வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர் கைது

By T Yuwaraj

30 Jun, 2022 | 03:51 PM
image

வவுனியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன், அதிகாரியின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்திலேயே நேற்று இரவு (29.06) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பெறுவதற்காக வரிசையில் நின்ற கனரக வாகனம் ஒன்று நீண்ட நேரம் டீசல் வழங்காது பெற்றோல் வழங்கப்பட்டமையால் வரிசையில் இருந்து வெளியேறிச் சென்றிருந்தது. இரவு டீசல் வழங்கப்பட்ட போது தான் குறித்த இடத்தில் நின்றதாக தெரிவித்து கனரக வாகன சாரதி டீசலை பெற முயற்சித்துள்ளார்.  இதற்கு ஏனைய வாகன சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்போது குறித்த குழப்பத்தை சமரசப்படுத்தி குறித்த கனரக வாகனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவ்விடத்தில் குறித்த கனரக வாகன சாரதிக்கும், இராணுவ அதிகாரிக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதுடன், இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சாரதி இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை மற்றும் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right