தனியார் பேருந்து சேவை பயன்பாட்டை  மக்கள் முழுமையாக புறக்கணிப்பர் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 

By Digital Desk 5

29 Jun, 2022 | 12:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணத்தை எத்தனை சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்பது தொடர்பில் தனியார் பேருந்து  சங்கங்களுக்கிடையில் இணக்கப்பாடில்லாத காரணத்தினால் பேருந்து  கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுக்கவில்லை. 

தனியார் பேருந்து சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கமைய பேருந்து கட்டணத்தை அதிகரித்தால் பொது பயணிகள் தனியார் பேருந்து சேவை பயன்பாட்டை முழுமையாக புறக்கணிக்க நேரிடும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் நிலான் மிருன்டா தெரிவித்தார்.

பொது பயணிகளின நலனை கருத்திற்கொண்டு தற்போதைய நிலையில் பேருந்து  கட்டணத்தை அதிகரிக்காமல் தனியார் பேருந்து சேவைக்கு நிவாரண விலைக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு சங்கத்தினர் முன்வைக்க கோரிக்கை தொடர்பில் வலுசக்தி அமைச்சுடனும், நிதியமைச்சுடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணம் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவன சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது மறுபுறம் தற்போதைய நிலைமையில் பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்யாமல் எரிபொருள் நிவாரணம் வழங்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருக்கிடையில் இணக்கப்பாடு இல்லாத காரணத்தினால் கட்டண அதிகரிப்பு தொடர்பில் உறுதியான இறுதி தீர்மானத்தை முன்னெடுக்கவில்லை.

குறைந்தப்பட்ச பேருந்து கட்டணத்தை 40ரூபாவாக நிர்ணயிக்குமாறு தொழிற்சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் அதிருப்தி வெளியிட்டார்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

பேருந்து கட்டணத்தை அதிகரிக்காமல் நிவாரண அடிப்படையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்குவது குறித்து வலுசக்தி மற்றும் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன தொழிற்சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்.

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பிலான உறுதியான தீர்மானம் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right