‘எங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு ? ’ இந்திய நிவாரணங்கள் கிடைக்காத தொழிலாளர்களின் குமுறல்

By Vishnu

30 Jun, 2022 | 06:30 PM
image

தேசியன்

நிவாரணங்களோ, உதவி பொருட்களோ அல்லது  ஏதாவதொரு வகையில் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதாக இருந்தால் அதில் அரசியல் தலைவிரித்து தாண்டவமாடும் என்பதற்கு  நுவரெலியா மாவட்டம் சிறந்த உதாரணமாகும். அதிக பெருந்தோட்டங்களைக் கொண்டுள்ள இம்மாவட்டத்தில் இது வரை இந்தியா மற்றும் தமிழக அரசால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் சரியாக பகிரப்படவில்லை.

இந்தியாவிலிருந்து இரண்டாம் கட்டமாகவும் ஒரு தொகை நிவாரணப்பொருட்கள் கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்துள்ள சூழலில், முதற்கட்டமாக கிடைத்த நிவாரணங்களை இந்த மக்களுக்கு உரிய வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு சரியான பொறிமுறைகளை எவரும் வகுக்கவில்லை. 

ஆரம்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த நிவாரணங்களை விநியோகிப்பதற்கு முன்வந்தாலும், இவ்விடயத்தில் அவர்கள் தமது பெயர்களை போட்டு அரசியல் செய்து விடுவர் அல்லது தமது ஆதரவாளர்களுக்கு மாத்திரமே பொருட்களை பகிர்வதில் ஆர்வம் காட்டுவர் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அவர்கள் விலகிக்கொண்டனர்.

இவர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக கிராம சேவகர்கள் சங்கமும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தது. நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்தப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எந்தவொரு சிக்கல்களும் இல்லாது பகிர்ந்தளிக்கப்பட்ட போது மலையகப் பகுதிகளில் மட்டும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 

அரசியல் தலையீடு இருக்கின்றது என்ற விமர்சனங்கள் வந்த போதே குறித்த மலையக பிரதிநிதிகள் இப்பொறுப்பை மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஊடாக குறித்த பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அதே தோட்டங்களில் தொழில் இன்றி  உள்ள குடும்பங்களுக்கு இப்பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியிருக்கலாம்.

 ஆனால் தமது தலையீடின்றி இச்செயற்பாடு முறையாக இடம்பெறக்கூடாது என்ற அலட்சியப்போக்கில் அனைத்து மலையகப் பிரதிநிதிகளும் இப்பக்கம் எட்டிக் கூட பார்க்காது தலைநகரில் நிரந்தரமாக தங்கி விட்டனர்.  கிராம சேவகர்களும் கைவிரித்து விட சில தோட்ட நிர்வாகங்கள் இப்பொறுப்பை ஏற்று நிவாரணங்களை பகிர்ந்தளித்தன.

ஆனால் அதிலும் பல  குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. குறித்த தோட்டத்தில் பெயர் பதியாது அல்லது அங்கு தொழில் புரியாது வசித்து வரும் வறுமை கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து  மருந்து பொருட்கள், பால்மா மற்றும் அரிசி ஆகிய பொருட்கள் மாத்திரமே வந்தன. இதில் மருந்துப் பொருட்களை அரசாங்கம் சுகாதார துறையினருக்கு வழங்கி விட்டது. பால்மாவானது இரண்டு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. ஒ௫ வயதுக்கு குறைவான பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கும் அல்லது கர்ப்பிணித்தாய்மார்கள் உள்ள குடும்பங்களுக்குமாக இவை ஒதுக்கப்பட்டன.

ஆனால் பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு அரிசி 10 கிலோ மாத்திரமே அதுவும் சில இடங்களில் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. நிவாரண உதவிகளில் கிடைத்த மருந்து பொருட்களில் ஒரு வீதமாவது பெருந்தோட்டப்பகுதி டிஸ்பென்சரிகளுக்கோ அல்லது மாவட்ட வைத்தியசாலைகளுக்கோ வந்ததாக தகவல்கள் இல்லை. 

சில இடங்களில் மக்கள் 10 கிலோ அரிசி பொதியை நிராகரித்துள்ளனர். தமது பிரதேசத்தில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் சகலருக்கும் அரிசி பொதி விநியோகிக்கப்பட்டால் மாத்திரமே தாம் அதை வாங்கிக்கொள்வதாக தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

சில இடங்களில் தொழிலாளர்கள் தமது பிரதிநிதிகளை கடுமையாக சாடியுள்ளனர். இந்த நிவாரணம் அனைத்துத் தரப்பினருக்கும் சென்றடைவதற்கான எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது அனைவரும் கொழும்பில் தங்கி விட்டதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க தமது தலையீடின்றி குறித்த நிவாரணங்களை அனைத்துத் தரப்பினருக்கும் பகிர்வதற்கான எந்த பொறிமுறைகளையும் ஆலோசனைகளையும் நுவரெலியா மாவட்ட பிரதிநிதிகள் எந்த அரசாங்கத் தரப்பு அதிகாரிகளிடமும் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அலட்சியப்போக்கும் கண்டுகொள்ளாத தன்மையும் அவர்களை மக்கள் மத்தியிலிருந்து வெகுதூரம் கொண்டு சென்றுள்ளது. கொரோனா முடக்க காலத்திலும் இந்த அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தாம் அங்கம் வகித்த அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரணங்களையும் முறையாகப் பெற்றுத்தரவில்லை. அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பணமும் பாதிக்கப்பட்டோருக்கு செல்லாது அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கும் அரச ஊழியர்களுக்குமே சென்றது. 

பெருந்தோட்டப்பகுதி வாழ் சமூகத்தினருக்கு இந்த நிவாரணங்கள் முறையாக பகிரப்படாமை குறித்த செய்திகள் தற்போது அதிகரித்துள்ளன. இவை சர்வதேச ஊடகங்களிலும் இடம்பிடித்துள்ளன. இந்திய அரசாங்கத்துக்கும் இது தெரியாமலில்லை. இந்நிலை தொடர்ந்தால் அடுத்து இந்தியா இலங்கைக்கு செய்யவிருக்கும் நிவாரண உதவிகள் தடைபடலாம்.

இந்தியாவிலிருந்து கப்பல்களில் பொருட்கள் வந்தவுடன் அதை பொறுப்பேற்பது போன்று சென்று ஊடகங்களுக்கு போஸ் கொடுத்து விட்டு பிறகு தமது பணிகளைப் பார்க்க சென்று விடுகின்றனர் அரசியல் பிரமுகர்கள்.  இதை உரிய முறையில் பகிர்வதற்கான எந்த வேலைத்திட்டங்களையும் இவர்கள் எடுக்காமலிருக்கின்றனர். 

இவ்வாறான நெருக்கடி சூழ்நிலைகளிலும் அரசியல் படம் காட்டும் இவ்வாறானவர்களை மலையக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் பாதிக்கப்பட்டோர் பக்கங்களிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right