கடினமாக அமையப்போகும் அடுத்த மூன்று வாரங்கள்

Published By: Digital Desk 3

01 Jul, 2022 | 01:00 PM
image

ரொபட் அன்டனி 

நாட்டில் எரிபொருள் இல்லாத ஒரு நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது.  இருக்கின்ற டீசலை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் அனுப்பப்பட்டு இருக்கின்றது. அவை சிட்டைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. 

எனினும் எல்லோருக்கும் இதனை பெற்றுக் கொள்வதில் சிக்கல் காணப்படுகிறது.  இந்தநிலையில் அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிகக் கடுமையானதாகவும்   மிக நெருக்கடியானமதாகவும்    அமையும் என்று பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்படுகிறது.  முக்கியமாக இந்த எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு பாரிய அளவில் தாமதம் அடைந்திருக்கின்றது.  இலங்கைக்கு  சில தினங்களில் வருவதாக கூறப்பட்ட கருதப்பட்ட பெற்றோல்  கப்பல் வராத நிலைமையே காணப்படுகிறது

இந்தநிலையில் கடந்த புதன்கிழமை பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முக்கியமான ஒரு சில விடயங்களை அறிவித்திருந்தார்.   அதாவது ஜூலை 10 ஆம்திகதிக்குள்   எரிபொருள் பிரச்சினைக்கு ஓரளவுக்கு  தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம்  முயன்று வருகின்றது.   பெற்றோலை நாட்டுக்கு  கொண்டுவருவதற்கான நடவடிக்கை   எடுக்கப்படுகின்ற போதிலும்  இலங்கை  பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தினால்   முன்பதிவு செய்யப்பட்ட பெற்றோல் கப்பல்   அடுத்த மாதம்  22 ஆம் திகதியே  நாட்டை  வந்தடையும்  நிலைமை காணப்படுகின்றது.  எனவே  அதற்கு முன்னர்   பெற்றோல் கப்பலை  வரவழைக்க முடியுமா  என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என்று  பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய நிலையில்   பெற்றோலைப் பெற்றுக்கொள்ளும்   விடயத்தில்  உறுதியற்ற தன்மை காணப்படுகின்றது.  ஏற்கனவே   முன்பதிவு செய்யப்பட்டுள்ள   பெற்றோல் கப்பல்  அடுத்தமாதம் 22 ஆம் திகதியே    இலங்கை வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்   விரைவில்  பெற்றோலை  பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில்   ஆராய்ந்து வருகின்றறோம் . அடுத்த மாதம் 22 ஆம் திகதிகப்பல் வருமானால் அதற்கு இன்னமும் 23 நாட்கள் இருக்கின்றன.  இதனால்   வேறு  விநியோகஸ்தர்களிடமிருந்து விரைவாக  பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றோம்  என்றும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.  

அந்தவகையில் அரசாங்க தரப்பினரின் கருத்துகளை பார்க்கும்போது அடுத்துவரும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மிகக் கடினமானதாகவே அமையப் போகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் எவ்வாறான நெருக்கடிகள் நாட்டில் ஏற்படும் என்பது சகலருக்கும் தெரியும். காரணம்  நாட்டின் பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட சகல செயற்பாடுகளும்  எரிபொருள் சரியான முறையில் கிடைப்பதன்  உறுதிப்பாட்டுடன் அடிப்படையிலேயே  இயங்கும்.  

அந்தவகையில் தற்போதைய சூழலில் இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பவற்றின் காரணமாக சகல துறைகளும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  கல்வித் துறை சுகாதாரத் துறை மற்றும் மின்சார துறை சிறிய நடுத்தர வர்த்தக முயற்சிகள் தொழிற்சாலை செயல்பாடுகள் என பல்வேறு துறைகளும் பாரிய நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எதிர் கொண்டு இருக்கின்றன.  

எரிபொருள் இன்றி இந்த செயற்பாடுகளை இந்த வேலைத் திட்டங்களை கொண்டு செல்வது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.   தற்போதைய இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக நாட்டின் இயங்குநிலை நாட்டின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 

அதன்படி  அடுத்து வரும் மூன்று வாரங்களும் கூட மிகக் கடுமையான  ஒரு நெருக்கடியை நாட்டுக்கு கொடுக்கும் என்பது நன்றாக தெரிகிறது. அது ஒரு தெளிவான விடயமாகவே கடந்து செல்கிறது.  மக்களை பொறுத்தவரையில் மிகவும் ஒரு வேதனையான  அதிருப்தியான நிலைமையில் காணப்படுகின்றனர்.  நாட்கணக்கில் கிலோ மீட்டர் கணக்கில் வரிசைகளில் நிற்பதைக் காணமுடிகிறது.  எரிபொருள் வரவில்லை, வரிசையில் நிற்க வேண்டாம் என்று அரசாங்கம் எந்தளவுக்கு தான் கூறினாலும் கூட மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.  காரணம் எரிபொருள் இல்லாமல் மக்களின் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது மிகவும் கடினமானது.  

குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதிகள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு பெற்றோல் அத்தியாவசியமானதாகும்.  தற்போதைய சூழலில் கூட ஆயிரக்கணக்கான முச்சக்கரவண்டி சாரதிகள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதேபோன்று சுகாதாரத்துறை கல்வித்துறை என்பவற்றுக்கும் எரிபொருள் என்பது மிக முக்கியமானதாக இருக்கின்றது. சுகாதாரத் துறையை பொறுத்த வரையில் போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது. அதேபோன்று கல்வித் துறைக்கும் போக்குவரத்து மிக முக்கியமானதாக இருக்கின்றது.  

இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே தற்போது கொழும்பு மாவட்டம் மற்றும் ஏனைய நகரபாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கின்றன.  ஏனைய கிராமப்புற பாடசாலைகளில் தொடர்பாக  அதிபர்கள் முடிவெடுக்க முடியும் என்ற விடயமும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமன்றி அரசாங்க ஊழியர்களின் அதிகமானோரை வீடுகளில் இருந்தும்  பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அத்தியாவசிய சேவைகளை மட்டுமே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  பல்வேறு அரச நிறுவனங்களும்   ஒரு சில தினங்களே  செயற்படுவோம் என்று அறிவிப்பை வெளியிட்டு கொண்டிருக்கின்றன.   

அடுத்த மூன்று வாரங்கள் இதை விட மோசமானதாக மாறும் அபாயம் இருப்பதாகவே தொடர்ச்சியாக சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. எரிபொருள் இன்றி எடந்து கொண்டிருக்கின்ற தற்போதைய நாட்களையே மக்களினால் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.  

இந்நிலையில் எரிபொருள்  கிடைக்காமல்   போய் விடும் நிலைமை அடுத்த மூன்று வாரங்களுக்கு காணப்படுவதால் மிக மோசமான ஒரு தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும்   மக்களின் அன்றாட வாழ்க்கை செயற்பாடுகளிலும் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.    இது தொடர்பாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினர் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பது அவசியம்.  

அதேபோன்று கிடைக்கின்ற எரிபொருளை முன்னுரிமை அடிப்படையில் அத்தியாவசியமான துறைகளுக்கு வழங்குவதற்கு பல்வேறு திட்டங்கள் அவசியமாகும்.   பெற்றோல் மற்றும் டீசல் போன்றவற்றை சரியான துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவது என்பது மிக முக்கியமாகும். முக்கியமாக முச்சக்கரவண்டி சாரதிகளின்  குடும்பங்கள் அவர்களது அந்த வருமானத்திலேயே தங்கி இருக்கின்றன என்தால்    அவர்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  

வரிசைகளில் நாட் கணக்கில் காத்துக் கிடக்கின்ற மக்களின் நிலைமை மிக வேதனையானதாகவே இருக்கின்றது.  அவர்களது முகங்களில்  வலிகள் வேதனைகள் என்பவற்றின் பிரதிபலிப்பு காணப்படுகிறது.  முக்கியமாக தாம் எவ்வாறு தமது வாழ்க்கையை கொண்டு செல்வது தமது பொருளாதார செயற்பாடுகள் எவ்வாறு இயக்குவது  என்பதை ஊகித்துக் கொள்ள முடியாமல் மக்கள் மிகவும் கடினமான ஒரு நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  

வரிசைகள் நிற்கின்ற மக்களின் ஒவ்வொரு முகங்களிலும் ஒவ்வொரு கதைகள் காணப்படுகின்றன. வழிகள் தெரிகின்றன. சில இடங்களில் பெண்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு வரிசையில் நிற்கின்றனர். வயது போனவர்கள் நிற்கின்றனர்.  

இதுவரை 10க்கும் மேற்பட்டோர் வரிசைகளில் நின்ற நிலையில் மரணம் அடைந்திருக்கின்றனர்.  இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிக மோசமான ஒரு பொருளாதார நிலைமையை நாம் தற்போது கடந்து கொண்டிருக்கின்றோம்.  

