மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு - மட்டக்களப்பு, திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி காணியை இழந்த 16 முஸ்லிம் குடும்பங்கள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் நாவலடிப் பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

எனினும், தற்போதைய சுமுக சூழ்நிலையில் தமது பழைய குடியிருப்பு இடங்களை படையினரிடமிருந்து மீட்டு தம்மிடம் கையளிக்குமாறு கோரியே தாம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது வீடுகள், கடைகள் உள்ளடங்கலாக அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே அந்தப் பகுதியில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டதாக படை முகாமுக்கு முன்னால் கூடாரமிட்டு சத்தியாக்கிரகம் நடத்தும் காணி மற்றும் வீடுகளை இழந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

-அப்துல் கையூம்