படத்துக்கு கதை முக்கியமல்ல - ஈழன் இளங்கோ

By Nanthini

06 Jul, 2022 | 01:35 PM
image

(மா. உஷாநந்தினி)

புலம்பெயர்ந்த இலங்கை கலைஞ­ரான திரு. ஈழன் இளங்கோ அவுஸ்தி­ரேலி­யாவில் திரைப்படங்கள், குறும்படங்களை தயாரித்து இயக்கி நடித்ததோடு, தென்னிந்­திய தமிழ் சினிமாவிலும் அங்கம் வகித்­துள்ளார். ‘வால்டர்’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் சிபிராஜ், சமுத்திரகனியோடு இணைந்து படப்பிடிப்பு தளங்களில் பணி­யாற்றிய இவர், இலங்கை படைப்புகளின் மீதான தனது பார்வையை அகல விரித்து புதுவித கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து­கொண்டவை, குறிப்புகளாக இனி…

அறிமுகம்

நான் ஈழன் இளங்கோ. திருகோண­மலையை பிறப்பிடமாக கொண்டவர். வளர்ந்­தது கொழும்பில். 1985இல் இந்தி­யா­வுக்கு சென்று புள்ளியியல் படித்துவிட்டு, 1999ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்­றேன். அங்கே 2003ஆம் ஆண்டு AUT பல்கலைக்கழகத்தில் Multi Media பட்­டப்­ படிப்பை நிறைவு செய்தேன். பின்­னர் அவுஸ்திரேலியாவில் இயங்கி வந்த ‘சிகரம் TV’யில் வீடியோ எடிட்டராக பணியாற்றி­னேன். பிறகு அதிலிருந்து விலகி, ‘அம்மா க்ரியேஷன்ஸ்’ எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தேன். அதனூடாக நமது மண்ணின் படைப்­புக்­களை உள்வாங்கும் விதமாக நிகழ்ச்சி­களை செய்து வந்தோம்.

முதல் படைப்பும் அடுத்தடுத்த படங்களும்…

முதல் முதலாக எனது தயாரிப்பு நிறு­வனத்தின் மூலம் ‘விழிமொழி’ என்ற திரைப்­படத்துக்கான தயாரிப்பு வேலை­களை ஆரம்பித்திருந்தோம். எனினும், அந்­தப் படம் வெளியாகவில்லை. பின்னர் 2008இல் ஈழத்து நாடக கலை­ஞர் ஏ.ரகுநாதன் ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது வழிகாட்டுதலோடு, 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ‘இனியவளே காத்திருப்பேன்’ என்ற முதல் தமிழ் திரைப்­படத்தை பெரும் போராட்டத்துக்கு மத்தியில் வெளியிட்டேன்.

படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளித்­தொகுப்பாளராகவும் நானே பணி­யாற்றி­னேன். நானும் எனது மகன் சத்­யன் இளங்கோவும் கூட படத்தில் நடித்தி­ருந்­தோம். அந்த படம் நோர்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு தெரிவானது.

அடுத்து, ‘தொடரும்’, ‘மொழிப்பிறழ்வு’, ‘நிசப்த ஓலங்கள்’ முதலான குறும்­படங்­களை இயக்கினேன். திரைப்பட விழாக்களுக்காக மட்டுமே இயக்கிய இம்மூன்று படங்களை இணைத்து 2018இல் ‘சாட்சிகள் சொர்க்­கத்தில்’ என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருந்தேன். அந்தப் படம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் வெளியானது.

அதுமட்டுமன்றி, நிறைய கொரோனா விழிப்புணர்வுப் பாடல்களையும் உரு­வாக்கி­­யிருக்கிறோம். எமது படைப்புகளை ‘ஈழம் play’ ஓடிடி தளத்தில் இலங்கை ரசிகர்கள் இலவசமாக பார்வையிடலாம். 

இலங்கை திரைத்துறையை பற்றி…

திரைப்படத்துறை வளரவில்லை என்­றால், கலைஞர்களால் முன்னேற முடி­யாது. 

இங்கே பாடும் திறமைமிக்க ஒருவர் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெகுமதிகளை பெறுவார். எனி­னும், அது அவரது வாழ்நாள் முழு­வதுமான கலைப்பயணத்துக்கு உதவாது.

பலர் கலைத்துறையை பகுதிநேர தொழி­லாக மட்டுமே கொண்டு சொற்ப வரு­மானத்தை ஈட்டுகின்றனர். இதுதான் இங்­குள்ள நிலை…

பாராட்டுக்கள் கிடைக்கப் பெற்றாலும், நமது கலைஞர்கள் ஒரு குறுகிய வட்டத்­துக்குள் திறமையை நிரூபிக்க வேண்டி­யுள்ளது. புதிய வாய்ப்பு­களோ நாடு கடந்த அறி­முகமோ இவர்களுக்கு கிடையாது.