 இந்த செயற்பாடுகளுக்கான காரணம் மிக முக்கியமானது.  குறிப்பாக    இவ்வாறான ஒரு மிக தீர்க்கமான ஒரு நெருக்கடி நாட்டில் ஏற்படுவதற்கு ஒரு டொலர்  பற்றாக்குறை ஏற்படுவதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றன.  நீண்டகால காரணங்கள் உடனடி காரணங்கள் என பல காரணங்கள் காணப்படுகின்றன.  

அதில் உடனடி காரணம் என்று கூறும்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கூறலாம்.  அதேபோன்று கடந்த காலங்களில்  தீர்மானம் எடுக்கும் நிலையில் இருந்தவர்களால் எடுக்கப்பட்ட ஒரு சில தீர்மானங்கள் தற்போது இந்த உடனடி நெருக்கடிக்கு காரணமாகும். 

 கடந்த காலங்களில் கூட எமக்கு பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.  ஆனால் இலங்கையினால் கடன்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது.  முக்கியமாக இரு தரப்பு கடன்கள் பல்தரப்பு கடன்கள் அதேபோன்று பிணைமுறி கடன்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.  ஆனால் 2020  ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின்னர் இலங்கை   கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.  அதற்கு காரணம் இலங்கையின் பொருளாதார குறிகாட்டிகள் மற்றும் நிதி நிலைமை தொடர்பான குறிகாட்டிகளை மிக மோசமாக இருக்கின்றன என்பதை சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் வெளிக்காட்டின.   

முக்கியமாக மூடி மற்றும் பிட்ச் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் நிதி நிலைமை மிக மோசமாக சென்று கொண்டிருக்கின்றமையை தமது குறிகாட்டிகள் மூலம் வெளிக்காட்டி இருந்தன.  பாதகமான நிலையில் இலங்கையின் பொருளாதாரம் இருப்பதாகவும் பெறுகின்ற கடன்களை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனங்கள் தமது தரப்படுத்தல்களை வெளிப்படுத்தின.   அதுவே   சர்வதேச நிறுவனங்கள் இலங்கைக்கு கடன் வழங்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியது.    அதேபோன்று இலங்கையினாலும் ஒரு கட்டத்தில் சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.  

தற்போதைய சூழலில் இலங்கையானது 51  பில்லியன் டொலர் கடன்களை வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டியிருக்கிறது.   2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை  நாடி ஒரு நீண்ட கால திட்டத்துக்கு சென்றிருந்தால் தற்போதைய  நெருக்கடி ஏற்பட்டு இருக்காது.

காரணம் சர்வதேச நாணய நிதியத்தை  இலங்கை  நாடியிருந்தால்  சர்வதேச நிதி நிறுவனங்கள் இலங்கைக்கு கடன் வழங்கியிருக்கும்    என்பதுடன் ஏற்கனவே வழங்கிய கடன்களுக்கான  தவணை   கட்டண  விடயத்தில் நிவாரணங்களை வழங்கியிருக்கும்.  ஆனால் அதற்கான அவகாசம் இலங்கைக்கு கிடைக்காமல் போய்விட்டது.  காரணம் உரிய நேரத்தில் இலங்கையை சர்வதேச நாணய நிதியத்தின் நாடவில்லை. 

இதுபோன்று பல்வேறு காரணங்களை தற்போதைய நெருக்கடி நிலைக்கு கூறிக் கொண்டே போகலாம். நீண்டகால காரணங்கள் என்று பார்த்தால்  ஏற்றுமதி வருமானத்தை  அதிகரிக்காமை ஆனால்   இறக்குமதி செலவு தொகை அதிகரித்துச் சென்றமை,  சுற்றுலாத் துறை  வருமானம் குறைந்தமை,  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் அந்நிய செலாவணி சரியான முறையில் அனுப்பப்படாமை,  வெளிநாட்டு நேரடி முதலீடு கிடைக்காமை,  போன்றவற்றை  குறிப்பிடலாம்.  அதேபோன்று ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கான நீண்டகாலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதா என்பதும் கேள்விக்குறியாகும்.  சுற்றுலாத்துறை வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் வெற்றியடையாமையையும்  நீண்டகால காரணமாக குறிப்பிட முடியும்.   

எப்படியோ தற்போது மிக நெருக்கடியான கால கட்டத்தை நாடு  அடைந்திருக்கிறது.  மக்கள் வீதிகளில் எரிபொருளுக்காக  தவித்துக்கொண்டிருக்கின்றனர்.  வீட்டிலிருந்து எரிபொருள் வரிசைக்கு செல்கின்ற மக்கள் பல நாட்கள் வீடு திரும்பாமல் எரிபொருள் வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.  இது ஒரு துரதிஷ்டவசமான மற்றும் வேதனைக்குரிய விடயமாக இலங்கையில் மாறி இருக்கின்றது.  

