(ரொபட் அன்டனி) 

சிவனொளிபாதமலை  புனிததல வளாகத்தில் எவ்விதமான கட்டடங்களும்  நிர்மாணிக்கப்படவில்லை. அங்கு  எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை என்பதனை பொறுப்புடன் தெரிவிக்கின்றோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்தார். 

பகுதிக்கு செல்லும் வழியில்   அப்பால்   88 ஏக்கர்களில் அமைந்துள்ள ஒரு தனியார்  நிலத்தில்  ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை   தற்போது  விடுமுறை விடுதியாக  மாற்றப்பட்டுவருகின்றது.  இதனை வைத்து  பௌத்தர்கள் மற்றும்  முஸ்லிம்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு  பொய் பிரசாரம் செய்யப்படுகின்றது என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே   ஊடகத்துறை பிரதியமைச்சர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

 அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

சிவனொளிபாதமலை  புனிததல வளாகத்தில் எவ்விதமான கட்டடங்களும்  நிர்மாணிக்கப்படவில்லை. அங்கு  எந்த ஹோட்டலும் நிர்மாணிக்கப்படவில்லை. பௌத்தர்கள் மற்றும்  முஸ்லிம்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதற்கு  பொய் பிரசாரம் செய்யப்படுகின்றது. 

கேள்வி:- அப்படியானால் இந்த சர்ச்சைக்கு என்ன காரணம்?

பதில்:- .சிவனொளிபாத மலை புனிததலம் 99 ஏக்கர்களைக் கொண்ட  பிரதேசமாகும்.   அந்த  பகுதிக்கு செல்லும் வழியில்  அப்பால்   88 ஏக்கர்களில்  ஒரு தனியார்  நிலம் இருக்கிறது.  அதில் ஏற்கனவே இருந்த ஒரு கட்டடத்தை   தற்போது  விடுமுறை விடுதியாக  மாற்றுவதற்கு  அனுமதி கோரப்பட்டுள்ளது.  அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டட வேலைகள் நடைபெறுகின்றன.  அதிலும்  சுற்றாடல் சம்பந்தமான ஒரு பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றோம். 

மாறாக சிவனொளிபாத  புனிததல வளாகத்தில் எவ்விதமான  கட்டடமோ ஹோட்டலோ அமைக்கப்படவில்லை.  எனினும் ஒருசில தரப்பினர் நாட்டில் மத விரிசலை ஏற்படுத்துவதற்கு  சிலர் முயற்சித்து வருகின்றனர். கடந்த அமைச்சரவையில் பிரபல அமைச்சர் ஒருவர் இங்கு   ஒரு ஹோட்டலை நிறுவ முயற்சித்தார். அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.