உங்கள் வயதிற்கான இரத்த சர்க்கரையின் அளவு தெரியுமா..?

By T Yuwaraj

30 Jun, 2022 | 05:59 PM
image

தெற்காசிய நாடுகளில் இன்றைய திகதியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும், அவர்களின் வயதிற்கு ஏற்ற உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவத்துறை வழிகாட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். 

அதேபோல் எம்மில் ஒவ்வொரு வயதினருக்கும் அவர்களுடைய வயதுக்கு ஏற்ற இரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிந்துரையும் வெளியாகி இருக்கிறது. இரத்த சர்க்கரையின் அளவு குறித்த விழிப்புணர்வை முழுமையாக பெற்றிருந்தால் மட்டுமே அதனூடாக ஏற்படும் பாதிப்புகளை, வரவிடாமல் தற்காத்துக் கொள்ள இயலும். மேலும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளவில்லை என்றால், பாரிய அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

'' ஒவ்வொருவரும் இரத்த சர்க்கரையின் அளவு குறித்து HbA1c எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையிலான முடிவுகளையே மருத்துவ துறையினர் வயது வாரியாக இலக்கை நிர்ணயித்து பரிந்துரை செய்திருக்கிறார்கள். பிறந்த குழந்தை முதல் ஆறு வயதிலான பிள்ளைகள் வரை, அவர்களின் இரத்த சக்கரையின் அளவு 8.5 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். 

6 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு எட்டு சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். 12 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 7.5% இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் டைப் 1 சர்க்கரை நோயாளிகளாகவும், வளர்ச்சி பருவம் என்பதாலும் இரத்த சர்க்கரையின் அளவு குறித்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு 6.5  சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும். 46 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு ஏழு சதவீதம் இருக்க வேண்டும். எழுபதிலிருந்து எண்பது வயது வரை உள்ளவர்களுக்கு 8% வரை இருக்க வேண்டும். எண்பது வயது மேல் உள்ளவர்களுக்கு 8.5 சதவீதம் வரை இருக்க வேண்டும்.'' .

70 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயுடன் வேறு பல இணை நோய்களுடன் இருப்பதாலும், அவர்கள் அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், இரத்த சர்க்கரையின் அளவை இலக்காக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என சர்க்கரை நோய் நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதே தருணத்தில் அனைத்து வயதினருக்கும் லோ சுகர் எனப்படும் இரத்த சர்க்கரையின் அளவு இயல்பான அளவைவிட குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

சர்க்கரை நோய் வந்துவிட்டால்.., அதற்காக அச்சப்படாமல் உங்களுடைய சர்க்கரை நோய் நிபுணரை சந்தித்து, ஆலோசித்து, HbA1c பரிசோதனையை மேற்கொண்டு, ரத்த சர்க்கரையின் அளவு குறித்த இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்குரிய வாழ்க்கை நடைமுறை மாற்றம், உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right