மக்கள் போராட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை பாதிக்காது - உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன்

By T. Saranya

28 Jun, 2022 | 05:23 PM
image

(நா.தனுஜா)

இலங்கை மக்களின் போராட்டங்களால் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படப்போவதில்லை.

ஏனெனில் இவ்விடயத்தில் இருதரப்பினரதும் எதிர்பார்ப்புக்கள் ஒத்தவையாகவே காணப்படுகின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கும் தெற்காசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றம் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கான உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன், தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கும், அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டுவந்த பொருளாதாரக்கொள்கைகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு குறித்து மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் கருத்து சரியானதா என்பது குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மக்களின் போராட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் என்று கூறப்படும் கருத்து ஏற்புடையதன்று. உண்மையில் அதற்கு மாறான விடயங்களே இடம்பெறும். 

ஏனெனில் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளைப் பொறுத்தமட்டில், அந்நாடுகளின் அரசாங்கங்கள் உதவிகோரி சர்வதேச நாணய நிதியத்தை நாடியதன் பின்னரே அதற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப்போராடினார்கள். ஆனால் இங்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பும் மக்களின் எதிர்பார்ப்பும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன.

அதேபோன்று இன்றளவிலே நாடளாவிய ரீதியில் வீதிகளில் இறங்கிப்போராடும் மக்கள் அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளடங்கலாக நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கும், அரசாங்கத்தினால் பின்பற்றப்பட்டுவந்த பொருளாதாரக்கொள்கைகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு குறித்துத் தெளிவாக அறிந்திருக்கின்றார்கள். 

கடந்த 2020 ஆம் ஆண்டில் வரி அளவீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், போதிய வெளிநாட்டுக்கையிருப்பு இல்லாதபோதிலும் வெளிநாட்டுக்கடன்களை தொடர்ந்து செலுத்துவதற்கு மேற்கொண்ட தீர்மானம், அதிகளவிலான நாணயத்தாள்களை அச்சிட்டதன் மூலம் பணவீக்கம் மற்றும் பணப்பெறுமதி வீழ்ச்சி என்பவற்றுக்கு வழிகோலியமை என்பனவே தற்போதைய அத்தியாவசியப்பொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிக்கான பிரதான காரணங்களாகும்.

ஆகவே தற்போது பேசப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டமானது இந்தக் கொள்கைகளை மீளப்பெறுவதற்கான செயற்திட்டமாகும். அதுமாத்திரமன்றி பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அவசியமான கொள்கைகளை உள்வாங்குவதற்கு மிகச்சரியான தருணம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right