ஜூலை இறுதிப்பகுதியிலிருந்து நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு - அமைச்சர் ஹரின் நம்பிக்கை

By Digital Desk 5

27 Jun, 2022 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் வெகுவிரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் ஊடாக ஜூலை மாதத்தின் இறுதிப்பகுதியிலிருந்து பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக மீள முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் (27)  திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெகு விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்.

அரசியல்வாதிகள் உட்பட்ட சிலர் தொடர்ந்தும் நாட்டின் மீது குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பதானது சுற்றுலாத்துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்று சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று பலரும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர் பதவி விலகினால் இந்த நெருக்கடிகளை சமாளிப்பதற்கு தகுதியுடைய எவர் உள்ளனர்? பொறுப்பினை வழங்கும் போது அதனை ஏற்க மறுத்தவர்கள் இன்று அதற்கு முரணாக பேசுகின்றனர்.

தற்போது நாட்டை பொறுப்பேற்க தயார் என்று கூறுகின்றனர். ஆசையும் பயமும் கொண்ட நபர்கள் , 'நாயும் உண்ணாது. உண்பவர்களையும் உண்ண விடாது' என்பதைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் ஜூலை இறுதி காலப்பகுதியில் நாட்டிலுள்ள பிரச்சினைகள் சுமூகமடையத் தொடங்கும் என்று முழுமையாக நம்புகின்றோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த வாக்குறுதியை எமக்கு வழங்கியுள்ளார். இவ்வாறான நிலையிலேயே மக்களை வீதிக்கிறங்கி போராடுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றார். இவ்வாறு வீதிக்கிறங்கி போராடுவதால் மாத்திரம் ஓரிரு தினங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியுமா?

நாம் கோட்டாபய ராஜபக்ஷவிடம் சென்றுள்ளதாக சஜித் கூறுகின்றார். ஆனால் அவர் எந்தெந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லவிருந்தார் என்பதை நாம் அறிவோம்.

நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஒத்துழைப்பினை வழங்காமல் எமது கட்சி காலை வாரியதன் காரணமாகவே, நாட்டு மக்களின் நன்மை கருதி நாம் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதற்கு தீர்மானித்தோம்.

நாம் இன்றும் ஐக்கிய மக்கள் சக்தியினராகவே உள்ளோம். எம்மை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தேவை பலருக்கும் காணப்பட்டது.

ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவின் கட்சி அல்ல. அவர் அதன் தலைவர் மாத்திரமே. எனவே அவரால் எம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பல முக்கிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் அடுத்த மாத இறுதியிலிருந்து பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக மீள முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right