எரிபொருள் விநியோகம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட பொய்யான தகவல்களே நெருக்கடிக்குக் காரணம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 

Published By: Vishnu

27 Jun, 2022 | 05:05 PM
image

(நா.தனுஜா)

எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எரிபொருள் விநியோகம் தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடுவதைவிடுத்து அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொய்யான நம்பிக்கை பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் கடுமையாச் சாடியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் அச்சங்கம், தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும் அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தவறான தகவல்கள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைமீது ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் கடுமையான விசனத்தை வெளிப்படுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் காரணமாக குறிப்பாக எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு என்பன குறித்தும் அவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை, நாட்டு நிர்வாகம், வணிக செயற்பாடுகள் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றின்மீது ஏற்பாடுத்தியுள்ள தாக்கம் குறித்தும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். இது நாட்டின் சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

அரசாங்கம் கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறுபட்ட அறிவிப்புக்களை வெளியிட்டுவந்துள்ளது.

இருப்பினும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மூலம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தவறான நம்பிக்கையினால் அவர்கள் இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.

அடுத்த தடவை நாட்டிற்கு அவசியமான எரிபொருள் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ள திகதி அறியப்படாதவொன்றாக இருக்கின்றது. அதுமாத்திரமன்றி ஏற்கனவே கையிருப்பிலிருந்த நிதி ஏன் உரியவாறு கையாளப்படவில்லை என்பதற்கான சரியான விளக்கமெதுவும் வழங்கப்படவில்லை.

 அரசாங்கத்தின் அறிவிப்புக்களால் ஏற்பட்ட விளைவுகள் இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவுகின்ற குழப்பநிலையையும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் அவநம்பிக்கையையும் காண்பிக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய தற்போதைய நிலை குறித்து அரசாங்கம் உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய நேரத்தில் வழங்கத்தவறியமை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். 

பெற்றோல், டீசல் மற்றம் மண்ணெண்ணெய் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் சுமார் 24 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் எரிபொருள் நிரப்பு நிலைங்களில் காத்திருக்க வேண்டியிருப்பது பாரிய நேரவிரயத்தைத் தோற்றுவித்துள்ளது. அதுமாத்திரமன்றி இந்த எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் சமூகங்களுக்கு இடையில் அமைதியின்மையையும் வன்முறைகளையும் மக்கள் - பொலிஸாருக்கு இடையிலான முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளன.

எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், கறுப்புச்சந்தையில் எரிபொருள் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளால் மிகக்குறைந்தளவிலான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு இம்மாதம் முதல் வாரத்தில் எரிவாயுக் கொள்கலன்கள் கப்பல் மூலம் நாட்டை வந்தடையும் என்று கூறப்பட்டிருந்த போதிலும், வீதிகளில் எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது. 

எரிபொருள் தட்டுப்பாடானது உணவுற்பத்தி மற்றும் விநியோகம் உள்ளடங்கலாக பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகள்மீதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கின்ற இலங்கையின் ஏற்றுமதிகள்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் நீதி நிர்வாக செயற்பாட்டின்மீது எதிர்மறைத்தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளது.

மேலும் அனைத்து மக்களுக்கும் நியாயமானதும், சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் தவறியிருக்கின்றது.

 இவ்வாறானதொரு பின்னணியில் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்குரிய திட்டங்கள், எரிபொருள் நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான செயற்திட்டம் என்பன பற்றிய உண்மையானதும், சரியானதுமான தகவல்களை உரிய காலப்பகுதியில் மக்களுக்கு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து அனைவருக்கும் நியாயமானதும் சமமானதுமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதையும், பொதுப்போக்குவரத்து சேவை பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

 அதுமாத்திரமன்றி தற்போதைய சூழ்நிலையில் பாரதூரத்தன்மையையும், அதன் விளைவாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கக்கூடியவகையில் ஏற்படத்தக்க பின்விளைவுகளையும் புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி, அரசாங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தோடு அரசாங்கத்தின்மீதான தேசிய மற்றும் சர்வதேச நம்பிக்கையை மீள உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களித்து...

2024-09-15 12:05:57
news-image

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்...

2024-09-15 11:59:35
news-image

ஹாலிஎல தனியார் காணியொன்றில் கைக்குண்டு கண்டெடுப்பு 

2024-09-15 11:42:22
news-image

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் நாட்டின் ஐக்கியத்துக்கு...

2024-09-15 11:44:05
news-image

அம்பன் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் நீரில்...

2024-09-15 11:07:09
news-image

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில்...

2024-09-15 10:46:05
news-image

மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை...

2024-09-15 10:20:20
news-image

அரசியல் நலன்களை அடைய சிலர் வன்முறை...

2024-09-15 09:52:57
news-image

4 கிலோ நிறையுடைய அம்பருடன் ஹம்பாந்தோட்டையில்...

2024-09-15 09:50:46
news-image

ஜனாதிபதித் தேர்தல் குறித்து தமிழரசு கட்சியின்...

2024-09-15 09:45:14
news-image

இன்றைய வானிலை 

2024-09-15 06:06:47
news-image

தனிநபர் வருமான வரிக்கட்டமைப்புத் திருத்தம் குறித்து...

2024-09-14 20:34:18