ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை எப்பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியாது - சம்பிக்க

By Digital Desk 5

29 Jun, 2022 | 05:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. 

ராஜபக்ஷர்கள் முழுமையாக அரசியலில் இருந்து நீங்க வேண்டும் அத்துடன் 300வருட காலத்திற்கு தேவையான அளவு கொள்ளையடித்துள்ள மக்கள் நிதியை ராஜபக்ஷர்கள் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். 

கோ ஹோம் கோட்டா என்பதை மக்கள் தொடர்ந்து அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என 43ஆவது படையணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள 43ஆவது படையணியின் காரியாலயத்தில் (29) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் விநியோக கட்டமைப்பின் பாதிப்பு முழு நாட்டின் நிர்வாக கட்டமைப்பையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றத்தை தொடர்ந்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளன.

வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான நெருக்கடியினை எதிர்க்கொள்கிறார்கள்.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எரிபொருள் பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் உட்பட அமைச்சரவை முன்கூட்டியே அறியவில்லையா,

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள மிக மோசமான நிலைமைக்கு குறுகிய கால திட்டங்கள் தீர்வாக அமையாது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் வைத்துக்கொண்டு எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு ஜனாதிபதியின் தவறான நிர்வாகமே மூலகாரணியாக அமைந்துள்ளது.

இலங்கை வங்குரோத்து நிலைமையினை அடைந்துள்ளது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை வங்கி,மக்கள் வங்கி வெளியிடும் கடன் பற்று பத்திரம் மீது சர்வதேச நிறுவனங்கள் நம்பிக்கை கொள்ளாத நிலைமை காணப்படுகிறது.இன்னும் சில நாட்களில் வங்கிக்கட்டமைப்பும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை சர்வதேசம் ஒருபோதும் அங்கிகரிக்காது.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையும் இல்லாதொழிந்துள்ளது.

பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த ராஜபக்ஷர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்துயிரளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகினால் பாராளுமன்றில் 24 மணித்தியாலத்திற்குள் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்துக்கொள்ள முடியும்.

அல்லது ஜனாதிபதி பதவி இடம்பெறும் வரை பதில் ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொள்வது குறித்து அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி விலகினால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது,ஜனாதிபதி பதவி வகிப்பதால் தான் பிரச்சினைகள் நாளாந்தம் தீவிரமடைகிறது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்; என்பதை நாட்டு மக்கள் தொடர்ந்து அழுத்தமாக குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகுவதற்கான நடவடிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்க வேண்டும்.மக்களின் எதிர்பார்ப்பிற்கமை பிரதமர் செயற்பட்டால் அவரும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right