எனவே, இங்குள்ள திரைப்படத்துறை வளர்ந்தால் மட்­டுமே இசை, நடனம், நடிப்பு முதலான பல்வேறு கலைஞர்­களும் கலை மற்றும் பொருளா­தார ரீதியில் முன்னேற்றம் காண்பர். 

இந்நாட்டு திரைப்படங்கள் மக்களை போய்ச் சேர்வதற்கான வழிகள்…

படம் தயாரிக்க நமது படைப்­பாளிகளிடம் பண­மில்லை.

இன்று இலங்கையிலும் சரி, வெளி­­ நாடுகளிலும் சரி, திறமையான படைப்­­­பாளிகள் உள்ளனர். ஒரு திரைப்­படத்தை உருவாக்குவது மிக இலகு­வாகி­விட்டது. அந்தளவுக்கு தொழில்­ நுட்பம் நமது உள்­ளங்கைக்குள்.

ஒரு படம் உருவான பின்னரும் அது மக்களை சரிவர போய்ச் சேராத நிலை காணப்படுகிறது. எனவே திரைப்­படங்­களை திரையரங்குகளில் அல்லது ஓடிடி தளங்களிலேனும் வெளியிடுவது அவசிய­மாகிறது.

எனவே, திரைப்படங்களை திரை­­யரங்கு­­களுக்கு கொண்டு செல்வ­தற்­கான வழியை இனங்காண வேண்டும். அதற்காக திரைப்படங்களை விநி­யோ­கிக்கும் முறையானது சர்வதேச ரீதியில் பின்பற்றப்பட வேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் படங்களை விநி­யோகம் செய்வதற்கென அமைப்பு­கள் இயங்கப்பட வேண்டும். அவை நமது படைப்புகளை பெற்று, திரையிட வேண்டும். அதனூடாக படைப்­பாளிகளாலும் நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொள்ள இயலும்.

எதுவும் இலகுவாக கிடைக்கும்போது அதன் மதிப்பு தெரியாது. அதனால் கலைத்­ துறையில் குறிப்பாக, திரைத்­துறை­யில் எந்த ஒருவரும் உதவி நோக்கில் செயற்­படுவதை தவிர்த்து, சற்றேனும் வியா­பார உத்தியை கையாண்டால் தான், நமது சினிமாக்களும் ஒரு தேர்ந்த துறை­யாக வளர்ச்சி பெறும்.

இன்றைய படைப்பாளிகளை பற்றி…

கலைநுட்பமும் தொழில்நுட்பமும் சேர்ந்தே ஒரு படைப்பின் தரத்தை நிர்ண­யிக்கிறது. கலைநுட்பம் நம் கலை­ஞர்­களிடையே கொட்டிக் கிடக்கிறது. தேடலும் உள்வாங்கலும் ஒருவரிடம் இருந்தாலே அவரது படைப்புகள் தரம் மிக்கதாகிவிடும்.

ஆகவே, இந்த தலைமுறை கலை­ஞர்­கள் அங்கிங்கென பார்த்ததை கொண்டு படைப்பாக்கம் செய்யாமல், முறையான பயிற்சி பெற்று இத்துறையில் பயணிப்பதே சிறந்தது.

கதைகளை எப்படி தெரிவு செய்வது?

காதல், வன்முறை, போர் ஆகிய மூன்று விடயங்கள் சார்ந்த கதைகளை தவிர்க்க வேண்டும். இவற்றை படத்தில் ஓரிரு காட்சி­­களில் காட்டினாலும், படத்தின் முழு­மைக்­கும் இவை கருவாக அமைய வேண்­டிய­தில்லை. வாழ்க்கையில் Zoom செய்து பார்ப்பதற்கு நிறைய விடயங்கள் உள்ளன.

உயிரினங்களை அதிலும் வளர்ப்புப் பிராணிகளை சித்திரவதை செய்வது போன்று காட்சிப்படுத்துவதை கூட நான் விரும்பு­வ­­தில்லை.

இவற்றை விடுத்து, வரலாற்றை மக்க­ளி­டத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் எடுக்கப்பட்ட ‘குத்து விளக்கு’, ‘நெஞ்­சுக்கு நீதி’, ‘தோட்டக்காரி’ போன்ற படங்கள் இப்போதும் பேசப்படுகின்றன.

