எம்மில் பலருக்கும் அவர்களின் வயிற்று தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால் இது மெதுவாக அந்த தசைகளை பலவீனப்படுத்தும். இவ்வாறு தசைகள் பலவீனமடைவதால் தான் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.

அதே சமயத்தில் ஒரு சிலருக்கு தசை பலவீனம் என்பது பாரம்பரியமாகக் கூட வரக்கூடியது தான். அதேபோல் யாருக்கேனும் நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தாலோ அல்லது மலம் கழிக்கும் போது கஷ்டப்பட்டு கழித்தாலோ இதன் காரணமாகக்கூட கடுமையான அழுத்தம் ஏற்பட்டு மென்மையான வயிற்றுத் திசுக்கள் பலவீனமடைவதற்கும், கிழிந்து போவதற்கும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாகவும் குடலிறக்கம் ஏற்படலாம். அதேபோல் இத்தகைய குடலிறலக்கம் பெண்களைக் காட்டிலும் முதுமையில் இருக்கும் ஆண்களுக்கு அதிகம் வருவதாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. எதுவாகயிருப்பினும் குடலிறக்க பிர்ச்சினைக்கு சத்திர சிகிச்சை மூலமான தீர்வு தான் சிறந்ததாக இருக்கும். 

அதிலும் குடலிறக்கத்திற்கு லேப்றாஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை தான் பாதுகாப்பானது. குடலிறக்க நோயினை கண்டறிந்தவுடன் அங்கு அதன் பாதிப்பைப் பொறுத்து சத்திர சிகிச்சை செய்து கொள்ளவேண்டும். அதன் பின்னரான பராமரிப்பு தான் இவ்வகையான சிகிச்சையில் பிரதான இடம் வகிக்கிறது. இவ்வகையான சத்திர சிகிச்சைக்கு பின் அதிக எடையுள்ள சுமைகளை தூக்குவதோ, பணிப்பளுவை அதிகரித்துக்கொள்வதோ கூடாது. அதிலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்ற காலகட்டத்தில் முற்றிலும் ஓய்வாகவே இருக்கவேண்டும். அதை அலட்சியப்படுத்தி பணிகளில் ஈடுபட்டு குடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் சத்திர சிகிச்சையின் மூலம் குணப்படுத்தப்பட்ட அவ்விடம் மீண்டும் சிக்கலுக்குள்ளாகும். அதனால் மீண்டும் ஒரு சிறிய இடைவெளிவிட்டு அங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகும். அதனால் குடலிறக்கத்திற்கு சத்திர சிகிச்சை செய்து கொண்ட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் காலகட்டம் வரை கட்டாயமாக ஒய்வில் இருக்கவேண்டும். அதன் பின்னரே பணியாற்றலாம்.

டொக்டர் M.குணசேகரன் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்