'தி வாரியர்' திரைப்பட ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா

Published By: Vishnu

07 Jul, 2022 | 09:13 PM
image

ராக்ஸ்டார் என அன்புடன் போற்றப்படும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான 'தி வாரியர்' எனும் படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ் திரை உலகின் தலைசிறந்த படைப்பாளிகள் வருகை தந்து, இப்படத்தின் இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அறிமுக நாயகன் ராம் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினர்.

முன்னணி இயக்குநரான என். லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தி வாரியர்'. தெலுங்கின் முன்னணி நடிகரான ராம் பொத்தனேனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சிராக் ஜானி, ஜெயப்பிரகாஷ், பாரதிராஜா, அக்ஷரா கௌடா, நதியா, ராமச்சந்திர ராஜு, ஆதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைறமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெயின்மென்ட் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாச சித்தூரி பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஜூலை 14ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகும் இந்த திரைப்படத்தின் ஓடியோ மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையின் இதயப் பகுதியான சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரை உலகின் முன்னணி படைப்பாளிகளான பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், பாலாஜி சக்திவேல், கௌதம் வாசுதேவ் மேனன், ஆர். கே. செல்வமணி, வசந்தபாலன், விக்ரமன், இரா. பார்த்திபன், பிருந்தா சாரதி உள்ளிட்ட பலருடன் நடிகர்கள் விஷால், ஆர்யா மற்றும் பட குழுவினர் பங்கு பற்றினர். 

பட குழுவினரை வாழ்த்தி முத்திரை இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், '' இங்கு இத்தனை 'வாரியர்கள்' வருகை தந்திருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தால்.., என்னுடைய படத்தின் படப்பிடிப்பை இங்கேயே நடத்தி இருப்பேன். ஹைதராபாத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அருகில் லிங்குசாமியின் 'தி வாரியர்' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. அவர்கள் விரைவில் திரைக்கு வருகிறார்கள். நான் அவர்களைத் தொடர்ந்து திரைக்கு வருகிறேன்.

திரையுலகினர் அனைவருக்கும் பிடித்த இயக்குநர் என். லிங்குசாமி. கொரோனா காலகட்டத்தில் எமக்கும், ஏனைய படைப்பாளிகளுக்கும் இடையே தகவல்களை கடத்தும் மையமாக இவர் இருந்தார். இவர் மூலமாகவே ஏனைய படைப்பாளிகளை எம்மால் தொடர்பு கொள்ள முடிந்தது. படைப்பாளிகளின் நண்பர் வட்டாரத்தை உருவாக்கி, அதை நேர்த்தியாக பேணி வருகிறார். நல்ல உள்ளம் கொண்ட லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகும் 'தி வாரியர்' படம் தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற வேண்டும். தமிழில் அறிமுகமாகும் ராம் பெரிய வெற்றியை  பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.'' என்றார்.

இவ்விழாவில் படத்தில் 'கலர்ஸ்..' என தொடங்கும் புதிய பாடல் வெளியிடப்பட்டது. அத்துடன் அந்தப் பாடலை பாடிய பாடகர்கள், மேடையில் நடனமாடி, பாடி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர். நடிகரும், மேடை மிமிக்கிரி கலைஞருமான ரோபோ சங்கர் சிறிது நேரம் யாரும் எதிர்பார்க்காத முன்னணி நட்சத்திரங்களின் குரலில் பேசி பார்வையாளர்களை வியப்படையச் செய்தார்.

தெலுங்கு நடிகரான ராம் பொத்தனேனி அவர்களை தமிழில் அறிமுகப்படுத்துவதற்காக தமிழ் திரையுலகத்தின் முன்னணி படைப்பாளிகள் ஒன்று திரண்டு வருகை தந்திருந்தது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இது புதிய பாணியிலான திரையுலக கலாச்சாரமாக தொடரக்கூடும் என்றும் திரையுலக வணிகர்கள் தெரிவித்தனர் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right