மின்கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் யோசனைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

By Vishnu

27 Jun, 2022 | 07:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனைகள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளன.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் பொது மக்களின் அபிலாசைகள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனைகள் இன்று முதல் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் www.pucsl.gov.lk  என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

பொது மக்கள் தங்களின் யோசனைகளை 3 வார காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய முடியும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில்  27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின்னுற்பத்திக்கான கேள்வி ,மின்னுற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் தற்போதைய நிலைவரத்திற்கமைய மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள யோசனை முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

மின்கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள் இன்று பத்திரிகைள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும்.

பொது மக்கள் தங்களின் யோசனைகளை 21 நாட்களுக்குள் பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தள பகுதியில் பதிவேற்றம் செய்ய முடியும்.

30 முதல் 60 வரையான மின் அலகினை பயன்படுத்தும் மின்பாவனையாளர்களுக்கான கட்டணம் நூற்றுக்கு 835 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சாரச சபை முன்வைத்துள்ள யோசனையை ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் தரப்பினரது மின்கட்டணத்திற்கு அரசாங்கம் நிவாரண அடிப்படையில் ஏதேனும் திட்டங்களை வழங்க வேண்டும் என்பதை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஒருமின் அலகிற்காக அறவிடப்படும் கட்டணத்தை 32 ரூபாவாக நிர்ணயிக்குமாறு மின்சார சபை முன்வைத்த யோசனை மறுசீரமைக்கப்பட்டு,28 ரூபாவாக நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொது மக்களும்,மின்சார சபையும் நிதி நெருக்கடியினை எதிர்க்கொள்ளாத வகையில் மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்ள ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right