தேசிய அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயார் - லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் எடுத்துரைப்பு

By Digital Desk 5

04 Jul, 2022 | 02:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் தேசிய அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார் என எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (04) திங்கட்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை தொடர்பாக ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி விமல் வீரவனச தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்றே நாங்கள் தெரிவித்து வருகின்றோம்.

தற்போது மஹாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி இருக்கின்றனர். 

அதில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண அனைவரும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி இருக்கின்றது.

மஹாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளதன் பிரகாரம் தேசிய அரசாங்கம் அமைக்க நாங்கள் தயார். அரசாங்கமே இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தேசிய அரசாங்கம் தொடர்பாக இப்போது எதிர்க்கட்சி கதைக்கின்றது.

ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஆரம்பமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் யாராவது ஒருவர் அதனை பொறுப்பெடுத்தார். பிரதான எதிர்க்கட்சி இதனை மறுப்பதாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்க தயார். அந்த கடிதத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் கேட்டிருந்தது என்றார்.

இதன்போது எழுந்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி அரசாங்கம் ஒன்றை அமைத்திருக்கின்றார். அதன் பிரகாரம் அரசாங்கம் செயற்படுகின்றது. 

என்றாலும் சிலர் பாராளுமன்றத்தை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல முற்படுகின்றனர். அதனை அறியாமலே சிலர் அந்த பாரிய குற்றச்செயலை செய்வதற்கு செயற்படுகின்றனர். பிரதமர் பதவி குறித்து தற்போது பேசி பயன் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right