இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து அமெரிக்கத் தூதுவரின் அபிப்பிராயம்

Published By: Digital Desk 5

02 Jul, 2022 | 02:11 PM
image

(நா.தனுஜா)

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மிகவும் தீவிரமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 இருப்பினும் அவை தீர்வு காணமுடியாத அல்லது கடந்துவரமுடியாத சவால்கள் அல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இப்பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு புத்தாக்க சிந்தனை, தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் விட்டுக்கொடுப்பு என்பவற்றுடன் கூடியதாக அரசியல் உறுதிப்பாடும் விரைவான நடவடிக்கைகளும் இன்றியமையாதவையாகும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணல், மனிதவளத்தின்மீது முதலீடு செய்வதுடன் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல்,  வணிகச்சூழல் மற்றும் முதலீட்டு செயற்திட்ட இடைவெளி என்பன தனியார் துறையினரை உள்வாங்கக்கூடியவகையில் விரிவுபடுத்தப்படுத்தப்படல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆகியவற்றை நோக்கி நிலைமாற்றமடைதல்,  அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு வருமானம் ஆகியவற்றை மேலும் அதிகரித்தல் ஆகிய 5 நடவடிக்கைகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைவதற்கு இன்றியமையாதவையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இலங்கையின் வர்த்தகப்பேரவையின் (சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) 183 ஆவது வருடாந்தப்பொதுக்கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்களம் மற்றும் திறைசேரி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரின் இலங்கைக்கான மிகமுக்கிய விஜயம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது. 

அவ்வதிகாரிகள் குழு இலங்கையில் அரசியல் பிரதிநிதிகள், பொருளியல் நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்தனர். 

பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவக்கூடிய வழிமுறைகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கையர்கள் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள், எதிர்காலத்தில் நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்கியதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. 

அதுமாத்திரமன்றி தற்போது வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை ஓரளவிற்கு எளிதாக்கல் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரல் ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கு கடன் வழங்குனர்களுடனும், நிவாரண உதவிச்செயற்திட்டமொன்றுக்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனும் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் அவ்வதிகாரிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர்.

தற்போது இலங்கை அதன் வரலாற்றில் மிகவும் மோசமான சவாலான காலப்பகுதியில் இருக்கின்றது. 

எரிபொருளுக்கான வரிசைகள் நீண்டுசெல்வதையும், அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அதிகரித்துச்செல்வதையும் எம்மால் அவதானிக்கமுடிகின்றது. 

மின்விநியோகம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நாம் இருளில் இருப்பதுடன், விரக்தி மிகுந்த இலங்கையர்களின் குரல்களை அமைதிப்போராட்டங்களில் செவிமடுக்கமுடிகின்றது. 

நான் தினமும் நடத்தும் சந்திப்புக்களின்போது எதிர்காலம் குறித்தும், அடுத்த சந்ததி குறித்தும் தாம் கொண்டிருக்கும் கரிசனையை இலங்கையர்கள் பகிர்ந்துகொள்கின்றார்கள். 

இலங்கை முகங்கொடுத்திருக்கும் சவால்கள் மிகவும் தீவிரமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இருப்பினும் அவை தீர்வு காணமுடியாத அல்லது கடந்துவரமுடியாத சவால்கள் அல்ல.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கு புத்தாக்க சிந்தனை, தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் விட்டுக்கொடுப்பு என்பன அவசியமாகும். 

அதுமாத்திரமன்றி அரசியல் உறுதிப்பாடும் விரைவான நடவடிக்கைகளும் இன்றியமையாதவையாகும். 

அதேவேளை இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் உறுதியான பாதைக்குக் கொண்டுவருவதற்கு எமது கூட்டிணைந்த முயற்சிகளை இரட்டிப்பாக்கவேண்டிய தருணம் இதுவாகும். 

முன்னெப்போதையும் விட இப்போது இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தக்கூடிய வாய்ப்பு தனியார்துறையிடம் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொருளாதார மீட்சிக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் பயனளிக்கக்கூடியவாறான நீண்டகாலத்தீர்வுக்கும் இலங்கை முன்னெடுக்கவேண்டிய 5 பிரதான நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முதலாவதாக கடன் நெருக்கடிக்குத் தீர்வுகாணப்படவேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டமை, சட்ட மற்றும் நிதி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டமை, கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டமை என்பன வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாகும். 

ஆனால் இலங்கையை மீண்டும் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்வதற்கு மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. 

அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிடைக்கப்பெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும். அதேபோன்று அரசாங்கம் மேற்கொள்ளும் மறுசீரமைப்புக்கள் இந்த நெருக்கடிக்கான அடிப்படைக்காரணத்திற்குத் தீர்வளிக்கும் வகையில் அமையவேண்டும்.

இரண்டாவதாக இலங்கை அதன் மக்கள்மீது முதலீடு செய்யவேண்டும். எவ்வித பாலின பாகுபாடுகளுமற்ற தொழிற்படையொன்றைக் கொண்டிருப்பது இன்றியமையாததாகும். 

எனவே இலங்கையில் வர்த்தகத்துறையில் பெண்களின் பங்களிப்பு மேலும் விரிவுபடுத்தப்படவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. 

அதேவேளை மக்களின் கோரிக்கைகளுக்கும் அவர்களது ஜனநாயகக் கோரிக்கைகளுக்கும் அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும். 

ஆகவே சுயாதீன கட்டமைப்புக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடமளித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைத்தல், சிவில் சமூக அமைப்புக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு இடமளிப்பதுடன் சிவில் சமூக இடைவெளிக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

மூன்றாவதாக வணிகச்சூழல் மற்றும் முதலீட்டு செயற்திட்ட இடைவெளி என்பன தனியார் துறையினரை உள்வாங்கக்கூடியவகையில் விரிவுபடுத்தப்படவேண்டும். 

நான்காவதாக தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு ஆகியவற்றை நோக்கி நிலைமாற்றமடையவேண்டும். 

ஐந்தாவதாக இலங்கை அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதிகளையும் முதலீட்டு வருமானத்தையும் மேலும் அதிகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளிலுள்ள ஆபத்தான கட்டிடங்கள் மற்றும் மரங்களை...

2023-12-11 21:18:06
news-image

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத்...

2023-12-11 20:57:33
news-image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50...

2023-12-11 21:36:10
news-image

நியாயமான வரிக்கொள்கையையே எதிர்பார்க்கிறோம் - நாமல்

2023-12-11 18:26:32
news-image

இந்தியத் தூதரை சந்திக்க வடக்கு எம்.பி.க்களுக்கு...

2023-12-11 18:22:58
news-image

தமிழர்களை இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை...

2023-12-11 13:48:37
news-image

காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

2023-12-11 18:34:53
news-image

ரணிலும் சஜித்தும் ஒருபோதும் இணையப்போவதில்லை :...

2023-12-11 18:31:27
news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17