டட்லியின் இரக்கமனம்.....!

29 Jun, 2022 | 12:20 PM
image

கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் பெரிய அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் சிலர்  நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் நாடகபாணியிலான நிகழ்வொன்றை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதை மக்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பார்கள்.அதன் காணொளி பதிவுகள் சமூக ஊடகங்களிலும் தாராளமாக பகிரப்பட்டன. 

  பெரிய அரிசி ஆலை முதலாளிகள் தங்களுக்கு இருக்கக்கூடிய அரசியல் செல்வாக்கையும் பணபலத்தையும்  பயன்படுத்தி சந்தை நிலைவரங்களை தமக்கு அனுகூலமான முறையில் மாற்றி பழிபாவத்துக்கு அஞ்சாமல் மக்களைச் சுரண்டி பெரும்பணம் சம்பாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் அவர்களை 'அரிசி மாபியா ' என்று  அழைப்பதுண்டு.அவர்கள் மத்தியிலும் இன்று படுமோசமான பொருளாதார நெருக்கடியினால்  நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற அவலங்களைக் கண்டு மனமிரங்கி அதிகபட்ச  இலாபம் சம்பாதிக்க முயற்சிக்காமல் ஓரளவேனும்  ' தியாகம் ' செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

   அரிசி வகைகள் மீது அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாட்டு விலைகள்  தொடர்பில் அரிசி ஆலை முதலாளிகள் மத்தியில் முரண்பாடுகள்  தோன்றியிருப்பதை  அந்த செய்தியாளர்கள் மகாநாட்டில் காணக்கூடியதாக இருந்தது.சந்தையில் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்குமுகமாக நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை 25 ரூபாவால் அதிகரிக்கவேண்டும் என்று ஒரு முதலாளி அரசாங்கத்திடம்  கோரிக்கை விடுத்தார்.அதை இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான டட்லி சிறிசேன கடுமையாக ஆட்சேபித்தார்.தனக்கு  பக்கத்தில் அமர்ந்திருந்த இன்னொரு முதலாளியுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் ஒரு கட்டத்தில் மகாநாட்டில் இருந்து  இருந்து வெளியேறவும் செய்தார். அந்த முதலாளியை டட்லி நெஞ்சில் தள்ளியதையும் காணொளியில் கண்டோம். 

   கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்துசெல்லும் விலைவாசிக்கும் அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாட்டுக்கும் மத்தியில் மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் டட்லி  அரிசி விலையை அதிகரிப்பது ஒரு பாவச்செயல் என்று நினைத்தார் போலும்.    இவர் நாட்டில் உள்ள மிகப்பெரிய அரிசி ஆலைகளில் ஒன்றான அறலிய அரிசி ஆலையின் உரிமையாளர் ; முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர்.

   அரிசி வியாபாரிகள் ஓரளவு நியாயமான இலாபத்தைச் சம்பாதிக்கக்கூடியதாக நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலையை  அதிகரிக்கவேண்டும் என்பதே விலையுயர்வைக் கோரிய முதலாளியின் நிலைப்பாடு.ஆனால், வெகுண்டெழுந்த டட்லி பாவனையாளர் விவகார அதிகாரசபையினால் விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை ஏற்றுக்கொண்டு அரிசி ஆலை முதலாளிகள் தங்களிடம் இருக்கும் அரிசி கையிருப்பை சந்தைக்கு விடவேண்டும் என்றும் பல அரிசி ஆலை முதலாளிகள் கட்டுப்பாட்டு விலைகளில் அரிசி வகைகளை சந்தைக்கு விநியோகிக்கத் தயாராயிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

 

   அரிசி ஆலை முதலாளிகள் மக்களுக்கு அரிசி விற்பனை செய்து பெருமளவு சொத்துக்களைச் சேர்த்துவிட்டார்கள்.இனிமேல் அவர்கள் தியாகம் செய்யத்தயாராகவேண்டும்.முன்னென்றும் இல்லாத வகையிலான இன்றைய பொருளாதார நெருக்கடியில் இலாப நோக்கை முதலாளிகள் கைவிடவேண்டும் என்றும் டட்லி  வலியுறுத்தினார்.அரிசி மாபியாவை வழிக்கு கொண்டுவர அதில் உள்ள ஒருவரே முன்வந்ததை வரவேற்காமல் இருக்கமுடியவில்லை.

   ஆனால், அவரின் இந்த மனமாற்றத்துக்கு சில ஊடகங்கள்  ஒவ்வொரு அர்த்தத்தைக் கற்பிக்க முயற்சிக்கின்றன.சகோதரர் மைத்திரிபால சிறிசேனவின் தாழ்ந்துகொண்டுசெல்லும்  அரசியல் செல்வாக்கை எழுப்பி  நிமிர்த்துவதற்காகவே டட்லி இவ்வாறு நாடகமாடுகிறார் என்று சிலரும் அவரே அரசியலுக்கு வரும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறார் போலும் என்று வேறு சிலரும் அர்த்தம் கற்பிப்பதை காணமுடிகிறது.நிலைவரம் போகிற போக்கில் உணவுக்கலகம் ஒன்று மூண்டால் அரிசி ஆலைகளை மக்கள் முற்றுகையிட்டு கையிருப்புக்களை காலி செய்துவிடுவார்கள் என்று அவர் பயந்திருக்கவும் கூடும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

     எது எவ்வாறிருந்தாலும், விலைவாசி உயர்வைப் பற்றி கிஞ்சித்தேனும் கவலைப்படாமல் தினமும் பல பொருட்களின் விலைகளை கடுமையாக அதிகரிக்க அரசாங்கம் அனுமதித்துக்கொண்டிருக்கும் நிலையில்,மீண்டும் விலைவாசி அதிகரிக்கும் என்று தினமும் மறவாமல் அபாயச்சங்கை ஊதிக்கொண்டிருக்கும் நிலையில்  அரிசி மாபியாவில் உள்ள ஒருவரின் மனம் இரங்கியிருக்கிறதே!இதைக் கண்டு அரசாங்கம்தான் வெட்கப்படவேண்டும்.மக்கள் பொறுமைகாத்து  தியாகம் செய்யவேண்டும் என்று  அரசாங்கம்  கேட்டுக்கொண்டிருக்கும்போது டட்லி மக்களின் நலனுக்காக  முதலாளிகளைத் தியாகம் செய்யுமாறு கேட்கிறார்.

  இவ்வாறு எத்தனை முதலாளிமார் மக்களின் அவலம் கண்டு மனமிரங்கத் தயாராயிருக்கிறார்கள்? பழைய கையிருப்புக்களை புதிய விலைகளில் விற்பனை செய்து அடாத்தான முறையில் பெரும் பணம் சம்பாதிக்கும் முதலாளிகள் கூட்டம்   இன்று மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. மேலும் விலைகள் அதிகரிக்கும் என்பதால் பதுக்கலிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.அவர்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் நினைத்துப்பார்க்கவே தயாராயில்லை.பொருட்களுக்கு தினமும்  ஒவ்வொரு விலையை மக்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.மக்களின் பொறுமை கடுமையாக சோதிக்கப்படுகிறது.முன்னர் போலன்றி தற்போதைய விலை உயர்வுகள் 25,35,40 என்ற வீதங்களில் அமைகின்றன.வாழ்க்கைச் செலவு 150 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

   ஆனால், மக்களின் வருமானத்தில் எந்த அதிகரிப்புக்கும் அறவே வாய்ப்பில்லை.பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு  வியாபாரிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை.

  நிலைவரம் இவ்வாறே தொடர்ந்துகொண்டு போகுமானால், எரிபொருள் நிரப்புநிலையங்களில் இன்று காணப்படக்கூடியதாக இருக்கின்ற வன்முறைகள்  வர்த்தக நிலையங்களுக்கும் பரவி பெரும் அராஜகநிலை மூளுவதை தடுக்கமுடியாமல் போகும்.ஏற்கெனவே ஒரு அரை அராஜக நிலைதான் காணப்படுகிறது.

    அரசாங்க ஊழியர்களின் மாதச்சம்பளத்தை வழங்குவதற்கு பணத்தை அச்சடிப்பதில் இறங்கியிருக்கும் அரசாங்கம் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து நினைத்துப்பார்க்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.அரசாங்க ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. அரசாங்க ஊழியர்கள் ஐந்து வருடகால சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு சென்று வேலைபார்க்கலாம் என்றும் திரும்பி வரும்போது அவர்களது வருடாந்த சம்பள உயர்வுகளுக்கோ அல்லது சேவை மூப்பு மற்றும் பதவியுயர்வுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும்  அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதேவேளை, அரசாங்க ஊழியர்கள் உள்நாட்டில் தனியார்துறையில் வேலை வாய்ப்புக்களைத் தேடிச்செல்வதற்கும் ஐந்து வருடகால சம்பளமற்ற விடுமுறை வழங்கும் சாத்தியம் குறித்து ஆராய குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருக்கிறது. 

  சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்  அரசாங்கம் அதனிடமிருந்து வரக்கூடிய கடனுதவியே கதி என்று காத்துக்கிடக்கிறது.ஆனால்,அந்த உதவி பெருமளவு நிபந்தனைகளுடனானதாகவே இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசாங்க சேவையில் கடுமையான  ஆட்குறைப்பைச் செய்யவேண்டும் என்பது  அந்த நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதால் அரசாங்க சேவையில் உள்ளோரை வெளிநாடுகளுக்கு செல்ல ஊக்குவித்து ஒரு தற்காலிக ஆட்குறைப்பு முயற்சியில் முன்னெச்சரிக்கையாகஅரசாங்கம் ஈடுபடுகிறது போன்று தெரிகிறது.அத்துடன் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களினால் அனுப்பப்படக்கூடிய அந்நிய செலாவணி அரசாங்கத்துக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.அரசாங்க சேவையில் இளைஞர்கள் நாட்டம் காட்டாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் அக்கறையுடன் கவனம் செலுத்துகிறது.

  வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக வேலைக்கு செல்ல விரும்புபவர்களின் வயதெல்லையையும் அரசாங்கம் குறைக்கிறது.அமைச்சரவை உப குழுவொன்றின்  ஆலோசனையை அடுத்து அந்த வயதெல்லையை 21ஆக குறைப்பதற்கு தீர்மானித்திருப்பதாக கடந்தவாரம் அரசாங்கம் அறிவித்தது.

   சவூதி அரேபியாவுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக செல்பவர்களின் வயதெல்லை 25 ஆகவும் மற்றைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்பவர்களின் வயதெல்லை 23 ஆகவும் ஏனைய சகல நாடுகளுக்கும்  பணிப்பெண்களாகச் செல்பவர்களின் வயதெல்லை 21 ஆகவும் இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம் மேற்கூறப்பட்ட சகல வகையினருக்குமான வயதெல்லை இனிமேல்  21 ஆக இருக்கும்.

     அதேவேளை, தனியார் துறை ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றமுறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிப்பது தொடர்பில் தொழில் கொள்வோருடனும் தொழிற்சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தொழில் அமைச்சு திட்டமிடுவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.தனியார்துறை ஊழியர்களின் தற்போதைய குறைந்த பட்ச மாதச்சம்பளம் 12,500 ரூபாவாகும்.

   ஏற்னெவே 2022 பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக தனியார்துறை ஊழியர்களின் குறைந்த பட்ச மாதச்சம்பளத்தை 25,000 ரூபாவாக அதிகரிக்கவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன.ஆனால்,அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள், தொழில்கொள்வோரும் தொழிற்சங்கங்களும் கருத்தொருமிப்புக்கு வரத்தவறியதால், வெற்றிபெறமுடியவில்லை.அடுத்தடுத்த மாதங்களில் தனியார்துறை நிலைகுலையும் ஆபத்து இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கும் பின்புலத்தில் நோக்குகையில் தனியார்துறை ஊழியர்களின் குறைந்தபட்ட சம்பளத்தை கணிசமானளவுக்கு அதிகரிப்பதற்கு தொழில்கொள்வோர் இணங்குவார்கள் என்பது சந்தேகமே.ஏற்கெனவே பல தனியார்துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

