15 வருட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்ன் மோர்கன் ஓய்வு

By Digital Desk 5

29 Jun, 2022 | 03:53 PM
image

(என்.வீ.ஏ.)

இங்கிலாந்துக்கு முதலாவது உலகக் கிண்ண வெற்றியை 2019 இல் ஈட்டிக்கொடுத்த ஆடவர் கிரிக்கெட் அணித் தலைவர் ஒய்ன் மோர்கன், தனது 15 வருடகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Was Quite Sad When It Hit Me: Eoin Morgan On The Moment He Realised His  Time Was Up In International Cricket

மாறுபாடான குணம் படைத்தவரும், முன்னோடியும், திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவருமான ஒய்ன் மோர்கன், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அயர்லாந்தில் ஆரம்பித்து இங்கிலாந்தில் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இங்கிலாந்தின் அதிசிறந்த மட்டுப்படுத்தப்பட்ட ஒவர் அணித் தலைவராக கருதப்பட்ட ஒய்ன் மோர்கன், நெதர்லாந்துடனான தொடரின்போது தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

3 போட்டிகளைக் கொண்ட அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ஒய்ன் மோர்கன் ஓட்டம் பெறாமலேயே ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என உணர்ந்த ஒய்ன் மோர்கன் தனது ஓய்வை செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தார்.

'முன்னாள் வீரர்கள் எவ்வாறான சூழ்நிலைகளில், எப்போது ஓய்வு பெற்றார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரிடம் உங்களைத் தாக்கும் ஒரு நேரமும் இடமும் இருப்பதாகக் குறிப்பிட்டதை கண்டறிந்தேன். அதேபோன்று நானும் ஒய்வு பெறவேண்டிய தருணம் எனக்க வந்ததை ஆம்ஸ்டர்டாமில் நான் உணர்ந்தேன்' என ஒய்ன் மோர்கன் குறிப்பிட்டார்.

'எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பல்வேறு விடயங்களைக் கொண்டிருந்தது. மிக நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்ட நான் எல்லோரையும் போன்று மேடு பள்ளங்களை சந்தித்தேன். எல்லாவற்றையும் நேர்மறையாக நோக்கினேன். ஒவ்வொரு விடயத்திலும் அர்த்தத்தை நன்கு புரிந்தவனாக செயல்பட்டேன். அது இங்கிலாந்து அணிக்காக மட்டுமல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொடர்பு பட்டிருந்தது.

'நான் ஓய்வு பெற வேண்டும் என எனது உள்மனம் எனக்கு உணர்த்திய நாளானது எனக்கு கவலை தரும் நாளாக இருந்தது. சிறப்புமிகு கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தமையே அதற்கு காரணம். ஆனால், அந்தத் தீர்மானம் குறித்து பெருமை அடைவதுடன் இங்கிலாந்து கிரிக்கெட் முன்னோக்கி நகர்வதைப் பார்க்கக் கிடைப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என ஒய்ன் மோர்கன் தெரிவித்தார்.

துடுப்பாட்டத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் உபாதைகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஒய்ன் மோர்கன், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் லண்டன் ஸ்பிரிட் அணியின் தலைவராக விளையாடவுள்ளார்.

ஸ்கொட்லாந்துக்கு எதிராக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமான ஒய்ன் மோர்கன், மூன்று வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டார்.

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் 2009ஆம் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியில் ஒய்ன் மோர்கன் அறிமுக வீரராக இடம்பெற்றார்.

அலஸ்டெயார் குக்குக்குப் பின்னர் இங்கிலாந்து அணியின் தலைவராக 2015இல் நியிமிக்கப்பட்ட ஒய்ன் மோர்கன், 126 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 72 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் தலைவராக விளையாடியுள்ளார்.

2016ஆம் ஆண்டு இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணியை வழிநடத்திய ஒய்ன் மோர்கன், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை உலக சம்பியனாக  வழிநடத்தியிருந்தார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக மொத்தம் 248 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 14 சதங்கள், 47 அரைச் சதங்களுடன் 7,701 ஓட்டங்களை மொத்தமாகக் குவித்தார்.

அத்துடன் இங்கிலாந்துக்காக 16 டெஸ்ட் போட்டிகளிலும் 115   சர்வதேச  இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right