எனவே அடுத்து வரும் மூன்று வாரங்கள் மிக பாரதூரமான கஷ்டங்களை கொடுக்கப்போவதாக அமையும் என்பது தெரிகிறது.   அதனை எதிர்கொள்வதற்கு சகல தரப்பினரும் சரியான முறையில் தயாராக வேண்டும்.  முக்கியமாக இருக்கின்ற எரிபொருளை சரியான முறையில் முன்னுரிமை அடிப்படையில்  வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.    மிக முக்கியமாக சுகாதாரத் துறை தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும்.  அதேபோன்று அன்றாடம் தொழில் செய்து தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்ற  மக்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்துவது கட்டாயமாகும். 

அன்றாடம் தொழில் செய்து தமது பொருளாதாரத்தை கொண்டுநடத்துகின்ற  மக்களுக்கு தொழில் செய்ய முடியாத நிலைமை காணப்படுகின்றது.    எரிபொருள் இல்லாமை  காரணமாக மக்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்ல முடியவில்லை.   அடுத்த  மூன்று வாரங்கள் மிக கடினமானதாக இருக்கும் என்பது தெரிகிறது.  ஆனால் அதனை மக்களுக்கு சமாளிக்கும் வகையிலான திட்டங்களை வகுக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

முக்கியமாக பாதிக்கப்படுகின்ற தரப்பினருக்கு தேவையான நிவாரணங்களை வழங்குதல், அதேபோன்று முக்கியமான அடிப்படை துறைகளுக்கான வேலைத்திட்டங்களை மாற்று செயற்பாடுகளை மேற்கொள்தல் போன்றவை மிக அவசியமாகின்றன. 

விசேடமாக  திட்டமிடல்கள் இங்கு மிக முக்கியமானவையாகவுள்ளன.   கடந்த காலங்களில் உரிய முறையில் திட்டமிடல்கள்  இன்மையின் காரணமாகவே இவ்வாறான  ஒரு நெருக்கடி நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.  மீண்டு வருவது மிகக் கடினமான நிலைமைக்கு  நாடு செல்வதற்கு திட்டமிடல் இன்மை காரணமாக இருக்கின்றது.  எனவே எதிர்வு கூறல்கள் திட்டமிடல்கள்  மிக முக்கியமானதாகும்.  தற்போது எதிர்வு கூறல்கள் வெளிப்பட்டுள்ளன. 

எனவே அதற்கேற்ற வகையில் திட்டங்களை மேற்கொண்டு நிலைமையைச் சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.  வரிசைகளில் கால்கடுக்க நின்று கொண்டிருக்கின்றனர்.   இந்த நிலைமை மிக மோசமாகவும் வேதனைக்குரியதாகவும் உள்ளது.    

இதனை தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையிலேயே   கொண்டு செல்ல வேண்டாம்.  விரைவாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.  உடனடியாக சர்வதேசம் எதிர்பார்க்கின்ற   மறுசீரமைப்புக்களை  மேற்கொண்டு விரைவாக மக்களுக்கு மூச்சு விடுவதற்கான அவகாசத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெறும் எலும்புக்கூடு

2024-09-15 12:49:04
news-image

கோட்டாபயவின் 69 இலட்சம் வாக்குகள் யாருக்கு...

2024-09-15 12:50:07
news-image

ரணிலைக் காப்பாற்றுமா மொட்டு அணி?

2024-09-15 12:19:17
news-image

இந்தியாவின் தவறான அணுகுமுறை

2024-09-15 12:09:56
news-image

பாதுகாப்பை உறுதி செய்யுமா படைத்தரப்பு?

2024-09-15 09:51:25
news-image

பங்களாதேஷ் ஆடை உற்பத்திதுறையின் எதிர்காலம்

2024-09-15 09:51:05
news-image

இஸ்ரேலின் சிதைவு எழுதப்பட்ட விதி

2024-09-15 09:46:03
news-image

ஜனாதிபதித் தேர்தலை காத்திரமான தேர்தலாகக் கருதி...

2024-09-14 13:15:18
news-image

தேர்தல் காலத்தில் தென்னிலங்கையில் மாற்றத்துக்கான குரல்கள் 

2024-09-14 12:46:03
news-image

'ஜேவிபியின் ஜனாதிபதி" - இந்தியா இதனை...

2024-09-13 16:41:12
news-image

தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து வாக்களிப்பது...

2024-09-13 11:45:08
news-image

போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை புறக்கணித்துவிட்டு பொருளாதாரக் குற்றங்களுக்கான...

2024-09-13 10:31:59