உறங்கவிடாத கனவுகள்

Published By: Nanthini

29 Jun, 2022 | 03:58 PM
image

வன் ஒரு சோம்பேறி இளைஞன். அவனுக்கு வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆசை மிக அதிகம். ஆனால், அதற்காக உழைக்காது கஷ்டப்படாமல் முன்னேறும் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தான்.

அயலூரிலிருந்து பொருட்களை வாங்கி வந்து தனது ஊரில் விற்று, அதில் கிடைக்கும் வருமானத்திலேயே அவனும் அவனது குடும்பமும் பசியாறி வந்தார்கள்.

ஒருநாள் தன் நண்பன் மூலம் ஒரு முனிவர் குறித்து அறிந்து கொண்டான். விரைவாக அம்முனிவரிடம் சென்றான் அந்த இளைஞன்.

அதுவொரு காட்டின் நடுவே அமைந்திருக்கும் ஒரு குகையாகும். அக்குகையினுள் அம்முனிவர் பல காலம் வசித்து வருகிறார்.

அந்த இளைஞனும் தனது மனக்குறைகள் அனைத்தையும் அம்முனிவரிடம் கொட்டினான்.

“சுவாமி நீங்கள் எனக்கு இவ்வாழ்க்கையை அறவே கஷ்டமில்லாமல் வாழ எனக்கு வழிகாட்ட வேண்டும்” என்றான்.

அதற்கு அம்முனிவரோ, “நீ இங்கிருந்து திரும்பி செல்லும்போது உனது கேள்விக்கான பதிலை அறிந்து கொள்வாய்” என்றார். அவனும் நன்றி கூறிவிட்டு சென்றான்.

அக்காட்டின் வழியாக பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு கால் முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் நரி ஒன்று ஒரு குகையின் முன்னாள் படுத்திருப்பதை அவதானித்தான்.

அதனைக் கண்டதும் அட அட எத்தனை துர்பாக்கிய நிலை இதற்கு. வெறும் மூன்று கால்களை வைத்துக்கொண்டு இதனால் எவ்வாறு வேட்டையாடி உண்ண முடியும். விரைவிலேயே இது இறக்கப் போகின்றது என எண்ணியவாறே அதை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போ திடீரென ஒரு உறுமல் சத்தம் கேட்டது. அங்கு ஏதோ ஒரு மிருகம் வருகின்றது என்பதை சுதாகரித்துக் கொண்டவன், உடனே அருகிலிருந்த புதரினுள் மறைந்து அவ்விடத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது ஒரு புலி தன் வாயில் பெரிய இறைச்சி துண்டொன்றை கவ்விக்கொண்டு வந்து, நரி முன்னே போட்டுவிட்டுச் சென்றது. அந்நரியோ அவ் இறைச்சியை உண்ண ஆரம்பித்தது. அந்நொடியே அம்முனிவர் கூறியது அவன் கண்முன் தோன்றியது. நிச்சயம் என் கேள்விக்கான பதில் இதுதான்.

கடவுள் எவ்வாறு இங்கு படுத்திருக்கும் நரிக்கு புலியின் மூலம் உணவளித்தாரோ அதுபோலவே நான் எந்த வேலையும் செய்யாவிட்டாலும் எனக்கு உணவளிப்பார் என்று எண்ணிக் கொண்டான். 

வீட்டுக்குச் சென்றதும் அதுவரை தான் செய்து கொண்டிருந்த வியாபாரத்தையும் விட்டு விட்டு தன் விருப்பம்போல் வீட்டிலேயே உறங்கிக் கிடந்தான்.

நாட்கள் கடந்தன. ஆனால், அவன் எதிர்பார்த்ததைப் போல் எந்த உதவியும் கிடைக்கவில்லை. மாறாக குடும்பத்தின் வறுமை அதிகரித்தது.

அவ் இளைஞன் கோபத்தின் உச்சிக்கே சென்று மீண்டும் அம் முனிவரை சந்திக்கச் சென்றான். அவர் முன்னே போய் நின்று, “நீங்கள் எல்லாம் ஒரு முனிவரா? உங்கள் அறிவுரையைக் கேட்டதால் இன்று எனது வாழ்க்கையே சீரழிந்துவிட்டது” என்று கத்தினான்.

பொறுமையோடு பார்த்துக்கொண்டிருந்த அவரோ, “மகனே உனக்கு நடந்ததைக் கூறு” என மிக அன்போடு வினவினார்.

அதற்கு அவ்விளைஞன் தான் கற்றுக்கொண்ட பாடம் பற்றி அம்முனிவரிடம் கூறினான்.

அதற்கு அவர், “அன்று நீ கண்ட சம்பவமும் அதற்கு பின்னால் இருந்த தத்துவமும் உண்மையானதுதான். ஆனால், அதை நீ புரிந்துகொண்ட முறையே தவறானதாகும்.

அச்சம்பவத்தைக் கண்டதும் நீ உன்னை அந்த நரியின் இடத்தில் வைத்து பார்த்துக் கொண்டாய். நீ எந்த முயற்சியும் செய்யாவிட்டாலும் கடவுள் உனக்கு வெற்றியைத் தருவார் என எண்ணிக் கொண்டாய்.

ஆனால், நான் உன்னை அப்புலியாக வாழச் சொன்னேன். உன் அறிவையும் பலத்தையும் கொண்டு உன் முன்னே இருக்கும் பலவீனமானவர்களை வாழ வைக்கச் சொன்னேன்.

நீ ஒன்றை நினைவில் வைத்துக்கொள். பலவீனமானவராக வாழ்வதில் எவ்விதச் சிறப்புமில்லை. வாழ்க்கையில் என்றும் நாம் அடுத்தவர்களையே நம்பி இருக்க வேண்டும். இன்று அவ் வாழ்க்கை சொகுசாக தோன்றினாலும் விரைவிலேயே அது நாசமாகிவிடும்.

நீ உனது அறிவையும் பலத்தையும் கொண்டு உனது குடும்பத்துக்கும் பிறருக்கும் ஓர் அழகிய வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

உனக்கு சிறப்பான வாழ்க்கை வேண்டுமானால், உன் மனதிலிருக்கும் சோம்பேறித்தனத்தை நீ மூட்டை கட்ட வேண்டும். அது எவ்வாறு என்பதை கூறுகிறேன்.

என்று உன் மனதினுள் உன்னை தூங்கவிடாத கனவுகள் உருவாகின்றதோ, அன்றே சோம்பேறித்தனம் உன்னை விட்டு நீங்கிவிடும். விரைவில் அவ்வாறான ஒரு கனவினை நீ கண்டறிய வேண்டும். அதை உன் வாழ்வாக்கிக் கொள்ளவேண்டும்.

அக்கனவினால் நீ மட்டுமல்லாது உன்னைச் சார்ந்தவர்களும் பயனடைய வேண்டும். அவர்களது வாழ்க்கையும் செழிக்க வேண்டும். அவ்வாறு ஒரு மனிதனாக உன்னால் வாழ முடிந்தால் வெற்றியையும் தாண்டி எவருமே அடையாத மன அமைதியை அடைந்து கொள்வாய்” எனக் கூறி முடித்தார் முனிவர்.

- பிருந்தா மகேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right