( எம்.எப்.எம்.பஸீர்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக நாளை ( 9) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்குமாறு, இன்று ( 8) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட பொலிஸாரின் மூன்று கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க, மேலதிக நீதிவான்களான பண்டார இளங்கசிங்க மற்றும் ரி.என்.எல். மஹவத்த ஆகிய நீதிவான்களே பொலிஸாரின் குறித்த கோரிக்கைகளை நிராகரித்தனர்.
அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியம், இன்று (8), நாளை ( 9) ஆம் திகதிகளில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் நிலையில், அவர்களுக்கு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல பிரதான வீதிகளில் நுழைய தடை விதிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிசார் கோரினர்.
எனினும் இதன்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ் , நளின் இந்ரதிஸ்ஸ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகி அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், 'ஜன கோஷா' எனும் பெயரால் அறியப்படும் உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பை முன்னிறுத்தி மக்களின் கருத்து, கருத்து வெளிப்பாட்டு, ஒன்றுகூடும் உரிமையை மீற இடமளிக்கக் கூடாது என வாதிட்டார்.
இந் நிலையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க அறிவித்தார்.
இந் நிலையில், கொள்ளுபிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில், கோரிக்கை ஒன்றினை முன் வைத்து நாளைய தினம் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குள் நுழைவதை தடுக்க கோரினர். குறித்த பகுதியில் பொருளாதார கேந்திர ஸ்தாங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள நிலையில் குற்றம் ஒன்று நடந்தால் அது நிலைமையை மோசமடைய செய்யும் என கூறி தடை உத்தரவு கோரினர்.
எனினும் அப்போது மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், குற்றம் நடந்தால் அது குறித்து செயற்பட பொலிஸாருக்கு பூரண அதிகாரம் இருப்பதால், அரசியலமைப்பூடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை தடை செய்யக் கூடாது என நீதிமன்றைக் கோரினார்.
இந் நிலையில் கொள்ளுபிட்டி பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இந் நிலையில், இதனை ஒத்த கோரிக்கையினை மாளிகாவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு மேலதிக நீதிவான் ரி.என்.எல். மஹவத்த முன்னிலையில் முன் வைத்த நிலையில், அவரும் அக்கோரிக்கையை நிராகரித்தார்.
ஏற்கனவே நேற்று (7) கொழும்பு - கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை அண்மித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும், அப்பகுதிக்குள் நுழையவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸார் சட்ட மா அதிபரின் உதவியுடன் முன் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
உளவுத் தகவல்களை ஆதாரம் காட்டி, கோட்டை பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் XXXVI பகுதியின் 414 ஆம் அத்தியாயத்துக்கு அமைய சத்தியக் கடதாசி ஒன்றினை முன் வைத்து பீ 22502/22 எனும் வழக்கினை தாக்கல் செய்து முன் வைத்த கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா இவ்வாறு நிராகரித்திருந்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM