(நெவில் அன்தனி)
அவுஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் 6 வருடங்களுக்கு முன்னர் 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் துவம்சம் செய்த இலங்கை, காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று 29 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் விளையாடவுள்ளது.
உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலையில் உள்ள அவுஸ்திரேலியா பலம் வாய்ந்த அணி எனவும் அதன் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.
அவஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வோர்ன் - முரளிதரன் விருதுக்காக விளையாடப்படுவதுடன் இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடராகவும் அமைகின்றது.
அத்துடன் மறைந்த ஷேன் வோர்னின் நினைவாக இன்றைய போட்டியின் ஆரம்பத்தில் அவருக்கு கௌரவஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அந் நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹொக்லி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன நிருவாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி குறித்து கருத்து வெளியிட்ட திமுத் கருணாரட்ன, 'உலக டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம் வகிக்கின்றது. அத்துடன் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் டெஸ்ட் தொடரில் பங்குபற்றவுள்ளது. எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் சவாலை எதிர்கொள்ள இலங்கை அணி தயாராக இருக்கின்றது' என்றார்.
6 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா இங்கு வருகை தந்து விளையாடிய டெஸ்ட் தொடரில் இலங்கை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையான வெற்றியை ஈட்டியிருந்தது. 2019இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 2 - 0 என தோல்வி அடைந்தது.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
இந் நிலையில் அண்மையில் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் ஈட்டிய வெற்றி அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாக திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.
'பங்களாதேஷுக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஈட்டிய வெற்றி எமக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அந்தத் தொடரில் எமது வேகப்பந்துவீச்சாளர்கள் அபரிமிதமாக பந்துவீசியிருந்தனர். அத்துடன் ஏஞ்சலோ மெத்யூஸின் துடுப்பாட்டமும் முக்கிய பங்காற்றியது. எமது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் விளையாடவுள்ளோம். எவ்வாறாயினும் அணியில் இடம்பெறும் சுழல்பந்துவீச்சாளரகள் அனைவரும் போதிய அனுபவம் அற்றவர்கள்.
'எமது பிரதான சுழல்பந்துவீச்சாளராக லசித் எம்புல்தெனிய விளங்குகிறார். அவருக்கும் ஏனைய பந்துவீச்சாளர்களுக்கும் போதிய சர்வதேச அனுபவம் இல்லை. எனினும் அண்மைக்காலங்களில் அவர்கள் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர். 2016ஆம் ஆண்டு ரங்கன ஹேரத் சாதித்ததைப் போல எமது இளம் சுழல்பந்துவீச்சாளரகள் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் ' என்றார் திமுத் கருணாரட்ன.
'அவுஸ்திரேலிய அணித் தலைவர் பெட் கமின்ஸ் உட்பட மற்றைய வேகப்பந்துவீச்சாளர்கள் சாதிக்கக் கூடியவர்கள். அத்துடன் சுழல் பந்துவீச்சாளர் நெதன் லயனும் அணியில் இணைந்துள்ளார். எனவே இந்த தொடர் எமக்கு சவாலாக அமையும். எவ்வாறாயினும் சொந்த மண் அனுகூலத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற முயற்சிப்போம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் 6 வருடங்களுக்கு முன்னர் தோல்வி அடைந்த போதிலும் இம்முறை நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அவுஸ்திரேலிய ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்தார்;.
'இலங்கையில் நாங்கள் கடைசியாக விளையாடியபோது எமது திறமை மங்கியிருந்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தபோது அங்கு ஈட்டிய தொடர் வெற்றி உபகண்டத்தில் எம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. எமது அணி சுழல்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள கற்றுக்கொண்டுள்ளது. மேலும் கடந்த கால தவறுகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். எனவே இந்த டெஸ்ட் தொடரில் திறமையாக விளையாடக்கூடியதாக இருக்கும்' என உஸ்மான் கவாஜா கூறினார்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வ்h, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ் லசித் எம்புல்தெனிய, அசித்த பெரனாண்டோ, கசுன் ராஜித்த அல்லது அல்லது ஜெவ்றி வெண்டர்சே.
அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, டேவிட் வோர்னர், மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட் அல்லது க்ளென் மெக்ஸ்வெல், கெமரன் க்றீன், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க் அல்லது ஜொஷ் ஹேஸ்ல்வூட், நெதன் லயன், மிச்செல் ஸ்வெப்சன்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM