'உங்கள் உடல் உங்களுக்கே சொந்தம்' - பாதுகாப்பற்ற தொடுகை ஆபத்தானது - பகுதி 1

Published By: Nanthini

23 Nov, 2022 | 04:35 PM
image

(மா. உஷாநந்தினி) 

"இன்றைக்கு நாட்டில் அதிகமாக இடம்பெறும் குற்றச் சம்பவங்களில் ஒன்று பாலியல் துஷ்பிரயோகம். பாலியல் வன்புணர்வு செய்வதற்கோ செய்யப்படுவதற்கோ வயதெல்லை கிடையாது. எந்த வயதினரும் எந்த வயதை சேர்ந்தவரையும் துஷ்பிரயோகம் செய்கிற நிலையை இந்நாட்களில் செய்திகள் வாயிலாக அறிந்துவருகிறோம்..... வளர்ந்த சிறுவர்கள் மட்டுமன்றி, பிறந்த குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். 

இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் முயற்சியிலேயே பல சிறுவர் அமைப்புகள் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தொடுகை முறையை கற்பித்து வருகின்றன..." என்கிறார், 'எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்' தொனியில் இயங்கிவரும் 'பீஸ்' (peace) அமைப்பின் ஸ்தாபகர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மொஹமட் மஹ்ரூப். இவர் 'தொடுகை' குறித்து கூறுகையில், 

"பொதுவாக பிள்ளைகளை பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், அக்கம் பக்கத்தவர்கள் அன்போடு தொட்டு முத்தமிடுவார்கள்.... தூக்கி கொஞ்சுவார்கள்.... கட்டியணைப்பார்கள்... ஆனால், அப்படி தொடுவதற்கு கூட ஓர் எல்லை இருக்கிறது. சிலர் 'அன்பாக கொஞ்சுகிறேன்' என்கிற சாக்கில் ஓயாமல் பிள்ளையை தொட்டுக்கொண்டே இருப்பார்கள். அதுவும் பிள்ளையின் பெற்றோர் அருகில் இல்லாதபோது என்றால் அவர்களது தீண்டல் வேறு மாதிரியாக இருக்கும். இதுவே தகாத முறையிலான தொடுகை. இது மிகவும் ஆபத்தானது.... குறிப்பிட்ட நபர் தன்னை தவறான முறையில் தீண்டுகிறார் என்பதை பிள்ளை அறியாத பட்சத்தில் அது மேலும் பிரச்சினைக்குரியதாக அமைந்துவிடும்....." என தெரிவித்தார். 

மேலும், தொடுகையின் இரு பிரிவுகளான நல்ல தொடுகை, கெட்ட தொடுகை, அதை எப்படி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது, எந்த வயது பிள்ளைகளுக்கு கற்பிப்பது, எந்த முறையில் கற்பிப்பது என பல கோணங்களில் மொஹமட் மஹ்ரூப் வழங்கிய குறிப்புகள் பின்வருமாறு...

ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின்படி 18 வயதுக்கு கீழ்ப்பட்டோர் சிறுவர்கள் ஆவர். 

நாட்டில் நிலவும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒன்று பாலியல் துஷ்பிரயோகம். 

இதில் உடல் சார்ந்த செயற்பாடுகள், உடல் சாராத செயற்பாடுகள் என இரு விதங்கள் உள்ளன. இவற்றில் உடல் சார்ந்த செயற்பாடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது, தகாத அல்லது முறையற்ற தொடுகை. 

தொடுகையினால் வரக்கூடிய பாதிப்புகள் இதிலிருந்தே ஆரம்பமாகின்றன. இது சிறுவர்களுக்கானது மாத்திரமன்றி, பெரியவர்களுக்கானதும் தான்... 

உடல் குறித்த அக்கறை

எமது உடலானது நம் ஒவ்வொருவருக்குமே பொக்கிஷம் போன்றது. அதன் ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியத்துவம் மிக்கது. கண், காது, மூக்கு, இதயம், கால்கள் என அனைத்து அவயவங்களின் இயக்கங்களும் நம்மை இயங்க வைக்கின்றன. அவற்றை முதலில் நாம் இனங்காண வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உறுப்புகளை பாதுகாக்க வேண்டும். அது நம் கடமை என்பதை நாமும் உணர்ந்து பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

தொடுகை பற்றி பிள்ளைகளுக்கு எதற்காக சொல்லிக்கொடுக்க வேண்டும்?

எல்லோரும் அறிந்ததுதான். பொதுவெளியில் அறிமுகம் இல்லாதவர்களுடைய பிள்ளைகளை பெரிதாக யாரும் தொட்டுப் பேசுவது கிடையாது. அதேவேளை பிள்ளைகளை தொடாமலே பேசுவது என்பது கூட எச்சந்தர்ப்பத்திலும் சாத்தியமானது அல்ல. 

சாதாரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை நாம் தொட்டுப் பேசுவோம். உறவினர்களுடைய, நண்பர்களுடைய குழந்தைகளையோ சற்று வளர்ந்த பிள்ளைகளையோ கூட தொடுவோம், தூக்கிக் கொஞ்சுவோம். குலுக்கி விளையாடுவோம், ஆசையாக முத்தமிட்டு அன்பை பகிர்வோம். 

ஒன்றை கவனிக்க வேண்டும். 

பிள்ளைகளை தொடவே கூடாது என்பதை நாம்  வலியுறுத்தவில்லை. ஆனால், 

எப்படி தொட வேண்டும்? 

யார் யார் தொட வேண்டும்? 

யார் தொடக் கூடாது? 

எந்தெந்த உறுப்புகளை தொட வேண்டும்?

இவ்வாறு சில வரைமுறைகள் உள்ளன.

