எம்.சி.ஏ. சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ் சம்பியன்

By Vishnu

27 Jun, 2022 | 07:31 PM
image

(நெவில் அன்தனி)

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்பட்ட 29ஆவது சிங்கர் - MCA சுப்பர் பிறீமியர் லீக் 2022 கிரிக்கெட் போட்டியில் ஜோன் கீல்ஸ் சம்பியனானது.

MCA மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இருபது 20  கிரிக்கெட்  இறுதிப் போட்டியில் மோட் எஞ்சினியரிங் அணியை ஜோன் கீல்ஸ் 4 ஓட்டங்களால் வெற்றிகொண்டு சிங்கர் கிண்ணத்தை சுவீகரித்தது.

கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இறுதிப் போட்டியில் சச்சித் ஜயதிலக்க குவித்த அபார அரைச் சதம், அணித் தலைவர் இஷான் ஜயரட்னவின் துல்லியமான பந்துவீச்சு என்பன ஜோன் கீல்ஸ் சம்பியனாவதற்கு பெரிதும் உதவின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஜோன் கீல்ஸ் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது.

ஜோன் கீல்ஸ் ஆரம்பத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. 5ஆவது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் ஜோன் கீல்ஸ் 100 ஓட்டங்களைப் பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஆனால், கெவின் பண்டார, சச்சித்த ஜயதிலக்க ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 59 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி 100 ஓட்டங்கள் கடப்பதை உறுதிசெய்தனர்.

கெவின்   பண்டார 33 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 42 ஓட்டங்களையும் சச்சித்த ஜயதிலக்க 39 பந்துகளில் 7 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் குவித்தனர்.

பந்துவீச்சில் அருள் பிரகாசம் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திசான் விதூசன் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சந்தகான் பத்திரண 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

157 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மோட் எஞ்சினியரிங் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

மோட் எஞ்சினியரிங் அணியில் பலர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்ற போதிலும் அவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் கணிசமான ஓட்டங்களைப் பெறத் தவறியதால் அவ்வணி தோல்வி அடைந்தது.

அணித் தலைவர் துஷான் ஹேமன்த 20 பந்துகளில் 7 சிச்கஸ்களுடன் 54 ஓட்டங்களையும் சசிந்து நாணயக்கார 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இஷான் ஜயரட்ன 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மலிங்க அமரசிங்க, சச்சித்த ஜயதிலக்க ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் விருது சச்சித்த ஜயதிலக்கவுக்கு வழங்கப்பட்டது.

சுற்றுப் போட்டியில் சமீன் கந்தனஆராச்சி (சம்பத் வங்கி) சிறந்த துடுப்பாட்டக்காரர் விருதையும், மாதவ வர்ணபுர (HNB) சிறந்த பந்துவீச்சாளர் விருதையும் வென்றெடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right