சமரி அத்தப்பத்துவின் அதிரடியில் இந்திய மகளிர் அணியை வெற்றிகொண்டது இலங்கை மகளிர் அணி

By T Yuwaraj

27 Jun, 2022 | 10:18 PM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவுக்கு எதிராக ரங்கிரி, தம்புளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தப்பத்துவின் அபார துடுப்பாட்ட உதவியுடன்  இலங்கை  7 விக்கெட்களால்  வெற்றியீட்டியது.

எனினும் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா தனதாக்கிக் கொண்டது.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 139 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது.

இந்தப் போட்டிக்கு முன்னர் 5 மகளிர் சர்வதேச இருபது 20 போட்டிகளில் 107 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்த சமரி அத்தபத்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்து அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினார். அத்துடன் இந்தியாவின் முழுமையான  தொட ர்   வெற்றியையும் தடுத்தார்.

ஆரம்பத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சமரி அத்தப்பத்து பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் 14 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவித்தார்.

நிலக்ஷ டி சில்வா பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 4 பவுண்டறிகளுடன் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

சமரி அத்தபத்து, நிலக்ஷி டி சில்வா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய துடுப்பாட்டத்தில் அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (39 ஆ. இ.), ஜெமிமா ரொட்றிகஸ் (33), ஸ்ம்ரிதி மந்தானா (22), சபினேனி மேகனா (22) ஆகிய நால்வரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடியபோதிலும் அவர்களது ஓட்ட வேகம் எதிர்பார்த்த அளவு அமையவில்லை.

ஹார்மன்ப்ரீத் கோர், ஜெமிமா ரொட்றிகஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இந்தப் போட்டியில் சமரி அத்தபத்து ஆட்டநாயகி விருதை வென்றெடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right