22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் விரைவில் பாராளுமன்றிற்கு அதன் பின் 21 ஆவது திருத்தம் என பெயர் மாற்றப்படும் - விஜேதாச ராஜபக்ஷ

By Vishnu

28 Jun, 2022 | 10:42 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் ஓரிரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு , அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தன் பின்னர் இத் திருத்தமானது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமாக பெயர் மாற்றப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்களும் சர்வதேச சமூகமும் எதிர்பார்த்ததைப்  போன்று நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் முக்கிய நிபந்தனையான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்படுவதோடு, விரைவில் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும். குறித்த சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு 7 நாட்களின் பின்னர் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கப்பட்டு அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அரசியலமைப்பு திருத்தத்தின் இலக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவற்ற நிலைமையொன்று காணப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள திருத்தமே 21 ஆவது திருத்தம் ஆகும்.

அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகின்றமையால் அரசாங்கத்தினால் அரசியலமைப்பு திருத்தமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இதனை 22 ஆவது திருத்தமாகக் கருதுகின்றோம்.

அரசாங்கத்தினால் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டமையினால் , என்னால் முன்வைக்கப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.

எவ்வாறிருப்பினும் தற்போது அமைச்சரவை அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 21 ஆவது திருத்தம் என்று பெயர் மாற்றப்படும். அதற்கமைய 22 ஆவது திருத்தம் தொடர்பான முதலாவது விவாதம் ஆரம்பிக்கும் போது , அது 21 ஆவது திருத்தமாகவே குறிப்பிடப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்த முடியாதது என நான் நம்புகின்றேன்.

அதில் உள்ள ஒவ்வொரு சரத்தையும் சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right