ஆவணப் படங்களை உருவாக்குவ­தில் உள்ள சவால்…

பழைய சம்பவங்களை படமாக்கு­வதென்றால், செலவு அதிகம். பழங்­கால சுற்றுச் சூழலை தளத்தில் கொண்டுவர வேண்டும். எனினும், இப்பொருளாதார இடர்களுக்கு மத்தி­யிலும் அத்தகையதொரு ஆவணப் படமொன்றை நம்மால் உருவாக்க முடிந்தால், அது நிச்ச­யம் ஜெயிக்கும்.

படத்துக்கு ‘கதை’ என்பது…

ஒரு படத்துக்கு கதை முக்கியமல்ல. கதை இல்லாமல் ‘ஸ்டோரி லைன்’ கொண்டு சுவா­ரஸ்யமான காட்சிகளை நகர்த்தி, தரமான படங்களை உருவாக்கலாம். அந்த அடையாளத்தோடு படைப்பாளி ஓர் உயரத்தை அடைந்த பின்னர், கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பிக்கலாமே!

கதை என்பது சம்பவங்களின் கோர்வை தானே. கதையை விட படத்துக்கு ‘கரு’ தான் முதன்மை. இதில் ‘கதை’ – ‘கரு’ இரண்­டும் வெவ்வேறு. ‘one line’ கதையாக வடி­வம் கொடுத்தாலே படம் வலிதாக அமைந்து­விடும்.

திரைப்படங்களில் மொழியாள்கை…

கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே கதை­யின் களம்.

இலங்கை திரைப்படமொன்றில் ஒரு கதாபாத்திரம், தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்களை போன்ற தோரணை­யில் வசனம் பேசினால், கதையோடு பொருந்­தாது. அது அந்த படத்தையே சிதைத்து­விடும். அதனால் தான் நமது படங்களை நம்மாலேயே ரசிக்க முடியாதுள்ளது.

தென்னிந்திய சினிமாவை பிரதிபலிக்கும் நமது படைப்புகளில் இந்த மண்ணின் தனித்துவம் காணாமற் போய்விடுகிறது.

பழையவர்கள் கையாளும் மொழியாடல் மற்றும் உச்சரிப்பு முறையை இன்றும் நாம் பின்பற்றுவது இக்காலத்துக்கு பொருந்­தாது. அதனையும் ரசிக்க ஒரு தரப்பினர் இருப்பினும், இன்றைய சினிமாவின் வளர்ச்சிக்கு பழைய மொழிநடை உத­வாது. ஆகவே, இங்கே நடிகர்கள் பிரதேச வழக்காக பேசும் வச­­னங்­கள் கூட முழுக்க முழுக்க நாடக பாணி­யாகவும் இல்லாமல், மிக யதார்த்த­மாகவும் இல்லாமல், இரண்­­டுக்கும் இடைப்பட்ட தொனி­யி ­­லும் வேகத்தி­லும் அமைவது கூட படத்­­தின் வெற்­றிக்கு காரண­மாக­லாம்.

படக்குழுவினரின் தொழில்நுட்ப அறிவு….

தயாரிப்பாளரோ இயக்குநரோ ஒளிப்­பதிவாளரோ யாராயினும் தொழில்நுட்பம் கற்றவராக இருக்க வேண்டும். 

இயக்குநர் என்பவர் ஒரு கதையை எழுதி உருவாக்குபவராக மட்டு­­மன்றி, காட்சிப்படுத்தும் யுக்­தியை அறிந்தவராகவும் இருக்க வேண்­டும். தொழில்நுட்பம் நன்கறிந்தவர்கள் ஒரு குழுவாக இணைந்து படம் உரு­வாக்கும்போது வேலை சுலப­மாகிவிடும், வீச்சும் அதிகம்!

இளையோரை ஊக்குவிக்கும் முயற்சி…

முந்தைய நாட்களில் என்னோடு இணைந்து பணியாற்ற கலைஞர்­கள் இல்லாததால், இயக்கம், தயா­ரிப்பு, நடிப்பு, ஒளித்தொகுப்பு என எல்லாமாக நானே செயற்பட்டேன்.

எனினும், பல துறைகளில் தேர்ச்சி ­பெற்ற கலைஞர்கள் எம்­மோடு வந்திணைந்தால் தான், நாம் ஒரு குழுவாக, படத்தை இன்னு­ம் மேலான தரத்துக்கு உயர்த்த முடி­யும்.

உண்மையில் ஒருவரே அனைத்து பணிகளையும் மேற்­கொள்­ளக் கூடாது. பல தரப்பட்ட கலை­ஞர்கள் இணைவதன் மூலமே அங்கு பலவித திறமைகள் வெளிப்­படும்.

