முஸ்­லிம்­க­ளையும் – பௌத்­தர்­க­ளையும் மோத­விட்டு இனக்­க­ல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி நாட்டில் இரத்த ஆறை ஓட வைக்க இர­க­சிய சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. எனவே, அரசு இது­தொ­டர்பில் கவனம் செலுத்த வேண்­டு­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

வில்­பத்து காட­ழிப்பு மற்றும் போதைப் பொருள் தொடர்­பாக எனக்­கெ­தி­ராக ஆனந்த தேரர் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பகி­ரங்க விவா­தத்­திற்கு நான் தயார்? தேரர் தயாரா? என்றும் அமைச்சர் சவால் விடுத்தார்.

ச.தொ.ச. கட்­டடத்தொகு­தியில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

வில்­பத்து காடு அழிக்­கப்­பட்டு முஸ்­லிம்கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக கடந்த காலங்­களில் தொடர் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்ட நிலையில் இன்று சூழ­லி­ய­லா­ளர்கள் எனக் கூறிக்கொண்டு இன­வா­தத்தைத்தூண்டும் ஒரு அமைப்பு அண்­மையில் விஹா­ர­ம­கா­தேவி பூங்­காவில் வில்­பத்­து­காடு அழிக்­கப்­பட்டு முஸ்­லிம்கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்டி ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யது.

இதில் கருத்துத் தெரி­வித்த ஆனந்த தேரர் எனது நற்­பெ­ய­ருக்குக் களங்கம் ஏற்­ப­டுத்தும் விதத்தில் வில்­பத்து காட்­டுக்குள் இருந்து போதைப்­பொருள் கொண்டு வந்து கொழும்பில் விற்­பனை செய்­வ­தாக என்­மீது குற்றம் சாட்­டினார்.

இது முற்­று­மு­ழு­தான பொய்­யான செய்­தி­யாகும். மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு ஆத­ரவு வழங்க முன்­வந்­தது தொடக்கம் எனக்­கெ­தி­ராக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­ப­டு­கின்­றன.

அது மட்­டு­மல்­லாது,1990 களில் வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு எதி­ரா­கவும் இன­வாதப்பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் மூலம் நாட்­டுக்குள் முஸ்­லிம்கள் – பௌத்­தர்கள் மத்­தியில் மோதலை ஏற்­ப­டுத்தி இனக்­க­ல­வ­ரத்­திற்கு தூப­மிட்டு நாட்டில் இரத்த ஆறை ஓட­வைக்க சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இதன் மூலம் அர­சாங்­கத்தை நெருக்­க­டியில் தள்­ளு­வதே இந்த இனவாதச் சக்­தி­களின் நோக்­க­மாகும். எனவே அர­சாங்கம் இவ்­வி­ட­யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஏற்­க­னவே நாட்டில் இன­வா­தத்தைத் தூண்­டி­விட்­டதால் தான் 30 வருட கால யுத்­தத்தைச் சந்­தித்தோம் அழி­வு­க­ளுக்கு முகம் கொடுத்தோம்.இனியும் இன­வாதம் வேண்டாம். இனி­யொரு யுத்தம் வேண்டாம்.

ஆனந்த தேரரின் குற்­றச்­சாட்டு தொடர்­பாக எந்­த­வொரு இடத்­திலும் பகி­ரங்­க­மான விவா­தத்­திற்கு நான் தயார்? தேரர் தயாரா?எனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுக்­களைச் சுமத்தும் தேரர் அதனை சாட்­சி­யங்­க­ளுடன் நிரூ­பித்தால் நான் அர­சி­ய­லி­லி­ருந்து வெளி­யே­றுவேன்.

அத்­தோடு பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய ஆனந்த தேரர் அதனை வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால் ரூபா 100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என அறிவித்து சட்டத்தரணியூடாக கடிதம் அனுப்பியுள்ளேன்.

இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் கருத்துக்களை வெளியிடுவதைத் தடை செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்பட வேண்டும். அதனை நான் ஆதரிக்கின்றேன் என்றார்.