'நிறை ஓதம் நீர் நின்று' ஐம்பெருங்காப்பிய மார்க்கம் - அரங்கேற்ற நிகழ்வு

Published By: Nanthini

29 Jun, 2022 | 01:37 PM
image

(மா. உஷாநந்தினி)

மிழ் இலக்கியங்களின் பொக்கிஷமாக போற்றப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவக சிந்தாமணி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங்காப்பியங்களின் முதன்மைக் காட்சிகளை அபிநயசேத்ரா நடனப்பள்ளியின் இயக்குநர் 'கலாசூரி' திவ்யா சுஜேன் நாட்டியமாக தயாரித்துள்ளார். 

'நிறை ஓதம் நீர் நின்று' எனும் இப்பெருங்காப்பிய நடன அமைப்பில், அவரது மாணவர்களான சொக்கர் பிரவீன், நிவேதிதா கணேசன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு, கடந்த 25ஆம் திகதி கொழும்பு  இராமகிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பெயரனான 'ஞானபாநு' கலாநிதி ராஜ்குமார் பாரதி முதன்மை விருந்தினராக வருகை தந்திருந்தார். 

இக்காப்பிய மார்க்கத்துக்கு இசை, ஜதி, பாடல் வரிகளை அமைத்தவர் ராஜ்குமார் பாரதி ஆவார். 

தலைமை விருந்தினராக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. அருளானந்தம் உமா மகேஸ்வரன், கௌரவ அதிதியாக கொழும்பு இந்து கல்லூரியின் அதிபர் திரு. கடம்பேஸ்வரன் மணிமார்பன் ஆகியோர் கலந்துகொண்டார். 

மேலும், மனித நேய நிதியத்தின் அமைப்பாளர் திருமதி. அபிராமி கைலாசபிள்ளை, உலக இளையோர் திருக்குறள் மன்றத்தின் (யாழ்ப்பாணம்) அமைப்பாளர் திருமதி. வலன்ரீனா இளங்கோவன், உலக இளையோர் திருக்குறள் மன்றத்தின் பொருளாளர் ஸ்ரீமதி பாமினி கேதீஸ்வரன், கொழும்பு கல்வி வலய ஓய்வு நிலை ஆசிரியர் திரு. கணேசலிங்கம், திருமதி. உபேந்திரா லக்மாலி, திருமதி. கணேஸ்வரா விஜயபாமா முதலிய பிரமுகர்களும் நிகழ்வில் அங்கம் வகித்தனர். 

முதற்கட்டமாக மங்கள விளக்கேற்றல், இறை பூஜையை அடுத்து நடன நங்கை நிவேதிதா கணேசனின் தங்கையான சிறுமி விவர்தனி வரவேற்புரை ஆற்றினார். 

நடனத்தின் முதல் அம்சமாக புஷ்பாஞ்சலி இடம்பெற்றது.

இந்நாட்டிய ஆற்றுகைக்கு இசைப் பங்களிப்பு வழங்கிய திரு. குரு பரத்வாஜ் (மிருதங்கம்), திருமதி. வித்யா கல்யாணராமன் (குரலிசை), திருமதி. கே.பி. நந்தினி சாய் கிரிதர் (வயலின்) ஆகியோருடன் திவ்யா சுஜேன் நட்டுவாங்கம் செய்திருந்தார். 

தொடர்ந்து அலாரிப்பு, ஜதீஸ்வரம், சீவகன் கவுத்துவம், சிலப்பதிகார வர்ணம், மணிபல்லவத்தீவில் மணிமேகலை - பதம், வளையாபதி - குண்டலகேசி, தில்லானா, மங்களம் ஆகிய உருப்படிகள் ஆடப்பட்டன.  

முதன்மை விருந்தினர் திரு. ராஜ்குமார் பாரதி மற்றும் தலைமை விருந்தினர் திரு. அருளானந்தம் உமா மகேஸ்வரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 

அத்தோடு அபிநய சேத்திரா நடனப்பள்ளியின் இயக்குநர் திருமதி. திவ்யா சுஜேன், இசைக் கலைஞர்கள், அரங்கேற்றம் நிகழ்த்திய பிரவின் - நிவேதிதா, அவர்களின் பெற்றோர் மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் கௌரவம் பெற்றனர். 

