(ரொபட் அன்டனி) 

கிளிநொச்சியில் அண்மையில் தீ விபத்தினால்  122 வர்த்தக நிலையங்கள் அழிவடைந்தமையை  ஈடுசெய்யும் நோக்கில்   150 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தை தொகுதியை அங்கு   நிர்மாணிப்பதற்கும் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 74 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குவதற்கும்  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே   ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:- 

கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 122 வர்த்தக நிலையங்கள் அழிவடைந்தன.  இது தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு  குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்  பாதிக்கப்பட்ட 122 வர்த்தக  நிலையங்களுக்கு  பதிலாக  நவீன வசதிகளை கொண்ட நவீன சந்தைத் தொகுதியொன்றை  150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாதிக்கப்பட்ட 122 வர்த்தகர்களுக்கும்  74 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கவும்   தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 97 மில்லியன் ரூபா செலவில்  நவீன வசதிகளுடன் கூடிய  தீ அணைக்கும் பிரிவொன்றை  கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்றம், மற்றும்  இந்து சமய விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து  கொண்டுவந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு  அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.