என்.கண்ணன்
‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்’ என்பார்கள். இப்போது அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
எரிபொருள் நெருக்கடி நாட்டையே புரட்டிப் போட்டு விட்டது. வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வாகனங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் பார்க்க முடிகிறது.
மீண்டும் சைக்கிள் பயணங்கள் களை கட்டியிருக்கின்றன.
1980களுக்கு முன்னர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் எல்லோரிடமும், சைக்கிள் இருந்திருக்காது. அப்போது பெரும்பாலும் வீட்டுக்கு ஒரு சைக்கிள் தான்.
அதனால் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் அது பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை.
ஆனால், 1990களில் பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் பெரும்பாலானோரிடம், சைக்கிள்கள் இருந்தன.
அப்போது ஒரு வீட்டில் இரண்டு மூன்று சைக்கிள்கள் என்ற நிலை வரத் தொடங்கி விட்டது.
வடக்கில் போர் நெருக்கடி, பொருளாதாரத் தடை என்பனவற்றினால், வாகனங்கள், மின்சார வசதிகள் ஏதும் இல்லாத போது, தனியார் மினி பஸ்கள், தட்டி வான்களை விட்டால், சைக்கிள் தான் ஒரே வாகனம்.
சைக்கிளை இத்தனை தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதை,உலகத்துக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்த காலம் அது.
பாரம் ஏற்றிக் கொண்டு, சோளக காற்றை எதிர்த்து சைக்கிள் ஓடுவது இலகுவல்ல.
ஆனாலும் எல்லாக் காலங்களிலும், கைகொடுத்து நின்றது சைக்கிள் தான். சைக்கிள் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என இருந்த காலம் அது.
அப்போது, வடக்கிற்கு புதிய சைக்கிள்களை கொண்டு செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
ஒருவர் வேண்டுமானால் ஒரு சைக்கிளை ஓடிக் கொண்டு, ஓமந்தை சோதனைச் சாவடியைக் கடந்து வடக்கிற்கு செல்லாம்.
வவுனியாவில், அப்போது 2500 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஏசியா சைக்கிளை புதிதாக வாங்கி ஓட்டிக் கொண்டு, யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து, பலர் 5000 ரூபாவுக்கு விற்றனர்.
இப்போது, சைக்கிள் விலை, பல மடங்கு ஏறி விட்டது. 60 ஆயிரம் ரூபா வரை விற்கப்படுகிறது சைக்கிள்.
சைக்கிள் கடைகளில் சைக்கிள் இல்லை. முன்னரே ஓடர் கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற நிலை வந்து விட்டது.
முன்னர், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் மூடிய பொருளாதார முறைமையில் இருந்தன.
அப்போது, உள்நாட்டுத் தயாரிப்பு கார்களை வாங்குவதற்கு. முன்னரே ஓடர் கொடுக்க வேண்டும்.
அந்த வரிசைப்படி கார் கையில் கிடைக்க இரண்டு மூன்று அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகள் கூடச் செல்லும்.
அதுபோலத் தான், இப்போது சைக்கிளுக்கு முன்கூட்டியே ஓடர் செய்யும் வழக்கம் வந்திருக்கிறது.
1990களிலும், 2000களிலும், ஒரு வீட்டில் இரண்டு மூன்று சைக்கிள்கள் என்ற நிலை, பின்னர், ஒரு வீட்டில் இரண்டு மூன்று மோட்டார் சைக்கிள்கள், கார்கள் என்று மாறியது.
பொருளாதார வளர்ச்சியும், கால மாற்றமும், மக்களின் பழக்க வழக்கங்களை அடியோடு மாற்றிப் போட்டது.
சைக்கிள்களில் சென்றவர்கள், மோட்டார் சைக்கிள்களில் வலம் வரத் தொடங்கினார்கள்.
மோட்டார் சைக்கிள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவர்கள் பலர்.
சைக்கிளில் யாராவது சென்றால் வேடிக்கையாகவும், ஏளனமாகவும் பார்க்கின்ற நிலை, வடக்கில் சில வாரங்களுக்கு முன்னர் கூட இருந்தது.
எல்லாவற்றையும் மாற்றிப் போட்டிருக்கிறது பெட்ரோல் தட்டுப்பாடு.
இப்போது பெற்றோல் அரிதான பொருள். மிகவும் விலை உயர்வான பொருள். யாராவது மோட்டார் சைக்கிளில் சென்றால் இப்போது, அவன் பதுக்கி வைத்திருக்கிறான் போல என்று பேசிக் கொள்ளும் யுகம் இது.
சைக்கிள் கடைகளின் கூட்டம் அலை மோதுகிறது.
பெற்றோல் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்து களைத்துப் போனவர்கள் இப்போது, வீட்டில் கிடந்த பழைய சைக்கிளைத் தூக்கிக் கொண்டு சைக்கிள் திருத்தும் நிலையங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
கால மாற்றத்தினால் அழிந்து போய்க் கொண்டிருந்த தொழில்களில் ஒன்று தான், சைக்கிள் திருத்தும் தொழில்.
இப்போது சைக்கிள் திருத்தும் கடைகளையும், சைக்கிள் உதிரிப்பாகங்களையும் தேடிப்பிடிப்பது பெரும் பாடாகியுள்ளது.
சைக்கிள் பாவனை குறையும் போது, அவற்றை திருத்தும் தொழிலை நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவது இயல்பு தான்.
திடீரென இப்போது எல்லோரும், பழைய , துருப்பிடித்த சைக்கிள்களை தூக்கிக் கொண்டு சைக்கிள் திருத்தகங்களை நோக்கி செல்லும் போது, அவர்கள் திணறுகிறார்கள்.
புதிய சைக்கிள் வாங்க முடியவில்லை. பழைய சைக்கிளாவது வாங்கலாம் என்று சைக்கிள் திருத்தகங்களை நாடுபவர்களுக்கு, இப்போது சைக்கிள் வாங்க முடியாது என்ற பதில் தான் வருகிறது.
சைக்கிள் திருத்தகங்களில் காத்திருக்கும் சைக்கிள்களில் பெரும்பாலானவை பழைய இரும்புக்கு கூட பெறுமதியற்றவை.
ஆனாலும், காலம் அவற்றுக்கு மீள் உயிர் கொடுக்கும் நிலை வந்திருக்கிறது.
வாகனங்களில் இருந்து கீழே இறங்கிகப் பேச தயங்குபவர்கள் பலர் இன்று, வேறு வழியின்றி சைக்கிள்களை தேடி ஓடுகிறார்கள்.
இந்த நிலை வரும் என்று யாரும் கற்பனை கூடச் செய்யவில்லை. போர்க்கால அனுபவங்களை இன்று நாடு முழுவதும் கற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
காலச் சக்கரத்தின் சுழற்சியில் சைக்கிள்கள் இப்போது கதாநாயகன்களாகி விட்டனர்.
பாவம், மோட்டார் சைக்கிள்களும், கார்களும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில், கடும் வெயிலுக்கு மத்தியில், ஒரு வாரத்துக்கு மேலாக தவம் கிடக்கின்றன.
அவற்றை யாரும் இப்போது திருடுவதற்குக் கூட முன்வருவதில்லை.
ஆனால் சைக்கிள் திருட்டுகள் தான் அதிகமாகி விட்டன. எதற்கு மதிப்பு இருக்கிறதோ அது தான் திருடப்படும்.
அந்த வகையில் இப்போது, மதிப்புக்குரிய பொருளாக மாறியிருக்கிறது சைக்கிள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM