தொடரும் நெருக்கடி

Published By: Digital Desk 5

03 Jul, 2022 | 03:43 PM
image

குடந்தையான்

அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நடைபெறும் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள், அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க விவாதப்பொருளாக மாற்றம் பெற்றிருக்கிறது. 

தி.மு.க.விற்கு எதிராக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அவர் மறைந்த பிறகு புரட்சித்தலைவி (ஜெயலலிதா) அம்மாவினால் கட்டி பாதுகாக்கப்பட்டது. 

தற்போது அக்கட்சிக்கு உண்மையிலேயே ‘தலைமை’ இல்லாமல், வழிநடத்த வழிகாட்டிகள் இல்லாமல், இரண்டாம் கட்ட மற்றும் கழகத்தின் தலைமை  நிலைய முன்னணி நிர்வாகிகளால் நடத்தப்படுகின்றமை துரதிஷ்டம் தான். 

இதற்கு காரணம் முதல்வராகவும், கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிய பன்னீர்செல்வம் தான் என்று ஒரு தரப்பினரும், கட்சியின் விதிகளுக்கு அப்பாற்பட்டு, கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தான் என்று மற்றொரு பிரிவினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி கொள்கிறார்கள். 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எஸ்.டி.சோமசுந்தரம் எதிர்த்து நமது கழகம் என்ற கட்சியை தொடங்கி காணாமல்போனார். புரட்சித்தலைவி அம்மாவை எதிர்த்து திருநாவுக்கரசர் கட்சியை தொடங்கி, தோல்வியடைந்து, பல்வேறு கட்சிகளுக்கு தாவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் அடைக்கலமாகி, அக்கட்சியின் மக்களவை உறுப்பினராக அரசியல் தடம் தெரியாமல் இருக்கிறார்.

இதேபோன்றதொரு நிலைமை தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று பெரும்பான்மையான ஆதரவுடன் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ளாமல், அவருக்கு எதிராக தொண்டர்களின் ஆதரவில்லாத பன்னீர்செல்வம் விரைவில் அரசியலிலிருந்துக் காணாமல் போய்விடுவார் என்று கணிக்கப்படுகின்றது. 

தி.மு.க.வில் பேராசிரியர் அன்பழகனுக்கு மரியாதையும், உரிய அந்தஸ்தும் கொடுத்து கருணாநிதி வைத்திருந்ததை போல், அருமையான வாய்ப்பு வாய்ப்பை எடப்பாடி பழனிச்சாமி பன்னீர் செல்வத்திற்கு வழங்க ஆர்வமாக காத்திருந்தார். ஆனால் தேசிய கட்சி மற்றும் தி.மு.க.வின் மறைமுக ஆலோசனையின் பெயரில் பன்னீர்செல்வம் செயல்படுவதால் அவர் சொந்த கட்சியினராலேயே ‘துரோகி’ என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார். 

எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, எப்படி கட்சியின் நிர்வாகிகளை கையாள்தையும் துல்லியமாக                              தெரிந்து வைத்திருப்பதால் தான் அவரால் ஒற்றை தலைமையை நோக்கி காய் நகர்த்தி வெற்றி பெறமுடிந்திருக்கின்றது.

ஆனால் கட்சி ஒருவரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தவுடன், அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஆனால் முதல்வராக பதவி ஏற்ற நான்காண்டு காலத்தின் கூட அவர் செல்வாக்கப் பெற்ற தலைவராக இல்லை. 

பா.ஜ.க.வை மறைமுகமாக ஆதரிப்பதில் பன்னீர் செல்வத்திற்கு சளைத்தவரல்ல எடப்பாடி. இருப்பினும் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு இருப்பதால் தற்போது அவரது தலைமையே சரியானது என்ற வாதமே அதிகமாகவுள்ளது.

‘இரட்டைத்தலைமை’ விவகாரத்தில், சசிகலாவை முன்னிறுத்தி, அவரை பகடைக்காயாக்கி, எப்படி ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை பன்னீர்செல்வம் பெற்றாரோ, அதேபோன்றதொரு உத்தியைப் பயன்படுத்தி, பன்னீர் செல்வத்தையே பலிகடா ஆக்கி, சொந்தக் கட்சியினரே அவரை ‘துரோகி’ என்று சொல்ல வைத்து,  ‘ஒற்றை தலைமை’க்கு உயர்ந்திருக்கிறார் எடப்பாடி.

