ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் : ஒரு சில ரயில் சேவைகள் மாத்திரமே தாமதமடையும் - ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர்

By T Yuwaraj

01 Jul, 2022 | 06:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் பற்றாக்குறை பொதுபோக்குவரத்து சேவைத்துறையை முழுமையாக ஸ்தம்பிதமடைய செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கத்தினர் இன்று பகல் பொழுதில் இரண்டு  மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பொதுப்பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டனர்.

Articles Tagged Under: ரயில்வே திணைக்களம் | Virakesari.lk

பெரும்பாலான பொது பயணிகள் ரயில் சேவையினை மாத்திரம் முழுமையாக நம்பியுள்ள காரணத்தினால் சவால்களுக்கு மத்தியில் ரயில் சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது.ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் இருப்பினும் ஒரு சில ரயில் சேவைகளில் தாமதம் ஏற்ப்டும் என ரயில் திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக ஒருசில ரயில் தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒன்றினைந்த ரயில் சேவை சங்கம்

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து எதிர்வரும் 10ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ரயில்களை இயக்குவதற்கு மாத்திரம் எரிபொருளை வழங்கினால் மாத்திரம் போதாது, ரயில் சேவையாளர்கள் பணிக்கு சமுகமளிக்க எரிபொருள் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை வலியுறுத்தினோம் இருப்பினும் அதிகாரிகள் அது குறித்து அவதானம் செலுத்தவில்லை என தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

பணிப்புறக்கணிப்பு போராட்டம்

ரயில் சேவையாளர்கள் சேவைக்கு சமுகமளிப்பதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால் இன்றைய தினம் ரயில் தொழிற்சங்கத்தினர் இரண்டு மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. அத்துடன் ரயில் சேவையிலும் தாமதம் ஏற்பட்டன.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் இன்று பகல் கோட்டை, மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இடம்பெறும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

அத்துடன் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி புறகப்படவிருந்த ரயில் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமாக புறப்பட்டதாக கோட்டை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவையாளர்கள் சேவைக்கு சமுகமளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முழு நாடும் நெருக்கடியான சூழலை எதிர்க்கொண்டுள்ள வேளையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படுவது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும் எமது சங்கத்தினர் எவரும் பணி புறக்கணிப்பில் ஈடுப்படவில்லை என ரயில் என்ஜின் இயக்க சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்தார்.

 பயணிகள் அசௌகரியம்

ரயில் சேவை இரத்து செய்யப்பட்டமை மற்றும் தாமதமடைந்த காரணத்தினால் கோட்டை ரயில் நிலையத்தில் இன்று அமைதியற்ற தன்மை நிலவியது.ரயில்  சேவைக்காக காத்திருந்த பொது பயணிகள் தொழிற்சங்கத்தினரதும், ரயில் சேவையாளர்களினதும் செயற்பாடுகளுக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right