மாற்றம் அழுத்தத்துடனான மாற்றமாக இருக்கக்கூடாது - யோகாசன பயிற்றுவிப்பாளர் வியாஸ கல்யாணசுந்தரம் 

By Nanthini

02 Jul, 2022 | 06:25 PM
image

(பொன்மலர் சுமன்)

ன்று இலங்கை மக்கள் பல்வேறு வகையான பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மனதை இங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த மாற்றம் என்பது இயல்பான மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, அழுத்தத்துடனான மாற்றமாக இருக்கக் கூடாது என சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையத்தின் தலைமை யோகாசன பயிற்றுவிப்பாளர் வியாஸ கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அனுஷ்‍டிக்கப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘நாம் எதைப் பற்றி சிந்திக்கின்றோமோ, அதுவாகவே ஆகின்றோம்’ என்பதே இவ்வாண்டுக்கான சர்வதேச யோகா தின தொனிப்பொருள் ஆகும்.

எட்டாவது ஆண்டாக கடைபிடிக்கப்படும் இந்த யோகா தின நிகழ்வினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம், சுவாமி விவேகானந்த கலாசார நிலையம் மற்றும் இலங்கையில் உள்ள முன்னணி யோகா நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத். கே. ஜேகப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், செந்தில் தொண்டமான், சுமந்திரன் முதலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது யோகாசன பயிற்றுவிப்பாளர் வியாஸ கல்யாணசுந்தரம் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்ததாவது:

மனித வாழ்க்கையில் யோகாசனம் எவ்வாறான தாக்கத்தை செலுத்துகின்றது?

நாம் பிறந்தது முதல் எல்லா செயற்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் யோகா செய்துகொண்டுதான் இருக்கின்றோம். மனிதனுக்கு வாழ்க்கையின் போக்கில் ஏற்படக்கூடிய மன அழுத்தம், வேகம் போன்ற காரணிகளால் உடம்பிலே பல்வேறு வகையான மாற்றங்கள் மனிதனுக்கு தெரியாமலே நடக்கின்றன.

மனிதனுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது அவனது மூலையிலும் உடம்பிலும் பல்வேறு வகையான இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த இரசாயன மாற்றங்கள் உடம்பிலே அடிக்கடி ஏற்படுகின்றபோது உடலில் பல்வேறு வகையான உபாதைகள் உண்டாகின்றன. இந்த உபாதைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் தவிர்ப்பதற்காகவுமே இந்த யோகக்கலை பயன்படுகின்றது.

பத்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகக்கலை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை மக்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்காகவும், ஆன்மிக முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். 

இன்றைய இறுக்கமான சூழலில் மக்கள் யோகா மூலம் எவ்வாறான மீட்சியை பெறலாம்?

இன்று இலங்கை மக்கள் பல்வேறு வகையான பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மனதை இங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. இந்த மாற்றம் என்பது இயல்பான மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, அழுத்தத்துடனான மாற்றமாக இருக்கக் கூடாது. 

சிலவேளை நீங்கள் கவனித்திருக்கக்கூடும்... அத்தியாவசிய தேவைகளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான சூழலிலே பல்வேறு சவால்கள் நம்மை சூழ்ந்து அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்த அச்சம் அடுத்து நமக்கு என்ன நடக்குமோ என்ற கேள்வியையும் கொண்டு வருகின்றது. 

இத்தகைய நிலையில் ஆழமான மூச்சுப் பயிற்சிகள், நிதானமான தியானங்களை செய்து வந்தால், எத்தகைய சவால்கள் ஏற்படினும், அவற்றை இயல்பாக எதிர்கொள்ளக்கூடிய மனித ஆற்றலை யோகக்கலை வழங்கும்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கக்கூடிய அரும்பெரும் பொக்கிஷத்தை வெளிக்கொண்டு வருவதே யோகக்கலை ஆகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right