இலங்கை மகளிர் அணியை 4 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது இந்தியா

By Vishnu

01 Jul, 2022 | 07:57 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (01) வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 172 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 38 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியா முன்னிலை அடைந்துள்ளது.

இந்த தொடரானது 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுக்கு முன்னோடியாக நடைபெறும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் (தகுதிகாண்) தொடராகவும் அமைகின்றது.

முதல் 2 விக்கெட்களை 17 ஓட்டங்களுக்கு இழந்த இந்தியாவுக்கு அடுத்த 2 விக்கெட்களுக்காக அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் பகிர்ந்த இணைப்பாட்டங்கள் பெரிதும் கைகொடுத்தது.

3ஆவது விக்கெட்டில் ஷபாலி வர்மாவுடன் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த ஹார்மன்ப்ரீத் கோர், 4ஆவது விக்கெட்டில் ஹார்லீன் டியோலுடன் பெறுமதிமிக்க 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஷபாலி வர்மா 35 ஓட்டங்களையும் ஹார்மன்ப்ரீத் கோர் 44 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் (6) ஆட்டமிழந்தபோது இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

தீப்தி ஷர்மா (22 ஆ.இ.), பூஜா வஸ்த்ரேக்கர் (21 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இலங்கை பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஓஷாதி ரணசிங்க 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

அப் போட்டியில் முன்னதாக துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி சமரி அத்தப்பத்து (2), ஹன்சிமா கருணாரட்ன (0) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க இலங்கையின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் ஹசினி பெரேரா (37), ஹர்ஷிதா சமரவிக்ரம (28) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தை கொடுத்தனர்.

ஆனால், ஹசினி பெரேரா, காவிஷா டில்ஹாரி (0), ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய மூவரும் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

எனினும், நிலக்ஷி டி சில்வா திறமையாக துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றதுடன் அனுஷ்கா சஞ்சீவனியுடன் 6ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சஞ்சீவனி 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்வரிசையில் ஓஷாதி ரணசிங்க (8), அறிமுக வீராங்கனை ரஷ்மி சில்வா (7), இனோக்கா ரணவீர (12) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.

இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரேனுகா சிங் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பூஜா வஸ்த்ரேக்கர் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது போட்டி திங்கட்கிழமை (04)  நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right