி குழுமத்துக்கு கிடைத்திருக்கின்ற ஒரு எதிர்பாராத பொருளாதார வாய்ப்பு.

அதுபோன்றே, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் குழப்பங்களால், கொழும்பு துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள் பல இந்திய துறைமுகங்களை நோக்கி செல்லும் நிலையும் உருவாகியிருக்கிறது.

அரசியல் குழப்பங்களுக்கு பின்னர், இந்த நிலை ஏற்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் போதுமான டீசல் இருப்பதாகவும் அதன் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுவதாகவும் கூறப்பட்டாலும், கப்பல்கள் பல இலங்கையை தவிர்க்கத் தொடங்கியிருக்கின்றன என்பது ஆபத்தான செய்தி.

இலங்கை அரசாங்கமோ, துறைமுக அதிகாரசபையோ கப்பல்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிடாத போதும், இந்திய துறைமுகங்களுக்கான கப்பல்களின் வருகை திடீரென அதிகரித்துள்ளதாக அங்குள்ள தகவல் மூலங்கள் உறுதி செய்கின்றன.

கொழும்பு வரும் கப்பல்கள், கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களுக்கு திருப்பி விடப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.

பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் கப்பல்கள் இந்திய துறைமுகங்களை நாடுவது இலங்கையின் கப்பல் போக்குவரத்து கேந்திரத் தன்மைக்கான நீண்டகால ஆபத்தை ஏற்படுத்தும்.

கொழும்பு துறைமுகத்தினால் கையாளப்படும், 70 சதவீதமான சரக்குகள் இந்தியாவுடன் தொடர்புபட்டவை.

இந்தியாவின் கொள்கலன் துறைமுக வசதிக்கு றைபாடுகளால் தான் கொழும்பு துறைமுகத்துக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது.

அந்த குறைபாட்டை நிறைவு செய்யும் வகையில் தான், அதானி குழுமம், கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தை கட்டி வருகிறது.

கோவா, எண்ணூர் துறைமுகங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் அதானி குழுமமே கைப்பற்றியிருக்கிறது. காட்டுப்பள்ளி துறைமுகத்தை அமைக்கும் திட்டமும் அதானி குழுமத்திடமே உள்ளது.

அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகமும் கூட அதானி குழுமத்தினால் தான் நிர்வகிக்கப்படுகிறது.

கேரளா, கோவா, தமிழகம், ஆந்திரா மட்டுமன்றி இந்தியாவில் 13 பிரதான துறைமுகங்கள், முனையங்கள் அதானி குழுமத்திடம் உள்ளன.

இந்தியாவின் துறைமுக வசதிகளில் 24 சதவீதம் அதானி குழுமத்தின் கையிலேயே உள்ள நிலையில், கொழும்புக்கு வரவேண்டிய கப்பல்கள் இந்த துறைமுகங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்படுவது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கிழக்கு மேற்கு கப்பல் பாதைக்கு மிக நெருக்கமாக அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது. இந்த வழியால் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பினாலேயே, இலங்கை செல்வம் கொழிக்கும் நாடாகி விடும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபக்ஷவினர் நாட்டு மக்களை நம்ப வைத்தனர்.

இப்போது அம்பாந்தோட்டை மட்டுமல், கொழும்புக்கு வரும் கப்பல்கள், விமானங்கள் கூட இந்தியாவை நோக்கித் திரும்பும் நிலையை அவர்களே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த திசை திரும்பல் இந்தியாவுக்கு சாதகமானது. அந்த நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது இலங்கையே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்

2023-03-21 14:46:01
news-image

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...

2023-03-20 16:58:31
news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52
news-image

நீளும் நீதிக்கோரிக்கை

2023-03-18 14:06:47
news-image

சிக்கல்களை ஏற்படுத்தும் வொஷிங்டன், சீன இசைவு

2023-03-18 13:59:37
news-image

முஸ்லிம்களின் பிரச்சினைகளை கூடிக்கதைப்பது கூட சாத்தியமில்லையா?

2023-03-18 13:13:37
news-image

சிறப்புரிமை விவகாரத்தை விவாதிப்பதற்கு தீர்மானம்

2023-03-18 22:33:55