நாடு தீப்பற்றி எரியும் நிலையில் உள்ளது - விமல் வீரவன்ச

By Digital Desk 5

04 Jul, 2022 | 03:01 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும்  நம்பிக்கை கிடையாது. நாடு தீப்பற்றி எரியும் நிலையில் உள்ளது. 

நெருக்கடியின் பாரதூரதன்மையினை உணர்ந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் வலியுறுத்தினார்.

சபாநாயகர் தலைமையில் (04) திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடிய போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சாதாரண சூழ்நிலையில் பாராளுமன்றம் கூடவில்லை. நாடு சுய முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக எரிபொருள்  வரிசை நாளாந்தம் பல கிலோ மீற்றர் தூரம் நீண்டு செல்கிறது.

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் நிலவும் நெருக்கடி தொடர்பில் எழுப்பும் கேள்விகளுக்கு  பதிலளிக்க பிரதமரும், வலுசக்தி அமைச்சரும் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

நாடு மிக மோசமான நெருக்கடியினை நோக்கி செல்கிறது.தற்போதைய நிலைமையை காட்டிலும்  மோசமான நெருக்கடி கிடையாது என குறிப்பிட வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கை கிடையாது. மக்களால் புறக்கணிக்கப்பட்டு தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகி பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டவர் மீது எவரும் நம்பிக்கை கொள்ள போவதில்லை.

அரசாங்கத்தின் மீது தேசிய மட்டத்திலும்,சர்வதேச மட்டத்திலும் நம்பிக்கை கிடையாது,ஆகவே தற்போதைய நிலைமையின் பாரதூர தன்மையை கருத்திற்கொண்டு  மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைய வேண்டும்.

பாராளுமன்றில் கேள்வி,பதில் கோரலுக்காக  காலம் ஒதுக்கப்பட்டு வாதபிரதிவாதங்களை முன்னெடுப்பது சமூக கட்டமைப்பின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. ஜனாதிபதி மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளை அறியாமல் உள்ளார் என்றார்.

அது தற்போதைய பிரச்சினையல்ல, அதனை தனிப்பட்ட உரையில் குறிப்பிடுங்கள் என சபாநாயகர் குறிப்பிட்டார.

அவ்வாறு குறிப்பிட வேண்டாம்,உங்களுக்கு எரிபொருள் உள்ளதால்  குறிப்பிட வேண்டாம்.மக்கள் மிக மோசமான நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள்.மக்கள் திருப்தியடையும் வகையிலான நிவாரணத்தை வழங்கும் எவ்வித திட்டங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

எதிர்க்கட்சியில் உள்ளதால் தற்போதைய நிலை ஊடாக குறுகிய நோக்கத்தை பெற்றுக் கொள்ள முயற்சிக்க போவதில்லை.பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் தனிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வோம்.துரதிஸ்டவசமாக தற்போதைய அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் நம்பிக்கை கிடையாது.

 நாடு  தீ பற்றி எரியும் நிலையில் உள்ளது.பிரச்சினைகளுக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றினைய வேண்டும்.மோசமான நிலையில் இருந்துக்கொண்டு தேவையில்லாத விடயங்கள் குறித்து பேசுவதால் நெருக்கடி மேலும் தீவிரமடையும்.

இதன்போது குறுக்கிட்டு கருத்துரைத்த  சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சகல கட்சி தலைவர்களின் தீர்மானத்திற்கமைய சபையின் கூட்டத்தொடர் இடம் பெறும் ஒழுங்குமுறை தீர்மானிக்கப்பட்டது.சபை நடவடிக்கைகயை நாம் தனிப்பட்ட முறையில் தீர்மானிக்கவில்லை.

எரிபொருள் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.அமைச்சர்கள் எவருக்கும் தனிப்பட்ட முறையில் எரிபொருள் வழங்கப்படுவதில்லை.நாங்களும் வரிசையில் இருந்து தான் எரிபொருளை பெற்றுக்கொள்கிறோம்.எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சபாநாயகர் தலைமையில் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கலாம் என்றார்.

இதனை தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் ஆசனங்களில் இருந்து எழுந்து உரையாற்ற வாய்ப்பு கோரியதால் சபையில் அமைதியற்ற தன்மை நிலவியது.

'உறுப்பினர்களே பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் தீர்மானத்திற்கமைய இன்றைய சபை நடவடிக்கையினை முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள்,ஏனைய விடயங்கள் தொடர்பில் வேறுப்படுத்தப்பட்ட வகையில் உரையாற்றுங்கள்  என சபாநாயகர் சபைக்கு அறிவுத்தினார்.

பாராளுமன்றின் செயற்பாடுகள் தொடர்பில்  நாட்டு மக்கள் என்ன நினைப்பார்கள்.மக்களின் பிரச்சினை குறித்து ஏன் உணர்வு பூர்வமாக அவதானம் செலுத்துவதில்லை.

உணர்வற்ற பாராளுமன்றம் என்பதை எடுத்துக்காட்டுவதா எமது பொறுப்பு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்படுவது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right