நவீன மற்றும் சமகால கலைகளுக்கான அருங்காட்சியகம் கொழும்பில்

By Nanthini

28 Jun, 2022 | 12:37 PM
image

(பொன்மலர் சுமன்)

வீன மற்றும் சமகால கலைகளுக்கான அருங்காட்சியகம், கொழும்பு கிரஸ்கட் போல்வர்ட் கட்டடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ளது. 

'சந்திப்புக்கள்' என்ற பதத்தினூடாக மக்களிடம் இந்த அருங்காட்சியகத்தை கொண்டு சேர்க்க ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் ஜோர்ஜ் கீற் ஸ்தாபனம் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூன்று சுழற்சிகளாக இடம்பெறும் அருங்காட்சியக அமைப்பின் முதல் சுழற்சி, கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் மே மாதம் 22ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ளது. இதில் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவுகள் தொடர்பான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தற்போது இதன் இரண்டாம் சுழற்சி இம்மாதம் 22ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 18ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படுகின்றது.

இதில் 1950ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான கலைப்படைப்புகளுக்கு இடையேயான ஆறு சந்திப்புகளை ஒன்றிணைக்கும் மற்றும் காட்சிகளை மாற்றியமைக்கும் விதத்தில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் பிரபல ஓவியர்களான ஃபிரி ரஹ்மான், காமினி ரட்னவீர, இஸ்மெத் ரஹீம், லகி சேனாநாயக்க ஆகியோரால் வரையப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை மாணவர்கள், பெரியவர்கள், சிறு பிள்ளைகள் என அனைவரும் சென்று, பார்த்து பயனடையும் வகையில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பெளர்ணமி மற்றும் பொது விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய தினங்களில் அருங்காட்சியகம் பொது மக்களுக்காக திறந்திருக்கும்.

இன்றைய இறுக்கமான சூழலில் சிறந்ததொரு அனுபவத்தை பெற விரும்புபவர்கள் இவ்வருங்காட்சியகத்தை சென்று பார்வையிடலாம்.

படங்கள்: எஸ்.எம். சுரேந்திரன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right