   அண்மைய மாதங்களில் பணவீக்கத்தில் ஏற்பட்ட கடுமையான அதிகரிப்பு காரணமாக அதிகப்பெரும்பான்மையான தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்கள் அவர்களின் குடும்பங்களின் அரைமாதச் செலவுக்கே போதாமல் போயிருக்கிறது.உணவுப்பொருட்களின் விலைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் 58   சதவீதத்தினால் அதிகரித்திருக்கும் அதேவேளை, போக்குவரத்துச் செலவு 76.7 சதவீதம் அதிகரித்திருக்கிறது.எரிபொருட்களின் விலைகள் இவ்வருடம் இதுவரையில் ஐந்து தடவைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.

    நிலைமை இவ்வாறிருக்க, மீண்டும் கடந்த  திங்கட்கிழமை எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து பஸ் கட்டணங்களை மீளாய்வு செய்யுமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அரசாங்கத்தைக் கேட்டிருந்தார்.

   வருடாந்த பஸ் கட்டண மீளாய்வு  ஜூலை முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படுவது வழமை. அந்த மீளாய்வு குறித்து அரசாங்கத்திடமிருந்து திங்கட்கிழமை 'பச்சை விளக்கு ' காண்பிக்கப்படாவிட்டால்  செவ்வாய்க்கிழமையில் இருந்து தனியார் பஸ் சேவைகளை நிறுத்திவிடப்போவதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.ஏற்கெனவே மிகவும் அண்மையில் குறுகிய கால இடைவெளிக்குள் இரு தடவைகள் எரிபொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டிருந்தன.பிந்திய அதிகரிப்பு திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

  எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட கையோடு பஸ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன.அதனால் இன்றைய நெருக்கடியான தருணத்தில் வருடாந்த கட்டண மீளாய்வை இத்தடவை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மக்களின் நலன் கருதி வலியுறுத்தாமல் இருந்திருக்கலாம்.நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து பஸ்கட்டணங்களை 30 சதவீதத்தினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.குறைந்தபட்ச கட்டணம் 40 ரூபாவாக இருக்கும்.இதனால் மேலும் பாதிக்கப்படப்போகிறவர்கள் மக்களே.

  அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையில் இலாப நோக்கைக் கைவிட்டு அரிசி முதலாளிகள் தியாகம் செய்ய முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதைப் போன்று கெமுனு விஜேரத்னவும்  தனியார் பஸ் உரிமையாளர்களிடம்  கேட்டுக்கொண்டால் என்ன?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் தினம்

2024-05-22 20:08:47
news-image

வல்லரசு நாடுகளுக்கு சவாலாக உலகை தன்...

2024-05-22 10:53:56
news-image

நல்லிணக்கத்துக்கு ஜனாதிபதியின் உள்ளார்ந்த ஈடுபாடு அவசியம்

2024-05-21 12:45:05
news-image

கண்ணோட்டம் : சட்டம் பற்றிய அறிவினை...

2024-05-21 09:16:17
news-image

படையினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள்...

2024-05-21 03:53:30
news-image

இரத்தினபுரி தும்பர தோட்ட சம்பவம்; பத்தோடு...

2024-05-21 03:42:15
news-image

சவால்களுக்கு மத்தியில் மீண்டுவரும் இலங்கை 

2024-05-20 18:35:04
news-image

இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான...

2024-05-20 17:33:41
news-image

சிங்கப்பூரின் நவீனமயமாக்கத்துக்கு தந்தை வழியில் தன்னை...

2024-05-21 14:14:48
news-image

அரசானது சிவில் சமூக அமைப்புக்களின் உதாரணத்தை...

2024-05-20 12:41:06
news-image

2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம்...

2024-05-20 14:46:47
news-image

சமஷ்டி உத்தரவாதம் வழங்கப்படும் வரையில் ஜனாதிபதி...

2024-05-20 02:49:11