இந்நிகழ்வில் இடம்பெற்ற விருந்தினர் உரைகள் பின்வருமாறு:-

டாக்டர் ராஜ்குமார் பாரதி:

பாரதியார் தனது பாடல்களில் 'அடடா', 'ஓ' 'ஆஹா' என சில சொற்களை உணர்வுப்பெருக்கில் கையாள்வார். அதுபோன்ற ஓர் உணர்வை அரங்கத்தினர் தம் கரவொலியால் ஆமோதிக்க வேண்டும் என விரும்புகிறேன். 

கலாசூரி திவ்யா சுஜேன் இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஏனென்றால், இந்நாட்டின் கலையை பல பரிமாணங்களில், பரிமாண வளர்ச்சியை உண்டாக்கி, அக்கலையை மென்மேலும் வளர்ப்பது ஒரு தனிச்சிறப்பு. 

கடந்த 2019இலும் நான் இலங்கைக்கு வந்திருந்தேன். 

ரூபினி அருட்செல்வத்தின் நாட்டிய அரங்கேற்றத்தின்போது 'ஞால வெளியினிலே' என்ற தலைப்பில் முழுக்க முழுக்க பாரதி பாடல்களை கொண்டதாக ஒரு மார்க்கத்தை திவ்யா சுஜேன் கேட்க, அமைத்துக் கொடுத்தேன். 

பின்னர் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து 'போற்றித்தாய்' என்ற படைப்பினை உருவாக்கிக் கொடுத்தேன். அது தாய் - சேய் உறவை பற்றியது. இப்போது இந்த ஐம்பெருங்காப்பிய மார்க்கம். 

இந்த ஐம்பெருங்காப்பிய மார்க்கத்திலே சிலப்பதிகாரத்தில் ஞானகுரு ஐயாவின் வழிகாட்டுதலின் பேரில், மாதவி வரும் கட்டத்தில், அவள் ஆடுவது போன்றதேயான ஜதியை வடிவமைத்துத் தரும்படி கேட்க, நானும் அவ்வாறே தயாரித்தளித்தேன். 

இங்கு நான் வெறும் கருவி மட்டுமே. 

மிகக் கடினமான உருப்படிகளை, ஜதிகளை, பாடல்களை தீவிர பயிற்சி பெற்று, நிகழ்ச்சியை அளித்துள்ளனர், இந்த கலைஞர்கள். 

மேலும், இந்த காப்பிய மார்க்கத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் முக்கியமானது இசையே. 

இவ்வற்புத இசையை வழங்கிய திருமதி. வித்யா கல்யாணராமன், திரு. குரு பரத்வாஜ், திருமதி. கே.பி. நந்தினி சாய் கிரிதர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். 

இன்றைய நாயகன் - நாயகியான சொக்கர் பிரவீன், நிவேதிதா கணேசன் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்! 

இதுபோன்ற புது புது உத்திகளுக்குப் பின்னால் மாபெரும் உழைப்புண்டு. 

சென்னையில் நிகழும் அரங்கேற்றங்களுக்கு நிகராக, ஏன், ஒருபடி மேலாக, தரம் வாய்ந்ததாகவே இந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 

கடந்த வருடமே நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வு இது. எனினும், பெருந்தொற்றால் தடைப்பட்டுப் போய்விட்டது.

கலை எங்கிருந்தாலும் ஒன்றே. கலையின் தரம் எங்கிருப்பினும் ஒன்றே. 

எத்தனையோ கொரோனா இடர்ப்பாடுகள்.... தற்போது பாரிய பொருளாதார நெருக்கடி வேறு... இந்த வளமான நாட்டில் இப்படியொரு சோகம்.... 

இவற்றுக்கு மத்தியில் கலை நிகழ்ச்சிகளையும் நாம் எதிர்கொள்வோம். 

எப்போதும் நம்மால் துன்புற்றிருக்க முடியுமா? கொஞ்சமேனும் சந்தோஷம் வேண்டுமல்லவா! 

பாரதி சொல்கிறான், 'கேட்டினில் துணிந்து நில்' என்று.

இன்று துன்பத்தில் கட்டுண்டுள்ளோம், பொறுத்திருக்கிறோம். 

நாளை இந்த பிணிகள் எல்லாம் நீங்கும். 

மீண்டும் இலங்கை நிமிர்ந்து எழும். 

இன்று இந்த அரங்கேற்றம் இறைவனின் பேரருளால் சிறப்பு பெற்றிருக்கிறது. 

இலங்கை மக்களின் கலையார்வத்தையும் அன்பையும் நாம் நன்கறிவோம். 

இந்த நிகழ்ச்சியூடாக உங்களை மீண்டும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மென்மேலும் நடக்கட்டும். எல்லா பிணிகளும் அடங்கட்டும்... நம்மை விட்டு நீங்கட்டும்! 

திரு. அருளானந்தம் உமா மகேஸ்வரன்:

ஒரு நிறைவான அரங்கேற்றத்தை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

நமது தமிழ் இலக்கியங்களில் மிக செழிப்பான, பழைமை வாய்ந்த இலக்கியங்களான ஐம்பெரும் காப்பியங்களை, அவை கூறும் அறக்கருத்துக்களை அழகிய இசை மற்றும் பாடலினூடாக அளித்த இசைக்கலைஞர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்!

பாரதியாரின் கருத்துக்களை கொண்டமைந்த இந்நிகழ்வை காணக் கிடைத்ததே எமது பாக்கியம். 

உன்னதமான, இலகுநடைக் கவி வரிகளில் இம்மார்க்கத்தை அளித்த ராஜ்குமார் பாரதி ஐயா எமது நாட்டுக்கு வருகை தந்திருப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். 

நடனப்பள்ளியை உருவாக்குவது மட்டுமன்றி, கலைகளில் பல புதுமைகளை நிகழ்த்தக்கூடியவர், திருமதி. திவ்யா சுஜேன். 

கடந்த கால கொரோனா நோய்த்தாக்கத்தால் கலை நிகழ்ச்சிகள் பெரிதும் இடம்பெறவில்லை. எனினும், இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், கலைஞர்களை அழைத்து, இத்தகைய அரங்கேற்றத்தை நிகழ்த்திய நடன ஆசிரியைக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

திரு. கடம்பேஸ்வரன் மணிமார்பன்:

தமிழ் படிக்க மட்டுமல்ல, பார்க்க பார்க்கவும் சுவையானது என்பதை இந்த அரங்கம் நிரூபித்திருக்கிறது. 'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்றார் பாரதி. இந்த தமிழ் நிச்சயம் சாகாது. நாங்கள் இருக்கிறோம்... பாரதியின் கொள்ளுப் பெயரன் இருக்கிறார்.... என தெரிவித்திருந்தனர். 

இறுதியுரையாக, நடன கலைஞர்களான சொக்கர் பிரவீன் (பொகவந்தலாவ), நிவேதிதா கணேசன் (ஹட்டன்) ஆகியோர் நன்றியுரை வழங்கினர். 

இவ்விரு நடன மாணவர்களும் தமக்குள் இருக்கும் கலைத் தாகத்தை உணர்ந்து, நடனம் பயிற்றுவித்து, ஒரு மாபெரும் அரங்கேற்ற நிகழ்வினூடாக தம் கலைத்திறமையை உலகறியச் செய்த நடனப்பள்ளி ஆசிரியைக்கும், தமக்கு தூண்டுகோலாய் நின்று ஒத்து‍ழைத்த தம் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், என்றென்றும் நல்லாசி நல்கி வரும் இசை மேதை, பாரதியாரின் கொள்ளுப் பெயரன் ஞானபாநு ராஜ்குமார் பாரதி அவர்களுக்கும், இசையும் பாடலும் அளித்த கலைஞர்களுக்கும், அரங்கத்தினர் உட்பட அனைவருக்கும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08