சர்வதேசத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன - ருவான் விஜேவர்தன

By Vishnu

28 Jun, 2022 | 05:14 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்குலக நாடுகளுடன் முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன.

அதன் காரணமாகவே ஆரம்பத்தில் நாட்டை பொறுப்பேற்கத் தயங்கியவர்கள் தற்போது பிரதமர் பதவியைத் தேடுகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

தொழில் வல்லுநர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெருக்கடி நிலைமைகளின் போது சவால்களைப் பொறுப்பேற்காத எதிர்க்கட்சிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பினை ஏற்று 2 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் அவர் தோல்வியடைந்துள்ளதாக் கூறுகின்றன. நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவருக்கு இன்னும் சிறிது காலம் செல்லும்.

எரிபொருள் நெருக்கடியினால் மக்கள் வேறுபாடுகள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் நன்கு அறிவோம். ஏனெனில் நாமும் வரிசைகளில் இருந்து எரிபொருளைப் பெறுகிறோம்.

மக்கள் படும் துன்பம் எங்களுக்கு தெரியும். இந்தப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

மத்திய வங்கியின் டொலர் கையிருப்பு பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்து இலங்கை வங்குரோத்து நாடாக உலகிற்கு அறியப்பட்ட போதே ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

இந்தியாவிடமிருந்து கடன் திட்டத்தின் கீழ் பெற்ற எரிபொருளைத் தவிர, வேறு எந்த வகையிலும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு முற்பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

கடந்த நவம்பரில் இருந்து எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 738 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினர். எனவே தான் புதிய விநியோகத்தர்களை தேட வேண்டியேற்பட்டது.

மருந்து பிரச்சினைகள் இன்னும் உள்ளன. இந்த நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம், இந்திய பிரதிநிதிகள், அமெரிக்க மற்றும் சீன தூதர்கள் ஆகியோருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைகள்  அனைத்தும் மிகவும் வெற்றிகரமான கட்டத்தில் உள்ளன.

இவ்வாறான நிலைமையிலேயே எரிபொருள் நெருக்கடி மீண்டும் தலைதூக்கியுள்ளது. இலங்கை தற்போது வங்குரோத்தடைந்த நாடாகக் கருதப்படுகிறது.

உலக தரவரிசைப்படுத்தலில் வீழ்ச்சி கண்டுள்ளோம். இதன் காரணமாக உள்நாட்டு வங்கியில் திறக்கப்பட்ட கடன் கடிதத்தின் மீது நம்பிக்கை அற்ற நிலைமை சர்வதேசத்தின் மத்தியில் காணப்படுகிறது.

எரிபொருளைப் பெறுவதற்கு பல நாடுகளுடன் கலந்துரையாடி வருகிறோம். ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு , மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதமர் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். இந்த நெருக்கடிகளை உணர்ந்த பின்னரே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றார். நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தினார்.

அதனால்தான் ஜூன் மாதத்தின் இறுதி வாரங்களில் கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்ற உண்மையை அவர் வெளிப்படுத்தினார்.

இவ்வாறு நாட்டின் உண்மை நிலைமையை கூறிய போது , மக்கள் கேலி செய்தார்களே தவிர அவர்கள் பிரச்சனையைப் புரிந்துகொள்ளவில்லை. பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவுமில்லை. உலகின் பல நாடுகளில் இதுபோன்ற எரிபொருள் நெருக்கடிகள் உள்ளன.

இங்கிலாந்தில் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு இதே நிலை ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள கட்சிகள் எவ்வித பிளவுமின்றி ஒன்றிணைந்து எரிபொருள் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டன. ஆனால் இலங்கை அரசியல்வாதிகள் அவ்வாறல்ல. இந்த நெருக்கடியில் கூட அரசியல் ஆதாயம் தேடவே முயற்சிக்கின்றனர்.

அன்று பிரதமர் பதவியை ஏற்பதற்கு நிபந்தனைகள் விதித்தவர்கள் , இன்று ஏன் பிரதமர் பதவியை தேடி அலைகிறார்கள்? சர்வதேச நாடுகளுடன் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுக்கள் வெற்றியடைந்ததன் காரணமாகவே இன்று அவர்கள் பிரதமர் பதவியை தேடி வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுவது தொடர்பில் சாதகமாக பதிலளித்துள்ளதே இதற்குக் காரணமாகும். அத்தோடு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் எமக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளன. இதனால்தான் அவர்கள் இப்போது பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அவர்களும் நாட்டைக் கட்டியெழுப்ப 6 மாதங்கள் அவகாசம் கேட்கின்றனர். மற்றொருவர் 5 ஆண்டுகள் தேவை என்கிறார். எனவே இந்த வாய்ப்பை பிரதமருக்கு ஏன் வழங்கக் கூடாது? அவர் பிரதமராகி இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அவர் திட்டமிட்டபடி நாட்டைக் கட்டியெழுப்புவார். அதற்காக குறைந்தபட்சம் ஆறு மாத கால அவகாசம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எதிர்க்கட்சியானாலும் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களாலும் எரிபொருளை வழங்க முடியாது. எனவே இந்த இரண்டு வாரங்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டு;க் கொள்கின்றோம். இரண்டு வருடங்களாக அழிந்த நாட்டை இரண்டு மாதங்களில் மாற்ற முடியாது. அதற்கு சிறிது காலம் செல்லும். எனவே மக்கள் அனைவரையும்  ஒன்றிணைந்து எமக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right