வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலய தீர்த்தம் எடுக்கும் வீதியை மறித்த  இராணுவம் ! பரந்தன் முல்லைத்தீவு வீதியை மறித்து  மக்கள் போராட்டம் ! 

05 Jul, 2022 | 07:36 AM
image

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க  வட்டுவாகல்  சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை (4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்திலிருந்து தீர்த்தம் எடுப்பதற்காக முல்லைதீவு பெருங்கடலை நோக்கி அடியவர்கள் சென்றுள்ளனர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல்  சப்த கன்னிமார் ஆலயத்திற்கு தீர்த்தம் எடுப்பதற்கு செல்கின்ற தீர்த்தக்கரை செல்லும்  இராணுவத்தினர்  வீதியை மறித்து பாரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். இதுவரை காலமும் தீர்த்தமெடுப்பதற்கு  அனுமதி வழங்கிய இராணுவத்தினர் இம்முறை தீர்த்தம் எடுப்பதை தடை செய்துள்ளனர்.

குறித்த வீதி ஊடாக இராணுவத்தினர் தீர்த்தம் எடுக்க செல்ல விடாததன் காரணமாக நேற்று மாலை (04)குறித்த இடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு கொரோனா காலப்பகுதியில் இராணுவத்தினர் இந்த வீதியூடாக செல்ல விடாத நிலையில் மாற்று வீதி ஒன்றின் ஊடாக சென்று கடற்கரையில் தீர்த்தம் எடுத்து வந்திருந்த நிலைமையில் அந்த வழமைக்கு மாறான செயற்பாடு காரணமாக அந்த பகுதியிலே பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டு அந்த கிராமத்திற்கு அது ஒரு துக்க  நிகழ்வாக பதிவாகிய நிலைமையில் அவ்வாறு செய்ய முடியாது என இம்முறை குறித்த வீதியூடாகவே செய்ய வேண்டும் எனவும் தங்களுடைய சம்பிரதாயத்தை மாற்ற முடியாது என தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் இராணுவ முகாமுடன் ஆலய நிர்வாகத்தினர் கலந்துரையாடியதோடு மூன்று நாட்களுக்கு முன்பதாக எழுத்து மூலமாக ஆவணம் ஒன்றையும் வழங்கி உள்ளனர்.

இருப்பினும் இராணுவத்தின் உயர் பீடங்கள் இந்த பாதையால் சென்று தீர்த்தம் எடுப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்து இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை இராணுவ முகாம் வாயிலில்  வீதிக்கு குறுக்காக தடையை ஏற்படுத்தி உள்ளே செல்ல விடாது தடுத்திருந்தனர்.

இதன்போது அங்கு சென்றவர்கள் பல்வேறு வகையிலும் அவர்களிடம் கோரிய போதும் அவர்கள் எந்த விதத்திலும் அனுமதிக்காத நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது .

ஏற்கனவே அந்த விதிமுறைகளை மாற்றி ஏற்பட்ட விபரீதங்கள் காரணமாக இம்முறை அவ்வாறு செல்ல முடியாது எனவும் தங்களை செல்லவிடுமாறு பல மணி நேரமாக கூறியபோதும் ஒன்பது முப்பது மணி வரை அவர்கள் அதற்கு சம்மதிக்காத நிலையிலே மீண்டும் இம்முறையும் மாற்று பாதை ஒன்றினூடாக  தீர்த்தமெடுக்கும் அணியினர் சென்ற அதே வேளையில் அந்த இடத்தில் ஒன்றுகூடி இருந்த ஏனைய மக்கள் முல்லைதீவு பரந்தன் பிரதான வீதியில்வட்டுவாகல்  பாலத்திற்கு அருகாமையில் வட்டுவாகல்  சப்த கன்னிமார் ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரித்து வீதி தடை ஏற்படுத்தியிருந்த இடத்திற்கு வருகை தந்து இராணுவத்தினரை ஆலய கடமைகளுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் ஆலைய காணியில் இருந்து வெளியேறுமாறு மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் வீதியில் இறங்கி  போராட முற்பட்ட வேளையிலே சுமார் 50-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆயுதம் தாங்கிய நிலையில் குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டுவரப்பட்டு குறிப்பிட்ட இடத்திலே சில மணி நேரமாக பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னணியில் தங்களுடைய ஆலய கடமைக்கு ஒத்துழைக்காத இராணுவம் ஆலய  காணியில் இருந்து  வெளியேற வேண்டும் என்ற மக்களுடைய தொடர்ச்சியான கோரிக்கையை அடுத்து குறித்த பகுதியில் இருந்த மக்களினுடைய காணியில் இருந்து இராணுவத்தினர் தங்களுடைய பொருட்களை அகற்றி குறித்த இடத்திலிருந்து வெளியேறுவதாக  உறுதி அளித்து உடனடியாக இரவோடு இரவாக  குறித்த இடத்திலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த இடம் இராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில்   உடனடியாகவே மக்கள் குறித்த இடத்தினை  எல்லை படுத்தி அதனை வேலியடைகின்ற நிலையில் இது தற்போது ஈடுபட்டுள்ளதோடு குறித்த காணி சப்த கன்னிமார் ஆலயத்துக்குரிய காணி என  பெயர்  பலகை ஒன்றையும் நாட்டியுள்ளனர் .

இதேவேளை குறித்த தீர்த்தமெடுக்க செல்கின்ற வீதியில் இராணுவத்தினர் தங்களுடைய இராணுவ முகாம் வீதியென பெயரிடப்பட்டதனால்  அந்த பெயரை  மாற்றுவதற்கும்  முற்பட்டிருக்கின்றனர் தொடர்ச்சியாக அந்த இடத்திலேயே தற்போதும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றதோடு இந்த இராணுவத்தினர் அந்த இடத்திலிருந்து முற்று  முழுதாக அகல வேண்டும் என கோரி மக்கள் அந்த இடத்திலேயே தற்போது வரை இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right