தொடுகை (touch) என்பது... 

நம் உடலை பிறர் தொடுதல் என்ற விடயப் பொருளை, அடிப்படை பாலியல் கல்வி கற்றுத் தருகிறது. சிறுவர்களுக்கு உடல் சார்ந்து வரக்கூடிய ஆபத்துக்களை முன்கூட்டியே அறிந்து, அவற்றை தடுக்க மேற்கொள்ளும் முறைகளை இதனூடாக அறியலாம். 

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கல்வியும் இதுதான். 

சாதாரணமாக, குழந்தைகளை தொட்டுப் பேசுவது இயல்பான செயலே. அது ஓர் உணர்வை தூண்டக்கூடியது. அந்த உணர்வு சில சந்தர்ப்பங்களில் இதமானதாகவும் அமையலாம்; கெடுதலாகவும் அமையலாம். இவ்விரு தன்மைகளையும் பிள்ளைகள் பிரித்துணர வேண்டும். 

தொடுகையின் வகைகள்...

* குட் டச் (good touch)  

* பேட் டச் (bad touch) 

நல்ல தொடுகை - இதை 'பாதுகாப்பான தொடுகை' என்றும், கெட்ட தொடுகையை  'பாதுகாப்பற்ற தொடுகை' எனவும் புரிந்துகொள்ளலாம். இவற்றை முறையான தொடுகை - முறையற்ற தொடுகை என்றும் அழைக்கலாம்.

பாதுகாப்பான தொடுகை

பிள்ளையின் அம்மா, அப்பா, சகோதரர்கள், மிக நெருங்கிய உறவினர்கள் அன்புள்ளத்தோடு மட்டுமே அரவணைப்பதையும் கட்டியணைத்து முத்தமிடுவதையும் முறையான தொடுகை அல்லது பாதுகாப்பான தொடுகை எனலாம். 

சில வேளைகளில் ஆசிரியர்கள் பாராட்டும் பொருட்டு ஒரு பிள்ளையை கை குலுக்கி தட்டிக்கொடுப்பதும் பாதுகாப்பானது. இந்த தொடுகையால் பிள்ளைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இதனால் பிள்ளை முழுமையான அன்பையும் அக்கறையையும் பாராட்டையும் மட்டுமே உணர்கிறது. இந்தத் தொடுகைக்குப் பின்னால் தொடுபவரிடம் எந்த தீய எண்ணமும் நோக்கமும் இருக்காது.

பாதுகாப்பற்ற தொடுகை

பிள்ளையை நெருங்கும் ஒருவர் தொடக்கூடாத சில உறுப்புகளை தொட்டால், அது முறையற்ற தொடுகை அல்லது பாதுகாப்பற்ற தொடுகை (bad touch) என்கிறோம். 

இயல்பாக தொடக்கூடிய சாதாரண உறுப்புகளையும் மாறுபட்ட எண்ணத்தோடு அல்லது பிள்ளைக்கு கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொட்டால் அதுவும் பாதுகாப்பற்ற தொடுகை தான். 

அம்மா, அப்பா, சித்தி, பெரியம்மா, அத்தை போன்றோர் தங்கள் குழந்தைகளை குளிப்பாட்டும் சந்தர்ப்பங்களில் உறுப்புகளை தொடக்கூடும். அதில் எந்த தவறான நோக்கமும் இல்லாத பட்சத்தில், அதுவும் பாதுகாப்பான தொடுகையே. ஆனால், அன்பு செலுத்துகிறேன் என்கிற பெயரில் ஒருவர் பிள்ளையை ஓயாமல் தொடுவதும், அடிக்கடி முத்தமிட்டு இன்புறுவதும் ஒரு வகையில் 'பாதுகாப்பற்ற தொடுகையே'.

தொடக்கூடாத உறுப்புகள்

எந்த நபராயிருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளையின் அந்தரங்க உறுப்புகளை தொடவே கூடாது. குறிப்பாக உதடு, மார்பகங்கள், முன் பக்கம், பிட்டம் ஆகிய நான்கு உறுப்புகளை தொட அனுமதிக்கவே கூடாது.

தொடக்கூடிய உறுப்புகள்

கை, கால், தலை போன்றவை தொடக்கூடிய உறுப்புகளாக கூறப்படுகிறது. இருப்பினும், பிள்ளைக்கு சிலிர்ப்பு, கூச்சம், அசெளகரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அந்த உறுப்புகளை தொட்டால் அதுவும் தகாத தொடுகையே.

தவறான தொடுகையை உணர்ந்தால் செய்ய வேண்டியவை...

உங்கள் பிள்ளைகளை யாரேனும் முறையற்ற விதத்தில் தொட முற்பட்டாலோ தொட்டுவிட்டாலோ அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவை:

· "வேண்டாம்" என்று உரக்க சத்தமிட வேண்டும்.

· அவ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓட வேண்டும்.

· நம்பிக்கையான பெரியவரிடம் உடனே சொல்ல வேண்டும்.

· தேவை ஏற்பட்டால் தயங்காமல் பிறரிடம் உதவி கேட்க வேண்டும்.

· நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ அல்லது தான் நம்புகின்ற ஒருவரிடமோ சொல்ல வேண்டும்.

· விருப்பமில்லாத, அருவருப்பான முறையில் யாரேனும் நடக்க முற்பட்டால், உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயங்க கூடாது.

'உங்கள் உடல், உங்களுக்கே சொந்தம்' - இதை உங்கள் பிள்ளைகளுக்கு வலியுறுத்திச் சொல்லுங்கள், பெற்றோரே! 

(தொடரும்)

இந்த கட்டுரையின் பகுதி 2ஐ வாசிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்