அவ்வாறு தற்போது இளை­யோரின் திறமைகளை ஊக்குவிக்க பயிற்சியளித்து வருகிறேன்.

பாலு மகேந்திரா நூலகத்தோடு சேர்ந்து இணையவாயிலாக இந்­நாட்டில் கலையார்வம் கொண்ட இளைஞர்களுக்கு திரைத்­துறை சார்ந்த பயிற்சிகளை வழங்கி­யுள்­ளேன். அவர்களில் சிலர் எனது திரைப்படங்களில் பணியாற்றியும் இருக்கிறார்கள். சுபாஷ் என்பவர் தற்போது எமது ‘ஈழம் ப்ளே’ ஓடிடி தளத்தை நடத்தி வருகிறார்.

நடிப்பவர் கதாபாத்திரமாகவே மாறலாமா?

ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டும் என பலர் கூறுவர். என்னை பொறுத்தவரையில், அது அவசியமற்றது. 

ஒரு நடிகர் தான் ஏற்கும் கதா­பாத்திரத்தை உள்வாங்கி, அதை அவரது பாணியில் வெளிப்­படுத்து­வதே மிகச் சிறந்த நடிப்பாக இருக்­கும் என நினைக்கிறேன்.

18 வருடங்கள் கழித்து தாய்நாடு திரும்பிய நோக்கம்…

எனக்கு மூலிகைகளில் அதிக ஈடுபாடுண்டு. புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வர காரணம், இன்றைய தொழில்நுட்பமும் இயற்­கையை விட்டு விலகிய நமது வாழ்க்கை முறையுமே ஆகும்.

அன்றைய நாட்களில் மூலிகை­களை உட்கொண்டோம். மண்­சட்டி­யில் சாப்பிட்டோம். எனினும், இப்­போதைய நிலைமையில் மிக மோசமான நோய்களுக்கு நாம் சிக்­குண்டும், பெருமளவினர் மூலிகை­களின் சக்தியை உணராமல் உள்ள­னர். 

அதனால் மூலிகைகளை பற்றிய பதிவினை தொடரும் விதமாக ‘மருந்­தோம்பல்’ எனும் யூடியூப் செனலை ஆரம்பிக்கவுள்ளேன். அதற்­கான முயற்சிகளில் தற்போது ஈடு­பட்டு வருகிறேன். இந்நிகழ்ச்சியினூடாக அடுத்த தலைமுறைக்கு மூலிகைகளின் தாக்­கத்தை பாய்ச்சுவதே எனது நோக்­கம்.

கலைத்துறையில் பெண்கள்…

ஆணாதிக்கம் நிறைந்த கலைத்­துறையில் பெண் படைப்பாளிகள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லு­நர்கள் கால்பதிக்க வேண்­டும். வீடியோ எடிட்டராகவோ புகைப்­பட பிடிப்பாளராகவோ ஒளிப்­பதி­வாளராகவோ ஏராளமான பெண்­கள் வருகை தரும் காலமிது.

எனவே, பெண்களே, வாய்ப்பு­களை தேடி அலைய தேவை­யில்லை. நீங்கள் தனித்து துணிந்து இத்துறையில் செயற்பட்டு, ஏனைய ஆண் கலைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பவர்களாக திகழுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ஜீவன் நடித்திருக்கும் 'பாம்பாட்டம்' படத்தின்...

2022-11-28 16:57:56
news-image

'வனமே என் இனமே' காணொளிப் பாடல்...

2022-11-28 15:09:56
news-image

விஜய் சேதுபதி நடிக்கும் 'டிஎஸ்பி' படத்தின்...

2022-11-28 13:57:24
news-image

திருமண பந்தத்தில் இணைந்தனர் கெளதம் கார்த்திக்...

2022-11-28 15:19:02
news-image

'சல்லியர்கள்' திரைப்படத்தின் இசை வெளியீடு

2022-11-28 11:30:23
news-image

வடிவேலு நடித்த 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'...

2022-11-26 17:20:26
news-image

65 வருட இசைப்பயணம்: பழம்பெரும் பின்னணிப்...

2022-11-26 17:19:47
news-image

அனுமதியின்றி நடிகர் அமிதாப் பச்சன் பெயர்...

2022-11-26 11:54:15
news-image

படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தரும் சூர்யா

2022-11-25 18:40:29
news-image

மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக்...

2022-11-25 18:44:44
news-image

ஸோம்பி த்ரில்லராக தயாராகும் 'எஸ்டேட்'

2022-11-25 18:45:00
news-image

'காரி' திரை விமர்சனம்

2022-11-25 18:53:57