சிறுவர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்த தீர்மானம்

By Vishnu

28 Jun, 2022 | 02:45 PM
image

(எம்.மனோசித்ரா)

சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும்,  சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு பிள்ளையும் சிறுவர் எனப் பொருள்கோடல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சமவாயத்திற்கு இணங்கி அதன் ஏற்பாடுகளை உட்சேர்த்து சிறுவர்கள் மற்றும் இளையவர் தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2020 செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு மற்றும் காப்பீடுகள் தேவையான பிள்ளைகள் தொடர்பாக வழக்கு விசாரணைகளுக்கோ அல்லது சட்டத்தை மீறுகின்ற பிள்ளையொருவருக்கு எதிராக வழக்கு விசாரணைக்காக நீதிமுறை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் மற்றும் பிள்ளைகள் தொடர்பாக வேறு விதத்தில் நீதிமுறை அதிகாரத்தை செயற்படுத்தும் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு இயலுமை கிட்டும் வகையில் சிறுவர் (நீதிமுறைப் பாதுகாப்பு) தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2015 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமூலத்திற்காக இரண்டு விசேட நிபுணத்துவக் குழுக்கள் மூலம் ஆராயந்து மேலும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமூலத்தில் குறித்த முன்மொழிவுகளையும் உட்சேர்த்து இறுதிச் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right