அவ்வாறானவர், வலிமைமிக்க ஒற்றை தலைமையாக நீடிப்பார் என எந்த உத்தரவாதத்தையும், அவரை தெரிவு செய்திருக்கும் முன்னணி மற்றும் மூத்த நிர்வாகிகள் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் ‘ஒற்றை தலைமை’ என்று முன்மொழியப்பட்டிருக்கும் எடப்பாடிக்கு எதிராக, பன்னீர்செல்வம், சசிகலா, பா.ஜ.க. தி.மு.க. என்று ஒவ்வொருவரும் தங்களுடைய கோணங்களிலிருந்து எதிர்த் தாக்குதலை தொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். 

சொந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மனநிலையை துல்லியமாக அவதானிக்க இயலாதவாராய், பதவியில் நீடிக்க வேண்டும் என்ற பிடிவாதம் காரணமாக, கட்சியின் ஜனநாயகத் தன்மைக்கு எதிராக பன்னீர்செல்வம் சென்றுவிட்டார், அவரால் மீண்டும் கட்சிக்குள் திரும்ப இயலாத தொலைவிற்கு பயணப்பட்டு விட்டார்.

தற்போது கூட ஜூலை 11ஆம் திகதியன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், அதற்குமுன் தங்களையும் கேட்க வேண்டும் என்ற மனு ஒன்றினை பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்திருக்கிறது. 

இதன்மூலம் கட்சிக்குள் தனக்கான முக்கியத்துவம் கட்டாயம் வழங்கப்பட்டாகவேண்டும் என்ற அவரது நிலைப்பாடு உறுதியாக தெரிய வந்தாலும், அவரை தீவிரமாக எதிர்க்காமல், திசைதிருப்பும் உத்தியை மட்டுமே எடப்பாடி ஆதரவாளர்கள் மேற்கொள்கிறார்கள்.

மூன்று சட்டமன்ற உறுப்பினர், ஒரு மக்களவை உறுப்பினர், ஒரு மாநிலங்களவை உறுப்பினர், மூன்று அல்லது நான்கு மாவட்ட செயலாளர்கள் என்ற அளவிற்கு பன்னீர்செல்வத்தின் கட்சி செல்வாக்கு அவரை நிரந்தரமாக காப்பாற்றுமா? 

சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தி, தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி, தனக்கான ஆதரவு தளத்தை ஏற்படுத்திக்கொண்ட பன்னீர்செல்வம் மீண்டும் ஏதேனும் புதிய பாணியிலான அரசியலை பின்பற்றி, மாயம் செய்தால் மட்டுமே அவரால் மீண்டும் அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையை பெற இயலும். இது நடைபெறுமா? 

எடப்பாடி பழனிச்சாமி, கட்சியைக் கைப்பற்றினாலும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வரா? அவரது தலைமையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்விகள் எல்லாம் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் விடைகாண்பதாக இருந்தால் ஜுலை முழுவதும் பொறுத்திருக்க வேண்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் கிடைத்த திருப்தி எவ்வளவு காலத்திற்கு...

2023-03-22 16:47:59
news-image

புவிசார் அரசியல் எனது அரசாங்கத்தின் நோக்கங்களிற்கு...

2023-03-22 12:11:32
news-image

யாழ்.எம்.பி.யோகேஸ்வரன் நினைவும் ஐ.தேக.தேர்தல் வன்முறையும்

2023-03-21 14:46:01
news-image

அனைத்து அதிகாரமும் கொண்ட இலங்கை ஜனாதிபதி...

2023-03-20 16:58:31
news-image

மாமனாரும் மருமகனும் சர்வகட்சி மாநாடுகளும்

2023-03-19 17:53:33
news-image

அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை

2023-03-18 16:50:34
news-image

மும்முனை முரண்பாட்டால் கேள்விக்குள்ளாகும் ஜனநாயகம்

2023-03-18 16:49:20
news-image

வியட்நாம் ‘மை லாய்’ படுகொலையின் மாறாத...

2023-03-18 16:48:24
news-image

சரிவை நோக்கும் அமெரிக்க வல்லாண்மை?

2023-03-18 16:38:18
news-image

இலங்கை ரூபாயின் எதிர்காலம்

2023-03-19 12:36:52
news-image

நீளும் நீதிக்கோரிக்கை

2023-03-18 14:06:47
news-image

சிக்கல்களை ஏற்படுத்தும் வொஷிங்டன், சீன இசைவு

2023-03-18 13:59:37