உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு ?

By Rajeeban

30 Jun, 2022 | 12:31 PM
image

ராஜஸ்தானில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கும், பாகிஸ்தானில் இயங்கும் தவாத் - இ - இஸ்லாமி பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரில் தையல் கடை நடத்தி வந்தவரான கன்னையா லால் என்பவரை நேற்று முன்தினம் இரண்டு பேர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அந்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முகமது நபி குறித்து அவதூறாக பேசிய பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கன்னையா லால் கருத்து தெரிவித்து வந்ததால், அவரை தாங்கள் கொலை செய்ததாக இருவரும் வீடியோவில் கூறியுள்ளனர்.

கன்னையா லால் கொலையை கண்டித்து ராஜஸ்தானில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே, தலைமறைவாகி இருந்த கொலையாளிகள் கவுஸ் முகமது, முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த சூழலில், கன்னையா லாலை அவர்கள் கொலை செய்த பாணி, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் ஒத்துப்போவதாக உளவுத் துறைகள் தெரிவித்தன. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கொலையாளிகளில் ஒருவர், பாகிஸ்தானில் செயல்படும் தவாத் இ இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது என்ஐஏ விசாரணையில் அம்பலமானது. அவர் 2014-ம் ஆண்டு கராச்சியில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமையகத்துக்கு சென்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த இயக்கத்தின் உத்தரவின் பேரில் கன்னையா லாலை அவர்கள் கொலை செய்தார்களா, இதற்கு முன்பு அவர்கள் வேறு ஏதேனும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right