மனிதாபிமானம்

Published By: Nanthini

05 Jul, 2022 | 05:24 PM
image

னிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் மனிதாபிமானம் மிகவும் முக்கியமானது. என்னதான் உயரிய அந்தஸ்தில் சமூகத்தில் மதிக்கக்கூடிய ஒருவராக இருந்தாலும் அவரிடம் மனிதாபிமானம் என்ற ஒன்று இல்லையென்றால், எந்த பிரயோசனமும் இல்லை.

மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கு நேரம், காலம், இடம் என்று எதுவுமில்லை.

மனிதனுக்கு எப்போது, என்ன உதவி தேவைப்படுகிறதோ அப்போது அந்த உதவியை செய்வதற்கு முன்னிற்பதே மனிதாபிமானம். உனக்கு நான் இருக்கிறேன் தோழா/ தோழி என்று தோள் கொடுப்பதே மனிதாபிமானம்.

மனிதர்களிடத்தில் காணப்படுகின்ற மனிதாபிமான குணாதியங்களை போன்று சில சமயங்களில் விலங்குகள், பறவைகளிடத்தில் நாம் காணலாம்.

அது நாம் கற்பனையிலும் நினைக்க முடியாததொரு உணர்வை ஏற்படுத்தக்கூடியது.

இன்று வரை மனிதர்களுக்குள் சிறு ஒற்றுமையேனும் காண முடிகின்றதென்றால் அதற்குக் காரணம், அவர்களிடத்தில் கொஞ்சமேனும் ஒட்டிக்கொண்டிருக்கும் மனிதாபிமானம் தான்.

எங்கேயோ நடக்கும் கொலைகள், கொள்ளைகளை கேள்விப்படும்போது ‘இவர்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா?’ எனும் கேள்வி நம் மனதில் எழும். 

இன்றளவில் மனிதனை இயங்கச் செய்வது ஒருவர் மேல் இன்னொருவர் காட்டும் அன்பு, இரக்கம், கருணை என்பவை தான்.

தன்னைப் போலவே சக மனிதனையும் பார்ப்பவனே மனிதன்.

மனிதனுக்கு பல ஒழுக்க கட்டுப்பாடுகளும் இவ்வாறுதான் வாழவேண்டும் என்ற சில விதிமுறைகளும் உள்ளன. இவையெல்லாமே மனிதாபிமானம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கிவிடும்.

வீதியில் சென்று கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக முன்னே சென்று கொண்டிருப்பவர் தலை சுற்றி கீழே விழுந்துவிட்டார் என்றால், ‘நமக்கெதற்கு வம்பு?’ என்று செல்லாமல், தன்னால் முடிந்தளவு உதவி செய்வதே மனிதத்தின் பண்பு.

நாம் ஒருவருக்கு செய்கின்ற உதவி, அந்த உதவியைப் பெற்றுக் கொள்பவருக்கு பெரிய விடயமாக இருக்கலாம். அங்கே ஒரு மனிதனுக்குள் இன்னொரு மனிதன் கடவுளைப் பார்க்கிறான்.

நாம் வாழும் சூழலில் மனிதாபிமானமற்ற எத்தனையோ விடயங்கள் நித்தமும் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதில் நாம் கேள்விப்படுவது சிலதென்றால், கேள்விப்படாதவை பல.

வயது முதிர்ந்த பெண்மணியை கொலை செய்துவிட்டு வீட்டிலுள்ள நகை திருட்டு, வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலுள்ள தங்க சங்கிலி பறிப்பு, சகோதரர்களுக்கிடையில் நடந்த தகராறில் ஒரு பலி, பிறந்து சில நாட்களே ஆன சிசுவை வீதியில் வீசிய தாய்… இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.

இவ்வாறான பல சம்பவங்களுக்குப் பின்னால் முதன்மை காரணமாக இருப்பது மனிதாபிமானமற்ற மனங்களே.

கல்லுக்குள் ஈரம் இருப்பதைப் போல மனிதனுக்குள்ளும் மனிதாபிமானம் இருக்கிறது. அதை வெளிக்காட்ட வேண்டிய தருணத்தில் நிச்சயமாக வெளிக்காட்ட வேண்டும்.

– து.சிந்துஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right