மாணவர்களின் நலன் கருதி 100 பேரூந்துகளை வாடகை அடிப்படையில் வழங்க அவதானம் - பந்துல

By Vishnu

04 Jul, 2022 | 08:59 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு நகர் உட்பட சன நெரிசல்  உள்ள பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்திய நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தாத நிலையில் உள்ள 100 பேரூந்துகளை வாடகை அடிப்படையில் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பெண் நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்  மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (4) பாராளுமன்றம் கூடிய போது எதிர்தரப்பினர் முன்வைத்த வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு  பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பேரூந்து கட்டண அதிகரிப்பினால் பொது பயணிகள் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களை எமமால் நன்கு விளங்கிக்கொள்ள  முடிகிறது.பொது போக்குவரத்து சேவையினை விரிபுப்படுத்தும் நோக்கில்  புகையிரத சேவையை புதுக்கிக்க விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கொழும்பு உட்பட சன நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையின் கட்டணம் அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்த இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தாத நிலையில் உள்ள 100 பேரூந்துகளை ஒவ்வொரு தரப்பினருக்கு வாடகை அடிப்படையில் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வாடகை அடிப்படையில் வழங்கப்படும் பேரூந்துகள் பின்னர்,இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைத்துக்கொள்ளப்படும்.குறித்த பேரூந்துகளில் பயணிக்கும் மாணவர்களின் நலன் கருதி பெண் நடத்துனர்கள்  பணிகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளார்கள்.முதலில் மாதிரி திட்டமாக கொழும்பு நகரில் செயற்படுத்தப்படும் இத்திட்டம் காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் விரிவுப்படுத்தப்படும்.

அத்துடன் இடைக்கால பாதீட்டின் ஊடாக இந்தியாவில் இருந்து 500 பேரூந்துகளை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஊடகவியலாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்னகள்.

ஊடக நிறுவனங்களுக்கு தேவையான எரிபொருளை அரச போக்குவரத்து சபை ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் இயலுமை கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right