இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குநர் மிஷ்கின்

Published By: Digital Desk 5

28 Jun, 2022 | 01:02 PM
image

இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் 'டெவில்' எனும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

'சவரக்கத்தி' படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'டெவில்'. இதில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் மூலம் முன்னணி இயக்குநரும், நடிகருமான  மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தை மாருதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.

தமிழ் திரை உலகின் 'கருப்பு கண்ணாடி' இயக்குநர் என செல்லமாக குறிப்பிடப்படுபவர் மிஷ்கின். சினிமா மீது அளவற்ற பற்றுக் கொண்ட இவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே தருணத்தில் பாடகராகவும், பாடலாசிரியராகவும் பணியாற்றி இசை நுட்பத்தை வெளிப்படுத்தியவர். 

'அஞ்சாதே' படத்தில் இடம்பெற்ற 'கண்ணதாசன் காரைக்குடி..' என்ற பாடலின் மூலம் பாடகராகவும், 'சித்திரம் பேசுதடி' என்ற படத்தில் இடம்பெற்ற 'ஆகாயம்..' எனத் தொடங்கும் பாடல் மூலம் பாடலாசிரியராகவும் அறிமுகமான மிஷ்கின், தொடர்ந்து துள்ளலிசை பாடலுக்கும், பாச பிணைப்புடன் கூடிய பாடலுக்கும் பாடல்களை எழுதி, பாடி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறார். அவருடைய படத்தின் பின்னணி இசையில் பெரும் பங்களிப்பை வழங்கிய இவர், தற்போது ' டெவில்'  படத்தின் மூலம் இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார்.

இந்தப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றிருப்பதாகவும், நான்கு பாடல்களும் வித்தியாசமாகவும், ரசிகர்களை கவரும் வகையிலும் இருப்பதாகவும் படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right