ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்க தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்தவேண்டாம் -  ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்

By Vishnu

28 Jun, 2022 | 05:11 PM
image

(நா.தனுஜா)

இலங்கையைப் பொறுத்தமட்டில் பொதுமக்கள் ஏன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் என்ற காரணத்தை அறிந்துகொள்வதற்கும் தீர்வை வழங்குவதற்குமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதைவிடுத்து, அவை அரசாங்கத்தின் நிறைவேற்றுத்தீர்மானங்கள் மூலம் அடக்கப்படுவதாகக் கடுமையான கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி, தமது சட்டரீதியான உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெற்சொஸி துனிசியா, ஆர்மேனியா, இலங்கை மற்றும் சிம்பாபே ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு, அந்நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்ந்து, அதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 இலங்கையில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில், சில ஒன்றுகூடல்களைத் தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம் மற்றும் அவர்களது அதிருப்தி என்னவென்பதை அறிந்துகொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, நிறைவேற்றுத்தீர்மானத்தின் ஊடாக அந்த ஆர்ப்பாட்டங்கள் அடக்கப்படுகின்றன.

 அதுமாத்திரமன்றி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கான விடையாக பொலிஸார் பிரசன்னமாவதுடன், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மீறும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கான பொறுப்புக்கூறல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமத்துவமான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், சிறந்த வேலைச்சூழல் மற்றும் கல்விக்கான உரிமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக்கோரி அமைதியான முறையில் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 அமைதி வழியிலான ஒன்றுகூடல்கள் தொடர்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் சட்டரீதியான தேவைப்பாடு சார்ந்த கொள்கைகள் மற்றும் அவசியத்தன்மை என்பவற்றுக்கு ஏற்புடையதாக அமைவது அவசியம் என்பதுடன், அவை வெறுமனே மேம்போக்காகப் பிரயோகிக்கப்படக்கூடாது.

ஆகவே இலங்கை அரசாங்கம் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பில் தெளிவானதும், சட்டத்திற்கு அமைவானதுமான வழிகாட்டல்களைத் தயாரிக்கவேண்டியது அவசியமாகும். அத்தோடு அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தமது சட்ட உரிமையைப் பயன்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புச்சட்டங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரை இலக்குவைப்பதற்கும் கைதுசெய்வதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேவேளை கடந்த 2021 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான வழிகாட்டல்கள் இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடு மேலும் மீறப்படுவதற்கு வழிவகுக்கும் என்பது மிகுந்த கரிசனைக்குரிய விடயமாகும்.

 மேலும் கடந்த மார்ச்மாத இறுதியிலிருந்து நாடளாவிய ரீதியில் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அவசரகாலநிலைப்பிரகடனம் மற்றும் அவசரகால வழிகாட்டல்கள் வெளியீடு உள்ளடங்கலாக அதனுடன் தொடர்புபட்டதாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப்பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமைக்காகப் பாதுகாப்புப்படையினரால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டமை ஆகிய சம்பவங்கள் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

 இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கமானது அர்த்தமுள்ள பாதுகாப்புக்கட்டமைப்பு மறுசீரமைப்பை மேற்கொள்வதுடன், இராணுவமயமாக்கலை முடிவிற்குக்கொண்டுவரவேண்டும்.

அத்தோடு பாராளுமன்றப்பேரவை, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்கள் உரியவாறு இயங்குவதற்கு அவசியமான உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right